ஒலியும் உணர்வும்
ஒலி அறிவு, உணர்வுகளுக்குத் திறவுகோல் , இளமைப் பருவத்திலிருந்தே பாரதிக்கு ஒலியறிவு மிக நுட்பமாக இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டு, பள்ளியில் அவர் படிக்கும் போது வீட்டுக்கணக்கு போடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். கணக்கு என்ற சொல் ஒலி அவர் கற்பனையைக் கிளறிவிட்டது.
கணக்கு பிணக்கு, ஆமணக்கு என்று சந்தமாக ஒரே ஒலியமைப்புடைய சொற்களை அவர் வாய் முணுமுணுத்ததாக அவரைப் பற்றிய நினைவுக்குறிப்புகளில் ஒரு சம்பவம் வருகிறது.
பாரதியின் மனம் தன்னைச் சூழ்ந்திருந்த உலகில் ,அவ்வப்போது தோன்றிய ஒலிக் கூட்டங்களில் தோய்ந்து ஈடுபட்டிருக்கிறது, ஓசை தரும் இன்பம் உயிரில் சுவை சேர்ப்பதை பாரதி அற்புதமாய் அனுபவித்திருக்கிறார்.
அதனால் தான்
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீரோசை அருவி யொலியினிலும்,
நீலப் பெருங்கடலெந் நேரமும் தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும் என்று தம் மன ஈடுபாட்டைக் 'குயில்பாட்டு' கவிதையிலும் கூறிச் சென்றவர், சற்று நின்று கிராமங்களைத் திரும்பிப் பார்த்து,
' ஏற்ற நீர்ப்பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் கண்ண மிடிப்பார்தஞ் சுவை மிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்'
தம்மை ஒலியின்பம் தீண்டிய அனுபவப் பதிவுகளைத் தொடர்ந்தார்.
பாரதியின் காலத்தில் கேட்ட ஒலிகளில் பல இன்று இல்லை.
ஏற்ற நீரின் பாட்டு கேட்பது அரிதாய் விட்டது. மோட்டார் பம்ப் வந்துவிட்டது.
நெல்லிடிக்கும் கோற்றொடியார் இன்று குக்குவென்று கொஞ்சும் ஒலியோடு இடிக்கிற வாய்ப்பை நெல் அரைக்கும் “ஹல்லர்“ கவர்ந்துவிட்டது. எனினும்,
வட்டமிட்டுப் பெண்கள் வகைகரங்கள் தாமொலிக்க்க்
கொட்டி யிசைந்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும்
நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும்...
கிடைக்கும் ஒலியின்பத்திற்கு அந்த பஞ்சம் வந்துவிடவில்லை.
கூர்ந்து கேட்டால் ஒலியின்பம் நெஞ்சில் செல்வமாக வந்து நிறைகிறது.
மனதின் தரித்திரமும், அதன் ஓயாக்கவலை என்ற உழற்சியும் மறைந்து ஒரு புதிய ஒளிப்பிழம்பு உதிக்கிறது.
தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச்
செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமோர்
உள்ளம் படைத்துவிட்டோம்!
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடு நற் காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானங் கொட்டுமிங்
வெட்டொலி யேன் கொணர்ந்தாய்?
என்று “நிலாவும் வான்மீனும் காற்றும்“ கவிதையில் பாரதி காற்றோடு செய்த உரையாடல் ஒரு துள்ளல் மகிழ்ச்சி தருகிறது.
அதை அடுத்தடுத்து வரும் வரிகளில் பாரதி எந்தெந்த ஓசைகளில் மனம் லயித்தார் என்று விவரம் புலப்பட்டு, நாமும் அந்த ஒலியின்பம் தற்போது பாய்ந்து காதில் விழுவது போல், நமக்குள் நாம்பா அனுபவிக்கிறோம்.
நண்ணி வருமணி யோசையும், பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்
எண்ணு முன்னே ‘அன்னக் காவடிப் பிச்சையென்
றேங்கிடு வான்குரலும்...
அடடா..
ஏதோ நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட ஒரு வீதியின் பின்னிரவு நேரம் என்ற உணர்வை இந்த வரிகள் எழுப்புகின்றன. பாரதி மேலே சொற்சித்திரங்களைத் தீட்டுகிறார்.
வீதிக் கதவை அடைப்பதும், கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி வசப்படுமோ?
எந்த திரைப்படமும் கொண்டுவர முடியாத ஓர் உணர்வு நிலையை, மனசின் உள்ளே ஒரு தூரக்காட்சியின் சில ஒலித்துணுக்குகளில் கொண்டு வந்து நிறுத்தும் போது பாரதியின் நோக்கம் புரிகிறது.
“ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?“ என்று வேறு ஒரு கவிதையில் சொன்ன சொல் இங்கே எதிரொலிக்கிறது. ஆனால்,
ஒலியின்பம் மனசுக்கு ரசமாக இருக்க வேண்டும்.
மென்மையாக இதமாக இருக்க வேண்டும் என்று தாழ்சுரத்தில் (Low Key) நாம் லயித்து நின்றுவிட்டால் அனுபவ விரிவுக்கு எல்லை வந்து விடுமே! அதற்குள் உழலும் சிறுமை நேர்ந்து விடுமே.
பாரதியின் மனம் கண்ட ஒலியின்பம் எல்லைக்குள் அடங்கியதல்ல. அங்கீகரிக்கப்பட்ட அளவில் சொகுசும் லயமும் போதுமென்று நிற்பதல்ல. இது அவரது இரண்டு கவிதைகளில் தெளிவாகப் புலப்படுகிறது.
ஒரு கவிதை “மழை“
இதில் மழையின் வேகம் சொல்லின் வேகத்தைவிடத் தீவிரமாக இருப்பதை பாரதி புலப்படுத்தும் விதம் புது மாதிரி.
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
திம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
மழையின் ருத்ர தாண்டவம் நம் மனக்கண்ணில் தெரிய ஒலியின்பம் ஓர் ஆவேசச் சுவை யோடு கொப்புளித்துக் கொண்டு நம்மிமுள் பாய்கிறது. எல்லாம் தீம்தரிகிட..தீம்தரிகிட என்ற சொல் தாண்டவத்தின் வேலைதான்.
பக்க மலைகள் உடைந்து - வெள்ளம்
பாயுது பாயுது பாயுது
என்று அடுத்த வரிகளைப் போடுகிறார்
பாயுது என்ற சொல் மும்முறை அடுக்கப்படும் போது, வெள்ளத்தின் வேகம் பிரம்மாண்டமாக ஏதோ ருத்ரகங்கையோ, பிரம்ம புத்திராவோ பாய்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.
தாம்தரிகிட
தீம்தரிகிடத் தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
என்று வரிகள் மேலே மேலே ஏறும் போது நமக்கு மூச்சு முட்டுகிறது.
மனம் ஓர் ஒலிவானில் அல்ல, ஒலி ஜனித்துத்துள்ளும் அண்ட வெளியில் நின்று அச்சம் தவிர்ந்த ஒரு பிரம்மானந்தப் பெரு விரிவில் களித்து நிற்கிறது.
வெட்டி யடிக்கும் மின்னலும் வீரத்திரைகளால் விண்ணை இடிக்கும் கடலும் தான் நம்மை மீண்டும் தரைக்குக் கொண்டு வருகின்றன.
கொட்டி யிடிக்குது மேகம்;
கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச் சட சட்டச் சட டட்டா-
என்று
தாளங்கள் கொட்டி ...என்று எழுதிச் சென்ற பாரதி அடுத்த சொற்களாக
கனைக்குது வானம் என்று ஒரு சொல் போட்டார்.
அசேதனப் பொருள் ஒன்றின் ஒலி, ஓர் உயிரின் ஒலியான கனைத்தல் என்பதாகத் தோற்றம் தருகையில் ..ஆஹா..என்ன உவமை இன்பம் என்ற குதூகலம் பிறக்கிறது.
பாரதிக்கு ஒலி ஓர் இன்பக் காட்சி; இதய விசாலத்திற்கு மற்றொரு சாவி,
மனம் ஆடும் தாண்டவத்திற்கு அது நட்டுவாங்கம் என்று தோன்றுகிறது.
அத்தோடு மகாகவி திருப்தி அடைபவரல்ல
அவர் உள்ளம் எல்லைகளை வெறுப்பது
பகுப்புகளை உதைத்தெறிவது
பகுப்புக்களிலேயே தலையாயது காலம்
காலம் தான் எல்லாவற்றையும் கற்பித்து, தோற்றம் வளர்ச்சி முடிவு என்ற ஒரு வளையம் போட்டுச் சுழற்றி விடுவது. அதுவுமற்ற ஒரு வியாபகம் பாரதிக்கு வேண்டும்.
வெடிபடு மண்டத் திடிபல தாளம்போட வெறும்
வெளியிலிரத்தக் கவியோடு பூதம் பாடப்
பாட்டின் அடிபடு பொருளின் அடிபடு மொலியில் கூடக்
களித் தாடுங் காளி! சாமுண்டீ! கங் காளி!
என்று ஊழிக் கூத்து கவிதையில் சக்தி தாண்டவத்தைக் கற்பனை செய்து தன்னையும் நம்மையும் கொண்டு அங்கே நிறுத்துகிறார்.
எப்படி எப்படி?பாட்டில் அடிபடும் பொருளோடு அடிபடும் ஒலி யோடு களித்தாடுகிறாள் காளி.
சொற்களின் சந்தம் திடுதிடு திடுதிடு திடுதிடு திடுமென நம்முள் இயற்கைச் சக்திகள் ஒருங்கிணையும் பிரம்மாண்ட ஒலியை எழுப்புகின்றன. பின்னர் அவையே தம்முள் மோதி மாளும் ஒளியை எழுப்புகின்றன.
சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியும் கோலங் கண்டே சாகும் காலம்
காலம் நம் கண்ணெதிரே ஒலி விளைவுகளுடன் (Sound Effects) சாவதை மகாகவி கூட இருந்து பார்த்து நமக்குக் காட்டுகிற கொண்டிருக்கிற அனுபவம் வருகிறது.
இந்தக் கவிதைக்கு அர்த்தம் உண்டா?
என்ன அர்த்தமற்ற கேள்வி! அர்த்தம் வேறு வேண்டுமா?
வெறும் ஒலிகளின் விளையாட்டில் காலத்தின் மரணம், அண்டங்களின் குலைவு,
பாழாம் வெளியும் பதறிப் போய் மெய் குலையம் - சலனச்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய
நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற ஆயிரமாயிரங் கோடி எம்.எம் விரிவு போதாதா?
பாரதிக்கு ஒலிகளாயினும் ஓசைகளாயினும் உவகை மட்டுமா? மேலே! ஒலிகள் அவருக்கு வேறு எத்தனையோ உணர்த்தும் குறியீடுகள்.
“பாம்பு பிடாரன் குழலூது கின்றான்
“இனிய இசை சோகமுடையது“ என்பது கேட்டுள்ளோம்
ஆனால் இப்பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோக ரஸந்தவிர்த்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்து சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது.
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
“தான தந்தத் தான தந்தத் தா- தனத்
தான தந்தன தான தந்தன தா-
தந்தனத்தன தநதனத்தன தா“
அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள்
சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான்
இதற்குப் பொருள் என்ன ?“ (வசன கவிதைகள்-சக்தி.6)
இதற்கு மேலே பாரதி பராசக்தி மகிமை கூறுவது போல பாம்புப் பிடாரன் இசைக்கு பொருள் கூறுகிறார்.
பாம்புப் பிடாரன் குழலோசை அவர் மனசில் சர்ச்சைகளைக் கிளப்புகிறது. கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறது.
“குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?
பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?
பாரதியின் மனமே அகக் கேள்விகளுக்கு விடையும் சொல்கிறது.
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது, குழல் தனியே இசை புரியாது
உள்ளம் குழலிலே ஒட்டாது
உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும்.
ஒலி அனுபவங்களில் தலையாயது ஒன்றை மகாகவியின் மனம் தேடிக்கொண்டே இருந்தது. அப்படி ஓர் ஒலி தரும் ஒரு மொழி கிடைத்து விட்டால்பெரிய வெற்றி என்று நாடிக் கொண்டே இருந்தது.
சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை நம் முள்ளே நிலைபெறச் சொல் வேண்டும் என்ற குறிப்புடன் தொடங்கும் “சொல்“ என்ற கவிதையில்
தேவர் வருகவென்று சொல்வதோ? ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
என்று முதல் தேடலை வெளியிடுகிறார், அடுத்து
ஓம் என் றுறைத்துவிடில் போதுமோ? அதில்
உண்மைப் பொருளறிய வாகுமோ?
தீமை யனைத்துமிறந் தேகுமோ? என்றன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?
என்று அடுத்த தேர்வினை (choice) ப் போடுகிறார்
அந்தப் பாடல் முழுவதும் தேடல் நீடிக்கிறது. வலிமை அமிழ்தம் என்றெல்லாம் சொற்கள் அவருக்கு கிட்டினாலும் அவர் தேடிய சொல் எதுவென்று அவருக்கே வேறு பாடலில் தான் பிடிபடுகிறது.
ஒரு மொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும்
ஒரு மொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்று
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒரு மொழி ஓம் நமச் சிவாய வென்பர்
ஹரி ஹரி யென் றிடினும் அஃதே ராம ராம
சிவ சிவ வென்றிட்டாலும் அஃதேயாகும்
தெளிவுறவே ஓம்சக்தி யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்”
என்ற தெளிவுக்கு வந்தவர் பல வரிகளுக்குப் பின் கோவிந்த சுவாமி கூற்றாக-
“சாமி நீ சாமி நீ கடவுள் நீயே
தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் சிவோஹ மென்று சாதிப்பாயே!“
என்று முடிவுக்கு வருகிறார்.
பாரதியின் உள்ளம் ஒலிகளில் திளைத்தது, உணர்வுகள் அதில் தி ளைப்பது கண்டது, எல்லா ஒலிகளிலும் ஆதார சுருதி ஒன்றுதான் என்று தெரிந்தது.
செவிகளைத் திறந்து வைக்கச் சொல்லி நம்மிடம் பாரதி சொல்லாமல் சொல்கிறார். பேதங்களிடையே ஓர் ஐக்கியம் காணச் செய்கிறார். சும்மா சொல்லவில்லை, தாம் கண்ட பின்பே சொல்கிறார்.
கண்டதையே, தம் அகக் காட்சியில் பெற்ற ஆனந்த லயத்தையே நமக்கும் சிபாரிசு செய்கிறார்.
மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம் என்ற அவர் வாக்கிற்கு வேறன்ன பொருள்?

No comments:
Post a Comment