Friday, 17 January 2014

ஆன்ம வொளிக்கடல்

. வாழ்வு முற்றும் கனவோ

    வாழ்வு என்பது உணர்திறனும் அறிவுக் கூர்மையும் உள்ள எந்தப் பெரியோரையும் அலசி ஒரு புதிர்போல மருட்டி விடை காணத் தூண்டுகிறது.
    ஒரு மகாகவியையோ ஒரு மாபெரும் எழுத்தாளனையோ ஒரு மாமனிதரையோ பூமியை விட்டு விலகிப் பறந்து, விண்வெளியிலிருந்து இந்த வாழ்வு என்ற காட்சியைக் காண்பது போல , அந்த நிகழ்ச்சி பற்றி ஒரு நறுக்குத் தெறித்த விமரம்சனம் கூற வைக்கிறது.
    ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர்  Life is a tale told by an idiot full of sound and fury, signifying nothing’ என்கிறார்.
    (வாழ்க்கை ஒரு மூடனால் சொல்லப்பட்ட ஒலியும் சீற்றமும் நிரம்பி
எ தையும் தெளிவுறுத்தாத கதை)
“மனித குலத்தின் வாழ்க்கை கீழான, முதிர்ச்சியற்ற இருண்ட வாழ்க்கைத் தரத்திலிருந்து தெளிவான மேலான வாழ்க்கைத்தரத்தை நோக்கி இடைவிடாது முன்னேறிக் கொண்டிருக்கிறது“ என்கிறார் லியோடால் ஸ்டாய்.
    பாரதிக்கும் கூட சிக்கலும் குழப்பமும் போராட்டமும் வீழ்ச்சிகளும் நிறைந்த இந்த வாழ்வு என்ற நிகழ்ச்சி பற்றிய கருத்து கூறும் தேவை ஏற்பட்டிருக்கிறது.
    வாழ்வு பற்றி, இந்திய வேதாந்தம், உபநிஷத் மரபுகள் கொடுது்த பகைப்புலத்திலிருந்து உதித்தவர் மகாகவி பாரதி.
    இந்திய சிந்தனை எவ்வளவு மேற்கத்திய மற்றும் சர்வதேசத் தாக்கம் பெற்றாலும் ஆணிவேர் போல் தன்னுள் ஓடிய மரபுகளையே பிரதிபலிப்பது.
    எனவே தான் பாரதியும் கூட தனது சுயசரிதையைத் தொடங்கிய முதல் இரு வரிகளிலேயே பளிச்சென்று ஒரு முத்திரை வைக்கிறார்.
    “வாழ்வு முற்றுங் கனவெனக் கூறிய மறைவ லோர்த முரைபிழை யன்று காண்“ என்கிறார்.
    மேலே அதற்கடுத்த வரிகளில் தாம் சொல்ல வருவது என்னவென்று தாம் முற்றிலும் அறிந்திருப்பதை விளக்குவது போல்
 “தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானு மறிகுவேன்“ என்கிறார்.
    இங்கே பொய்யா மொழியின் இரண்டு வாக்குகள் நம்முள் எதிரொலிக்கின்றன.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
நெருகுநல் உளனொருவன் இன்றில்லை என்றும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
    பாரதியால் வாழ்வு என்பது மாயை என்ற கருத்தை ஏற்க முடியவில்லை. அதே சமயம் எதிர்க்கவும் முடியவில்லை.
    இந்த உலகம் பொய்; அதைக் கடந்த பரநிலை ஒன்று உண்டு என்பது பாரதிக்கும் புரிகிறது, எனினும் பாரதி அதை நிதர்சனமாக அறியவில்லை.
    பாழ்க டந்த பரநிலை யென்றவர்
    பகரு மந்நிலை பார்த்தலன் பார்மிசை
என்று, தான் அதைக் கண்டதில்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறார் அவர்.
    எனினும் தன் மரபு சொல்லிவிட்டதே என்பதற்காக ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையும் பாரதிக்கு இல்லை.
……தன்னுடைய
அறிவி னுக்குப் புலப்பட லன்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்னைலி ச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்த்திலேன்
என்று தொடர்ந்து ஒரு தன்னிலைப் பிரகடனமும் செய்கிறார்.
    எவரோ சொல்லிவிட்டால் ஏற்றுக்கொள்வது என்பது பாரதிக்குப் பொருந்தாதது. அதைத் தீயது என்றே இங்கு பாரதி வலியுறுத்துவது அவரது ஆளுமை குறி்து தெளிவான வெளியீடு. அதைத் தீயபக்தி இயற்கை என்று வர்ணிக்கிறார்.
    அடுத்த பாடலில் அவரது வாழ்வு பற்றிய தெளிந்த கணிப்பீடு வெளிவருகிறது.
    “உலக லாமோர் பெருங்கன வஃதுளே
    உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும்
    கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
    கனவி னுங்கன வாகும்…“
என்கிறார்.
    உலகம் ஒரு பெருங்கனவு என்று கூறிய பாரதி மாயாவாதத்தை ஏற்றுக் கொண்டதாக உடனே பொருள் கொண்டு விடுவதற்கில்லை.
    தனது “பொய்யோ? மெய்யோ?“ என்ற பாடலில் அதைப்பற்றியே ஒரு விளக்கம் தருகிறார்.
    அதற்கு முன்னுரையாக சிறிது உரைநடை தரும் போது-
    “எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான். ஆனால், எல்லாருக்கும், எப்போதும், ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்கிறேன்-
    ஒரு செல்வர், கிழவனார்; ஒரு வேளை ஆஹாரம் செய்துகொண்டு, லௌகிக விஷயங்களைத் தான் கவனியாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு நியம நிஷ்டைகள் ஜபதபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோப நிஷத்தையும், பாராயணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறாமலிப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்த கிழவனாருக்குச் சரிப்பட்டு வரும்.
    ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை; தகப்பனில்லை; வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டு வந்தால்தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். இவன் மேற்படி சுந்தர காண்ட வழியைப் போய்ப் பிடித்தால் நியாயமாகுமா?
    இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. ஸந்யாஸிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி, இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை.
    குடும்பத்திலிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச் சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்து விட்டு போன வீடும் வயலும் பொய்யா?
    தங்கச் சிலை போலே நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக் கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தான்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள் ; அவள் பொய்யோ?
    குழந்தைகளும் பொய் தானா ? பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகளும் பொய்தானா?  நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?
    வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது…என்று முரசறைந்தது போல் சொன்ன பாரதி அதைத் தொடர்ந்து வந்த பாடலில்-
    நிற்பது, நடப்பது, பறப்பது, கற்பது, கேட்பது, கருதுவது என ஒவ்வோர் உயிர்களையும் உயிர் வினைகளையும் நீங்கள் தோற்ற மயக்கங்களா என்று வினவிவிட்டு
    வானகமே, இளவெளியிலே, மரச்செறிவே நீங்களெல்லாம்
    கானல்நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
    போனதெல்லாம் கனவினைப் போற் புதைந்தழிந்தே போனதனால்
    நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்யும் தானோ?
    என்று இயற்கைச் சக்திகளை நோக்கியும் கேட்கிறார்.
    அந்த பாடலின் இறுதியில் தான் மாயாவாதத்திலிருந்து மிகத் தெளிவான தர்க்கவியல் நெறிப்படி பாரதி மீண்டும் சொல்கிறார்.
(காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?)
    இந்த தர்க்கம் அறிவினால்அசைக்க முடியாததாகிறது.
    உலகம் ஒரு பெருங்கனவு; வாழ்வு முற்றும் பெருங்கனவு என்ற தூரத்துக் காட்சியிலே கண்ட பாரதி அகண்ட பரிபூரணப் பொருளில் அதைக் கூறினாலும்-
    காண்பதுவே யுறுதி கண்டோம் காண்பதல்லா லுறுதியில்லை
    காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்.
என்று இறுதி நிலையூன்றுகின்றன.
    அவை நிலையூன்றி நின்றுவிடவில்லை.
    பயணம் என்பது வாழ்வின் விதி என்று புரிந்து மேலே நடக்கின்றன.
    எங்கே? எத்திசையில்?
    இந்த வாழ்வும் பயணத்திற்கு ஒரு நோக்கம் வேண்டாமா? அதற்கொரு பயன் வேண்டாமா?
    பாரதி வாழ்வின் நோக்கம் பற்றித் தம் கட்டுரையில் கூறுகையில்
    “நமது தேசத்தின் குலதெய்வம், என்றும் விழித்திருக்கும் நித்யதேவன், நம்முடைய ஜீவன் இப்பொழுது வெளியதிகாரிகளுக்குப் பயந்து குருட்டாசாரம் என்ற தளைபூண்டு புழுதியில் கிடப்பதை நீக்கி, அதன் ஸஹஜ நிராகார நித்ய ஜயாமிர்த ரூபமான ஆத்ம ரூபத்தில் சேரும்படி அந்த ஈசன் கூறுகிறான். அடிமேல் அடியடித்து “ஆத்மாநம் வித்தி“ “தன்னை அறி“ என்கிறான்.
    காலத்துக்கு முந்தியே கிழவனாகி, குருட்டு நம்பிக்கை என்ற மூடச்சுமையால் முதுகு வளைந்து போய், தன்னைத்தான் நம்பாத கோழையே கேள்!
    மனுஷ்ய ஜாதி எப்போதும் முன்னே நோக்கிச் செல்கிறது; எப்போதும் விழிப்புடன் புது நிலங்களைத் தேடி மரணத்தை வெல்லுகிறது“ என்று மனித குலத்தின் ஓயா நடைப்பயணம் பற்றி தன் உட்காட்சி கொண்டு  அறிவிக்கிறார்.
    இந்த மனிதகுலம் செல்ல வேண்டிய பயணம் இதுவென்று உணர்ந்த பாரதிக்கு இந்த உலக வாழ்க்கையின் பயன் என்னவென்று தெட்டத் தெளிவாகப் புரிந்திருக்கிறது.
    “எப்போதும் நீங்காத, எப்போதும் மாறாத, எப்போதும் குறையாத இன்பமெய்தி வாழ்தலே“ என்பதே அது.
    அத்தகைய ஆனந்தத்தை எவரேனும் எய்தியிருக்கிறார்களா? நிரூபணமுண்டா? பாரதியே அதற்குப் பதிலளிக்கிறார்.
    “…இதுவரை மேற்படி நித்யானந்த நிலையை எந்த உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு“
    “கல்வி கற்று, பொருள் சேர்த்து, தவம் செய்து அரசாண்டு கனவு கண்டு கொலை செய்து பேசிச் சிரித்து ஆடிப்பாடி அழுது உழுது எல்லாப் பாடும் பட்ட மனிதகுலம் அந்த நித்யானந்த நிலையை ஏன் எட்ட முடியில்லை?
    இதோ பாரதியின் பதில்
    “உலகத்தில் தவிர்க்க முடியாத துக்கம் நிறைந்திருப்பதே, புத்தர் கண்டதாக கூறப்படும் நான்கு உண்மைகளில் முதலாவது.
    இங்ஙனம் தீராத்துன்பம் இருப்பதற்குக் காரணம் ஒவ்வோர் உயிரும் தன்னையேனும் பிற உயிர்களையேனும் பார்த்தும் கருதியும் ஓயாமல் அருவறுப்பும் பயமும் அடைக்கின்றனவாதலேயாம்.
    உயிர்களிடத்தில் இந்த அருவறுப்பு, அச்சம், சகிப்பின்மை, வெறுப்பு, கவலை இவை ஏற்பட என்ன காரணம்? பாரதி இந்த வினாவிற்கு விடை கூறும் போது ஒரு நடத்தையியல்மனோதத்துவ வல்லுநர் போன்று (Behavioral Psychologist) பதிலளிக்கிறார்.
    “(அவை ஏற்படுவதற்கு க் காரணம், அநாதி காலந் தொட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்து வரும் ஓயாத போராட்டத்தால் ஏற்பட்டு பழக்கந்தவிர வேறொன்றுமில்லை.
    பழக்கம் என்ற ஒரே சொல்லில் பிரமாதப் படுத்தாமல் அடித்து வீசிய பாரதி இதை எப்படி நீக்குவது என்பதையும் அறிந்து வைத்திருந்தார்.
    எல்லா வஸ்த்துக்களும் எல்லாக் குணங்களும ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப் பழக்கத்தை நீக்க வேண்டும்.“
    பழக்கமாயிற்றே! அவ்வளவு எளிதாக வேதாந்த ஞானத்தினால் நீக்கமுடியுமா? சாத்தியமா? இந்த ஞானம் கூட சித்தம் திடீரென எட்டிய ஒரு புதுமையல்லவா? பழமையைப் புதுமை வெல்ல முடியுமா? பழக்கத்தைப் புதுமை மாற்ற முடியுமா? பதிலுக்கு பாரதி பார்வைக்குப் போவோம்.
“மேற்படி ஞானம், உலகம் தோன்றி கால முதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும், கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும், கவிகளின் மனத்திலும்  உதித்திருக்கிறது; எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்துள் அதை அழுத்தாமல் வாயினால் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
    ஆயினும், பண்டிதர்களும் பாமரர்களுக்கும் ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அனுபவத்தி்ல் கொண்டு வர முடியாதபடி பழைய அஞ்ஞானம் தடுக்கிறது.
    அஞ்ஞானத்தை வென்றால் தீராத இன்பநிலையெய்தி வாழலாம் என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம் மூன்று பிரமாணங்களாலும் விளங்குகிறது.
    எனினும் அந்த அஞ்ஞானப் பிசாசையும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம் என்ற ஆறு யமதூத ர்களையும் வெல்ல மனிதனுடைய சித்தம் இடங்கொடுக்க மாட்டேனென்கிறது……..
    …….எத்தனை புதிய இன்பங்களைக் காட்டிய போதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல் மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக்குழியிலே கண்ணைத் திறந்து கொண்டு போய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.“
    இதுதான் கண்காணும் நிலை, இதிலிருந்து மீட்சி இல்லையா? மனிதன் இதிலிருந்து அகன்று தன் பேரின்பப் பயணம் மேற்கொள்ள வேறொரு வழி இல்லையா?
    பாரதியே கூறுகிறார்.
    “ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும் போது, அதை உறுதி அல்லது தைர்யம் என்று கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம்“.
    யோகம் என்றவுடன் ஆத்மவிசாரணை, யோகப் பயற்சி, ஜப தபங்கள் ஆகியன நமக்கு நினைவு வருகின்றன அதைத்தான் பாரதி குறி்பிடுகிறாரோ!
இல்லை மாறாக-
    “இதிலெல்லாம் இது வேகாது, உலகத்தாருடன் கூட எல்லா வகைளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்து கொண்டு உலக விவகாரங்களை நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடித்தன் மனத்தைக் கட்டக்கூடிய திறமையே பயன்தரக் கூடியது மற்ற முயற்சிகளெல்லாம் வீண்“ மற்றவை விண் என்றே அடித்துச் சொல்லிவிட்டார்.
    பாரதிக்கு வாழ்வின் பயனையும் இன்பத்தையும் மூடும் மனக் கவலை என்ற சாம்பலின் மீது மகா வெறுப்பு, அது வந்து கவியாதவாறு எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி கட்டளையிடுகிறார்.
    “நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
    அஞ்சி அயிர்வாழ்தல் அறியாமை“
என்ற விளக்கம் தந்த பாரதி தனக்கே கூட அதைச் சொல்லிக்கொள்கிறார்.
வையகத்துக் கில்லை மனமே நினக்கு நலம்
செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லால் அழியும் துயர்
    வெறும் சொல் போதுமா? வெறும் தெய்வ நம்பிக்கையோடு ஒருவன் திருப்தியடைந்து சும்மாயிருந்துவிடலாமா? அதற்கு உழைக்க வேண்டியதில்லை?
    "உழைப்பு எப்போதும்உண்டு. தெய்வத்தின் தலையிலே சுமையைப் போட்டுவிட்டு நாம் கவலை, பயம் என்ற இரண்டு நாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமல் ஸந்தோஷமாகப் பாட்டு பாடிக்கொண்டு நிலத்தை உழுவது நல்லது. அழுதுகொண்டே உழுதால் உழவுக்குக் கெடுதி;  மனதுக்கு ஸந்தோஷமில்லை. மடத்தன்மை தவிர வேறொன்றுமில்லை.“
    வாழ்க்கையைப்பற்றி இந்த கர்மயோகக் கண்ணோட்டத்தை வேறொரு வகையில் பாரதி விளக்குகிறார்.
    “தன்னை மறந்து வித்தையின் இன்பத்திலே தன் புத்தி முழுவதையும் செலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள் நாம் அழகோ அழகில்லையோ? வகுப்பு சரியாயிருக்கிறதோ இல்லையோ? நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதோ என்னவோ? பாதி ஆட்டத்தில் முன்னொரு முறை வயிற்றுவலி வந்து போல் வந்துவிடுமோ என்னவோ? என்று தன் சித்தம் குழம்பி போயிருந்தால் ஆட்டம் நேரே வராது“
    வாழ்வின் பொருள் பற்றிய ஐயம் “கண்ணன் என் சற்குரு“ என்ற பாடலில் பாரதியால் மிகத் தெளிவாக நீக்கப்படுகிறது.
.......நினை நன்று மருவுக! மைந்தனே! - பர
ஞான முரைத்திடக் கேட்பை நீ; - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
விண்ணை யளக்கு மறிவுதான்;
    உயிர்கள் வாழ்வு இவை பற்றிய ஓர் அற்புதக் கற்பனையை, அகண்டு விரிந்த ஞானானந்தப் பார்வையில் பாரதி அதே பாடலில் விளக்குகிறார்.
ஆதித் தனிப்பொரு ளாகுமோர் - கடல்
ஆருங் குமிழி உயிர்களாம் - அந்த
சோதி யறிவென்னு ஞாயிறு - தன்னைச்
சூழ்ந்த கதிர்க ளாயிற்றாம் - இங்கு
மீதிப் பொருள்க ளெவையுமே - அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் - வண்ண
நீதி யறிந்தின்ப மெய்தியே - ஒரு
நேர்மைத் தொழிலி லியங்குவோர்

    அந்தக் கடைசி வரியை ஒரு முறை அடிக்கோடிட்டுக் கொள்வோம். ஏனெனில் அதே பாடலில் மீண்டும் ஒரு முறை பாரதி அதை வலியுறுத்துகிறார். அவ்வாறு நேர்மைத் தொழிலில் இயங்குவோர் யார்?
    சித்தத்திலே சிவத்தை நாடி இங்கு சேர்ந்து களித்து. உலகாண்டு நல்ல மத்த மதவெங்களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகின்றவர் அவர்கள்.
-“இங்குநித்த நிகழ்வ தனைத்துமே - எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம்“
என்று கவலைகள் தள்ளியவராய் வாழ்பவர்கள்.
    அவர்கள் சும்மா இருப்பவர்கள் அல்ல; அந்த இன்பச் சோம்பலில் மதமதர்த்து மயங்கி போகச் சகதியில் உழலும் பன்றிகள் போல் மதிமயங்கி, செய்யும் தொழில் துறந்தவர் அல்ல.
“சோதி யறிவில் விளங்கவும் - உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற
நீதி முறைவழு வாமலே - எந்த
நேரமும் பூமித் தொழில் செய்து - கலை
ஓதிப் பொருளியல் கண்டு தாம் - பிறர்
உற்றிடும் தொல்லைகள் மாற்றியே - இன்ப
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில்
ஆடுதல், பாடுதல், சித்திரம் - கவி
யாதி யினை, கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்று நடப்பவர் - பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார்“
என்று அவர்களுக்கு ஒரு வரையறை தருகிறார்.
    வாழ்வின் பயனும் நோக்கமும் பற்றிய தெளிவினைக் குறித்து மகாத்மா காந்தி ஒரு முறை “தான் செய்ய வேண்டிய பணி இன்னது என்று இளமையிலேயே பிடிப்பட்டு விடுவது மிகவும் அதிருஷ்டவசமானது“ என்றார்.
    புகழ்பெற்ற அறிவியல் மேதை ஐவான் பாவ் லோவ் The main thing is to aspire to a goal while the goal itself is of secondary importance’’ என்றார்.
    (முக்கியமாக தேடத் தக்கது ஒரு லட்சியமே; அந்த லட்சியமே கூட இரண்டாம் பட்சமானதே எனினும் )
    பாரதிக்குத் தான் தேடவேண்டியது இன்னது என்ற தெளிவு உள்ளங்கையில் வைத்த மாணிக்கம் போல் இருந்த்து.
    புதிய ஆத்தி சூடியில் அதை வெடிப்புறச்  சொன்னார்.
“வையத் தலைமை கொள்“ என்று
    பாவ்லோவ் சொன்ன மாதிரி வையத் தலைமை என்ற லட்சிய நோக்கு போதும். வையத் தலைமை வருவதோ வராததோ  இரண்டாம் பட்சம்.
    வாழ்வு பற்றிய சகல பொருள் பிழிவையும் ஒன்று சேர்த்துத் திரட்டி தம் வசன கவிதையிலே சாராம்சமாக பாரதி சொன்னார்.
    சாவு நமது கண்ணுக்குத் தெரியும்;
        அறிவுக்குத் தெரியாது.
    வாழ்க்கை நமது கண்ணுக்கு தெரியும்;
        அறிவுக்கும் தெரியும்.
    வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்;
இதன் பயன் இன்பமெய்தல்.
    உள்ளம் தெளிந்திருக்க; உயிர்வேகமும் சூடும் உடையதாக;
        உடல் அமைதியும்; வலிமையும் பெற்றிருக்க;
    மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்.

சரி வாழ்வு இன்னதென்று புரிந்தது . ஆனால் அதற்கு எதிர்மாறான உணர்வு கள் மீண்டும் மனத்தில் வந்து மோதுகிறதே! மீள வழி தெரியவில்லையே. வாழ்வின் பொருள் கணத்துக்குக் கணம் சிதைந்து  சூனியம் நம்முள்ளே பரவுகின்றதே!
    நமது உள்ள நிறைவில் பகை என்ற கள்ளம் புகுந்த்தால் தான் அந்த உள்ள நிறைவு போய் விடுகின்றது என்பது பாரதி கட்சி.
    தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
        சேர்த்தபின் தேனாமோ? நன்னெஞ்சே!
    வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
        வாழ்வுக்கு நேராமோ? -  நன்னெஞ்சே!
என்ற வாக்குகளின் மூலம் ஒரு சுய பரிசீலனைக்கு நெஞ்சைத் தயார் செய்கிறார்.
    தாழ்வு பிறர்க்கெண்ண தான ழிவா னென்ற
        சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே!
என்று தமதுகட்சிக்கு  ஒரு சாஸ்திரப் பிரமாணமும் காட்டுகிறார்.
    தமது “தெளிவு“ கவிதையில் என்ன செய்தால் அந்த மனச் சூனியம் போகும் என்று ஒளிவுமறைவின்றிப் பூடகமின்றிப் பிட்டுக் காட்டுகிறார்.
    எல்லா மாகிக் கலந்து நிறைந்த பின்
        ஏழைமை யுண்டோடா - மனமே
    இரண்டாவது பகுதியில் மேலும் விரிவாக்கிச் சொல்லுகிறார்.
    “உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
    உள்ளங் குலைவதுண்டோ“
    “தெளிவு“ பாடலின் நான்காவது பகுதி மீண்டும் கர்மயோகம் பேசுகின்றது.
    செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
        தேவனுரைத் தனனே !
    பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
        பூதல மஞ்சு வரோ?
    செயல்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்த மனிதன் சுயம் பிரகாசி ஆகிறான். அவனுக்கு அஞ்ச வேண்டியது; அஞ்சத்தக்கது என்று ஒரு பொருள் இல்லாமல் ஒழிகிறது.
    வாழ்வு முற்றும் பொய்யாய்ப் பழங்கதையாய்க்கதையாய்  மெல்ல போனதுவே என்றாலும் கவலையில்லை. அதில் அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது? வாழ்வின் இயல்பு அதுவே.
    தெளிவு பாடலின் முத்தாய்ப்புப் பகுதி ஒளி வீசும் மணிச்சுடர் போல ஓர் உத்வேகம் தருகிறது.
    ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
        கச்சமு முண்டோடோ? - மனமே!
    தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
        தேக்கித் திரிவ மடா! 
ஆன்ம ஒலிக்கடலில் துணிந்து குதித்து மூழ்கித்திளையுங்கள்  என்பது செய்தி 

No comments:

Post a Comment