ஆதலினால் காதல் செய்வீர்
உயிர்க்குலம் முழுவதும் காதலினால் வளர்வது, காதல் செய்து வாழ்வது; காதலே உயிரோட்டமாக்க் கொண்டு பரிணாம முறுவது.
காதலைப்பாடாத மகாகவி என்று உலகெங்கிலும் ஒருவனைத் தேடினாலும் கிடைக்கமாட்டான். அகமும் புறமும் என்று வாழ்வை இரு வகுப்பாக்கித் தொன்னெடுங் காலமாக் காதலைப் போற்றி வளர்த்து வரும் தமிழ்க் கவி மரபில் வந்த பாரதி காதலைப் போற்றும் முன் வரிசையில் நிற்கின்றார்.
“சிலதி னங்க ளாருயிர்க்கமு தாகியே
செப்பு தற்கரி தாக மயக்குமால்
திலத வாணுத லார்தரு மையலாந்
தெய்வி கக்கன வன்னது வாழ்கவே“
என்று வாழ்த்தினார்.
காதல் என்ற பெயரில் கடைகெட்ட காமத்தையோ, உடல் வேட்கை எனும் அவியாச்சதைச் சுகமாகிய இழிதீயையோ அவர் வேண்டவில்லை.
சுயசரிதையிலே தெளிவாய் அதனைச் சுட்டிக்காட்டுகிறார்.
“வயது முற்றிய பின்னுறு காதலே
மாசுடைத்தது, தெய்விக மன்று காண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
எண்ண முஞ்சிறி தெ ன்றதக் காதலாம்;’’
“சந்திரிகையின் கதை“ என்ற தமது படைப்பில் அக்கதையில் வரும் கோபாலய்யங்கார் என்ற பாத்திரம் “காதலாவது உருளைக் கிழங்காவது!“ என்று நையாண்டி செய்யும் வீரேசலிங்கம் பந்துலு என்ற பாத்திரத்திற்குப் பதில் சொல்வது போல் பின்வருமாறு பேசுகிறது.
“காதலென்பது தேவலோக வஸ்து. இவ்வுலகத்து வாழ்க்கை மாறிய போதிலும், அது மாறாது சாவித்ரியும் சத்யவானும், லைலாவும் மஜ்னுவும், ரோமியோவும் ஜூலியத்தும் கொண்டிருந்த அந்த வஸ்துவுக்குக் காதல் என்று பெயர். அது அழியா நித்யவஸ்து, ஹிமய மலை ,கடலில் மிதந்த போதிலும் காதல் பொய்த்துப் போகாது“
இதை வெறும் ஒரு பாத்திரப்படைப்பின் திறன்காட்ட எனவோ , கோபாலய்யங்காரின் மதிமயக்கமாகவோ எவராவது கருதிவிடப் போகிறார்கள்; தன் கருத்தும் அதுதான் என்று வெளியிடும் உத்தேசம் பாரதிக்கு வந்திருக்க வேண்டும். எனவே தன் கூற்றாக கதைக்குள் நுழைந்து பேச ஆரம்பிக்கிறார்.
“காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத்தீயின் போக்கை ஒத்த்து. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது தெய்வீகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்க வேண்டும். மற்றபடி, மனிதர் தண்ணீர் விட்டு அணைப்பது என்பது சாத்தியமில்லை.“
பாரதியின் கவிதைகள், உரைநடை என்ற எழுத்துக்குவியல் முழுவதும் ஆழ்ந்து படிக்கின்றபோது சத்தியம் என்ற எரிமலைச் சீற்றமும், பக்திக் குழைவும் மேலேறு மேலேறு என்ற விடுதலைத் தேட்டமும், சக்திக் கொந்தளிப்பும், ஆழ்ந்த காதல் வசம் என்ற பின்னணி கொண்டிருப்பது புலப்படும்.
பாரதியின் பக்திக்கு வெளியீடே காதல்தான். பாரதி தெய்வங்களைக் காதலித்தவர்.
சில நாட்கள் பாட்டெழுத வராத நிலையிலே திணறிய சமயத்தில் மீண்டும் பாடல் வரும்போது கலைமகள் ப்றிய பாடிய “ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தில்“ எடுத்த எடுப்பிலேயே ஒரு காதலன் கதறுவதுபோல் பாரதி கதறுகிறார்.
“எங்ஙனம் சென்றிருந்தீர் - என
தின்னுயிரே யென்றன் இசையமுதே“ அடுத்து
மூன்றாவது பாடலில் மீண்டும்
கண்மணி போன்றவரே? இங்குக்
காலையு மாலையுந் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் - சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்
வண்மையி லோதிடுவீர்!...“ என்றார்.
திருவேட்கை என்ற லக்ஷ்மிப் பிரார்த்தனையிலோ வெளிப்படையாகவே சொல்லி காதல் விண்ணப்பமே தந்துவிடுகிறார்.
மலரின் மேவு திருவே - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யு முகமும் - காண்பார்
நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக.
களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம்வேண்டு கின்றேன் என்றவர்
அதே லக்ஷ்மி பிரார்த்தனையில் நான்காவது பாடலில்,
“மின்னு நின்றன் வடிவிற் - பணிகள்
மேவிநிற்கு மழகை
என்னுரைப்ப னேடி! - திருவே!
என்னுயிர்க்கோ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
நிகரிலாவது வாழ்வேன்;“ என்றார்
பக்தியைக் காதலாக மாற்றி, காதலையே பக்தியாக்கி, இந்திய பக்தி இலக்கிய மரபு கண்டிராத தீரமான புரட்சியை பாரதி அடுத்தடுத்துச் செய்தார்.
பெண் தெய்வங்களை அச்சம் தரும் வடிவில், அல்லது அருள்மிகுந்த தாய் வடிவில் மட்டும் நிறுத்திப் பாடிய பாடலே இந்திய பக்தி இலக்கிய மரபில் உண்டு. அவர்களைக் காதலி களாக்கிக் காணும் நெஞ்சுரம் எவருக்குமில்லை.
தமது மூன்று காதல் பாடலில்
“ஸரஸ்வதி காதல்“ பற்றி எழுதுகையில்
.........................
நாடி யருகணைந்தாள், பல
ஞானங்கள் சொல்லி யினிமை செய்வாள்“ - இன்று
கூடி மகிழ்வ“ மென்றால், - விழிக்
கோணத்தி லே நகை காட்டிச் செல் வாளம்மா!
என்றும் அடுத்த பாடலிலே
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை
ஏற்று மனமகிழ்ந்தே அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய்“ என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாளம்மா!
என்றும் கலைமகள் காதலில் கரைகிறார் பாரதி,
இரண்டாவது பாடலான லக்ஷ்மி காதலில்-
அந்தத் தினமுதலா- நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா!
புன்னகை செய்திடுவாள்- அற்றைப்
போது முழுது மகிழ்ந்திருப்பேன்; சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள், அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்
மூன்றாவது காதலான காளி காதலில் தான் இந்திய இலக்கிய மரபை அவர் மீற முடியாதவராகிறார்.
“பின்னொ ரிராவினிலே - கரும்
பெண்மை யழகொன்று வந்த்து கண்முன்பு;
கன்னி வடிவமென்றே-களி
கண்டுசற் றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
ஆதிப் பராசக்தி தேவியடா!“ என்று தம் காதல் நோக்கின் கதவை மூடிவிடுகிறார்.
கண்ணனைக் கண்ணம்மாவாக்கிக் காதல் கொண்டு மகிழ்ந்ததை பலர் எத்தனையோ முறை சொல்லியும் எழுதியும் வியந்து விட்டனர். எனினும்,
கண்ணம்மா என்றதும் -
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொலும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனை யே என்றன் சித்தமே!
எனப் பக்திக் காதலின் சிகரம் தொட்டதை நம்மால் மறக்கவே முடியாது .
“வள்ளிப்பாட்டு “ பாடலில் தாமே முருகனாகி பாரதி அனுபவித்த தெய்வப் பரவசம், மானுடக் காதல் அனுபவங்களின் தொகுதியாகவே மாறுகிறது.
இலக்கிய மரபு அதிர்ச்சியுறும் வண்ணம் புதிய அனுபவ விரிவுகளுக்குச் செல்கிறார் பாரதி.
வட்டங் களிட்டுங் குள மகலாத
மணிப் பெருந்த தெப்பத்தைப் போலே - நினை
விட்டு விட்டுப் பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை இரவியைப்
போன்ற முகத்தாய்! - முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம் இட்டுனைச்
சேர்நதிட வந்தேன்
என்று ஆண்மைச் செருக்குடன் பக்தியில் கலக்கிறார். இங்கு அவர் பயன்படுத்தும் சொற்கள், காமக் குறியீடுகளாகவே காணப்பட்டாலும் பாடல் முடிவில் கிடைக்கும் முழுமை விளைவு (Total effect) ஆத்ம சங்கமமாகவே இருக்கும் அதிசயம் தான் நமது பார்வைக்குரியது.
அதே வள்ளிப்பாட்டின் முந்தைய விருத்தத்தில் வள்ளியைப் பற்றி வர்ணிக்கும் போது
நின்றன் பிள்ளைக் கிளிமென் குதலையிலே மனம்
பின்ன மறச்செல்ல விட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ் செல்வமே!“
என்று கோர்க்கும் சொற்கள் அவர் அப்புறம் எழுதிய உடற்கலப்பின் கொச்சைத் தன்மையை அடித்துச் சென்று விடுகின்றன.
காதல் பற்றி எவ்வித களங்கமுமற்ற மேலான கருத்து பாரதிக்கு உண்டு.
“நாட்டு வணக்கம்“ பாடத் தொடங்கியதுமே அவருக்கு வரும் வரிகள்-
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே“ என்று தான் பிறக்கின்றன.
தம் அன்னையர் யாவரும் காதலராயிருந்திருப்பர் என்பதில் அவருக்கு நாணமோ ஒதுக்கமோ வரவில்லை.
அவர்-
கன்னியராகி நிலவினி வாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை - யாடி இல்
போந்ததும் இந்நாடே
என்று பாடுகிறார்.
காதல் மிருகத்தை மனிதனாக்குகிறது; மனிதனைத் தேவனாக்குகிறது; தேவனைத் தெய்மாக்குகிறது. போ கியை யோகியாக்குவதும், சுயநலமியைத் தியாகியாக்குவதும் காதல் தான்.
எந்த வெற்றி பெற்ற மனிதனின் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பாள் என்ற முதுமொழி வெறும் வார்த்தையில்லை.
ஒருத்தி மீது கொண்ட காதலும், அவள் காட்டிய காதல் எதிரொலியும் தான் ஒரு மனித உள்ளத்தில் கற்பனை செய்ய முடியாத பேராற்றலை உருவாக்குகின்றன.
இங்கிலாந்தில் காதலுக்காக அரச பதவி யை ஒதுக்கிவிட்டு முடிதுறந்த எட்டாம் எட்வர்டும் கிளியோபாட்ராவின் காதலுக்காக ரோம சாம்ராஜ்யத்தையே இழக்கத் தயாரான ஆண்டனியும் காதல் மகிமையையே பேசினர்.
பாரதி, காதல் தரும் ஆற்றல் பற்றிப் “பெண்கள் வாழ்க“ என்ற பாடலில்,
“போற்றி தாய்“ என்று தோள்கொட்டி யாடுவீர்.
புகழ்ச்சி கூறுவீர் காதற்கிளிகட்கே,
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்.
நுண்ணுடைப் பெண்ணொ ருத்தி பணியிலே
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்ட்டா!
போற்றி தாய் என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்,
காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே“
என்றார்.
குயில் பாட்டில் கன்னிக் குயிலொன்று ஒரு காவிடத்தில் பாடும்போது கேட்டு அந்த இன்னிசைப் பாடலில் பரவசமாகி, மனித உருநீங்கிக் குயிலுருவம் வராதோ என்று ஏக்கம் கொண்டு-
“இனிதிக் குயிற்பேட்டை யென்றும் பிரியாமல்
காதலித்துக் கூடி களியுடனே வாழோமோ?
நாதக் கனவினிலே நம்முயிரைப் போக்கோமோ?
என்ற அளவிற்கு போய் விடுகிறார்.
அடுத்து குயிலின் பாட்டு தொடர்கிறது.
காதல், காதல், காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்.
காதல்தான் உயிர். காதல் தான் ஜீவாதாரம், அது போனால் மரணம் என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தவர் பாரதி.
சுயசரிதையில் காதல் பெருமையை மேலும் சொல்ல முனையும் போது அவர்-
“காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர், உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்?
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம்; அதனாலே மரணம் பொய்யாம்“
என்றார்.
ஒரு மகாகவியின் எந்தப் பார்வையையும் ஒரே பக்கம் சார்ந்ததாகக் கருதி விடக்கூடாது.ஒரு பாடல் புனையும் போது அதன் பலபக்கப் பரிமாணங்கள் இணைந்தே அப்பாடல் உருவாகிறது.
காதல் என்ற சொல்லை அவர் பயன்படுத்துவது கண்ட கண்ட பெண்களுடன் எல்லாம் கொண்ட மனைவியை மறந்து அல்லது காதலித்த ஒருத்தியை உதறிவிட்டுப் பார்க்கிற பெண்களையெல்லாம் காதலிக்கிற ஈன ஆசாரத்துக்கு, அவர் அனுமதி வழங்கியதாகப் பொருள் கொள்ளலாகாது.
காதல் பற்றி இவ்வளவு ரஸானுபவத்தோடு பாடிய பாரதிக்கு தமிழ் மரபான கற்பைப் பற்றியும் அசைக்க முடியாத பற்றுறுதி உண்டு.
நினைப்பது ஒன்று; எழுதுவதும் சொல்வதும் ஒன்று; வாழ்ந்த விதம் ஒன்று எனச் சிதறுண்டதல்ல பாரதியின் ஆளுமை.
அவர் ஒ ரே மனைவியுடன் வாழ்ந்தவர்; தம் பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குப் பின் தம் மனைவியையே உயிருக்குயிராக்க் காதலித்தவர்.
அவர் வெறும் உபதேசியல்ல.
அல்லது மனம் புழுத்துச் சென்ற மார்க்கமெல்லாம் தான் அறமென்றும் கற்புநிலையைப் பழுதென்றும் புலைநீசப் பொய்யென்றும் மனங்கூசாமல் கூவி அறையத்துணியும் பேதையுமல்ல.
மாறாக-
“காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்”
என்ற மாபெரும் காதலனாகிறார்
“அந்திப் பொழுது“ பாடலில்
காதலி னாலுயிர் தோன்றும் - இங்குக
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காதலி னாலறி வெய்தும்; - இங்கு
காதல் கவிதை பயிரை வளர்க்கும்
ஆதலி னாலவள் கையைப் - பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி“
என்று அடுத்த வரிகள் போட்டார்.
கைகளைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் இதே காதலனா வள்ளி ப்பாட்டில் வட்டங்களிட்டும் குளமகலாத மணிப்பெருந்தெப்பத்தைப் போலே - அவள் மேனிதனை விடலின்றி
இருந்தவன் என்று நமக்கு மெய்சிலிர்க்கிறது.
அடுத்த வந்த காதலியின் பாட்டில் பாரதியின் மனம் மாசிலாத மணி விளக்காய் ஒளி வீசுகிறது.
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்;
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்
காத லென்பதோர் கோயிலின் கண்ணே
அவரது கோயில் காதற்கோயில். அங்கு எரிவது ஞான விளக்கு; ஏற்றியது அவர் காதலி. பாரதியின் காதலில் இன்பத்துக்கு இடமுண்டு. இன்பத்திலேயே புதைந்து அமிழ்ந்துவிடும் அந்தகாரத்துக்கு இடமில்லை.
பாரதியின் காதலில் அடிமைக்கு இடமில்லை. ஆணுக்குப் பெண் ஆகும் அடிமைக்கும் சரி பெண்ணுக்கு ஆண் ஆகும்.அடிமைக்குச் சரி, அவர் காதல் இரண்டிற்கும் இடம் தராது.
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும்
என்று மேன்மையை அவாவியவர் பாரதி.
பெண் பத்தினியாக இருக்க வேண்டும் என்றால் ஆணும் கற்போடு இருப்பது அவசியம் என்று உணர்ந்து கொண்டவர் பாரதி.
எனவேதான் தமிழிலக்கியத்தில் ஆண் கற்பை திருவள்ளுவருக்குப் பின் ஒரு விதியாக்கி வைத்தார் பாரதி.
பெண்கள் விடுதலைக் கும்மியில்-
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்“
என்று நிலைநிறுத்தினார்.
தமது கொள்கைக்கு ஔவையாரின் வெண்பா ஒன்றை மேற்கோள் காட்டினார்
“ஈதலறம் தீவினை விட்டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும் காதலிவர் கருத்தொருமித் - தாதரவு பட்டதே இன்பம்; பானை நினைந்திம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு“ என்பது அவ்வெண்பா.
தமது மாதர் கட்டுரையில் தொடர்ந்து அவ்வெண்பாவின் பெருமையை விளக்கிச் செல்லும் மகாகவி.
“ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும், வாக்காலு்ம், செய்கையாலும் கற்பு நெறி தவறாமல் நித்தியப் பற்றுதலுடையோராய் மன ஒருமையெ்தித் தம்முள் ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பமே இன்பமெனத்தகும் என்று ஔவையார் கூறுகிறார்“- என்று
அதற்கு மற்றுமொரு விளக்கம் தருகிறார்.
பெண்மை கவிதையில் ஒரு முறைக்குப் பலமுறை மனைவியின் மீது கொள்ள வேண்டிய காதலை பாரதி வலியுறுத்துகிறார்.
தண்மை இன்பநற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் ஸதியென்ற நாமமும்
அன்பு வாழ்கென்றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகாட்டி வாழ்த்துவோம்
……………………….
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
………………………
பெண்ண றத்தினை யாண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வி்ல்லை
கண்ணைக் காக்கு மிரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா
காற்று என்ற வசன கவிதையிலே பாரதி இரண்டு துண்டுக் கயிறுகளுக்குப் பெயர் கொடுத்துப் பேசவிடுகிறார் காதல் பேச்சு
ஒன்று ஆண்: மற்றொன்று பெண்: கணவனும் மனைவியும்.
அவை யிரண்டு ஒன்றையொன்று காமப் பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும் வேடிக்கைப் பேசிக் கொண்டும் ரஸப் போக்கிலேயிருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்
ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர்
பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)
கந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த ஸந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.
“என்ன கந்தா, ஸௌக்கியந்தான? ஒரு வேளை, நான் ஸந்தர்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ? போய் மற்றொரு முறை வரலாமா? என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்- “அட போடா வைதீக மனுஷன்! உன் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா? என்றது.
இப்படியே துண்டுக் கயிறுகளான கந்தன் வள்ளி சல்லாபம் எழுதிச் செல்லும் பாரதி பின்னால் -
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான், உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்? இளமையின் ஸல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?“-
என்கிறார், அசையாப் பொருள்களையும் காதலினால் அசைவித்துப் பார்க்கவே அவர் மனம் விரும்புகிறது. ஆனால் அங்கும் கூட கற்பு நெறியையே வற்புறுத்துகிறது.

No comments:
Post a Comment