Thursday, 16 January 2014

தமிழிலக்கியத்தின் ஜீவநதி

புதுமையின் சிற்பி பாரதி
    காலம் ஒரு சக்தி வாய்ந்த படைப்பாளி பிறந்ததும் ஒரு கோடு கிழிக்கிறது. அந்த படைப்பாளி காலமானதும் மீண்டும் மறுக்கோடு கிழிக்கிறது. இந்த இரு கோடுகளுக்கும் இடைப்பட்ட சித்தரமே  அந்த படைப்பாளியின் சாதனை.
    பாரதி என்ற மனிதர் பிறந்தது  டிசம்பர் 1882. பாரதி என்ற படைப்பாளி, உலகிற்கு வெளியானது ஜூலை 1904ல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் பாரதியின் படைப்பாற்றலுக்கான கொதிநிலை உருவாகிறது.
    காலம் பாதிக்கு முன்னே கிழித்த கோட்டுக்கு  முன்னே  தெரியும் முக்கியப் படைப்பாளிகளை அறிந்து கொள்வது, பாரதி எங்கே தொடங்கித் தமிழ் இலக்கியத்தை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார் என்று தெளிவாக்கும்.
    யமகம், திரிபு, சில்லறைப் பிரபந்தம், கொலைச் சிந்து ஆகிய பல்வேறு இலக்கிய (?) முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தபடியிருந்தன.
ஓர் உயிர் வாழும் மொழி என்றும் ஓய்வதில்லை. அது தன பாட்டுக்கு ஏதோ ஒரு செயல்பாட்டில் இயங்கிக்கொண்டே இருக்கும்.ஓடி ஓ டிக்களைத்து
    பெரிய ஓட்டப்பந்தயங்களிலும், போராட்டத்திலும் ஈடுபட்டுக் இ ளைத்துபோய் அசமந்தப் (Unserious) போக்கில் ஈடுபடும் ஒரு காலகட்டம் அதற்கு நேரும்.
    எல்லா மாபெரும் மொழிகளுக்கும் அது நேர்ந்திருக்கிறது. அப்படி ஒரு கால கட்டம் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
    தமிழிலக்கியத் தராசிற்கு நிற்கும் கனம் வாய்ந்த படைப்பாளிகள் அப்போதும் இருந்தனர். வடலூர் ராமலிங்க சுவாமிகள், கோபால கிருஷ்ண பாரதியார், சுந்தரம்பிள்ளை, பி.ஆர்.ராஜமையர், அருணாசலக் கவிராயர், முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆகியோரே இதில் முக்கியமானவர்கள்.
    தமிழில் முதலாவது இலக்கிய அமைதி வாய்ந்த சிறுகதை  எழுதிய வ.பெ.சு ஐயரும் இவர்களில் ஒருவர்.
    மேற்குறித்த எழுவருமே பூரண இலக்கியப் படைப்பாளிகள் என்ற மதிப்பீட்டுக்கு உரியோர். இவர்களுள் ராஜமையர், வேதநாயகம் பிள்ளை, சுந்தரம்பிள்ளை ஆகிய மூவரும் ஐரோப்பிய இலக்கியம் படித்தவர்கள். அதன் வடிவங்களையும் உள்ளோட்டங்களையும் தமிழ் மண்ணில் விளைவிக்க முயன்றவர்கள், இந்த முயற்சிகளைப் பாரதி நன்கு கிரகித்துக் கொண்டார்.
    வடலூரார், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர் ஆகியோர் தொன்று தொட்டு வரும் தமிழிலக்கிய மரபின் புதிய தொடர்கள்.
    ஆக இவர்களும் பாரதியின் உருவாக்கத்திற்குத் துணை புரிந்தனர். அவரது பாடல்களை யும்  பாரதியின் பாடல்களையும் ஊ ன்றிப் படிப்போர்  இதை உணர்வர்.
பாரதியின் காலம்
    பாரதியின் எழுத்து உத்வேகம் பீறிட்டெழுகின்ற கால கட்டத்தில் மூன்று தேசீய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. (1) சுதந்திரப்  போராட்டம் (2) முதலாவது உலக மகாயுத்தம் (3) ரஷ்யப் புரட்சி, இந்த மூன்று நிகழ்ச்சிகளும் பாரதி என்ற படைப்பாளியை மும்முனைகளில் தாக்கின.
    அந்த தாக்குதலை ஏற்று, இந்திய மண்ணின் ஆணிவேர் போன்ற ஆன்மீகப் பார்வையிலிருந்து சற்றும் பிடிவிடாது பாரதி நடத்திய போராட்டமே அந்தக் காலத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் வளர்ச்சியும் ஆகும்.
பாரதியும் தமிழ் இக்கிய வளர்ச்சியும்
    தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாரதியின் நன்கொடை என்ன என்பதுதான் நமது கேள்வி, சில நம்பிக்கை நட்சத்திரங்களுக்குப்பின் ஒரு சூரியன் போன்று உதித்த பாரதியின் பேராற்றலை, நான்கு பிரிவுகளில் பார்ப்பதே அதற்குரிய மரியாதையைச் செய்வதாகும்.
    மிகக் குறுகிய (1904 முதல் 1921வரை) காலமான சுமார் 18 ஆண்டுகளில் கவிதை, வசனம், வசனகவிதை, ஜர்னலிஸம் ஆகிய நான்கு துறைகளில் பாரதி ஒழிச்சலின்றி உழைத்திருக்கிறார்.
    ஒவ்வொன்றாக அத்துறைகளைப் பார்க்கும் போது பாரதி நடத்திய மஹாயக்ஞமும் அதன் விளைவும் நமக்குத் தெளிவாகும்.
பாரதியின் கவிதைகள்
    பாரதியின் முக்கியமான வெளியீடு கவிதையே, அதை அவர் நன்கு உணர்த்திருந்தார். “நமக்குத் தொழில் கவிதை” என்று நிலைநாட்டிச் சொன்னார்.
    பாரதியின் கவிதைகளில் கருப்பொருள், உருவம் இரண்டிலும் அவர் காலம தொடங்குவதுவரை, தமிழ் கண்டிராத புதுமைகள் பல உண்டு.
    இதில் கருப்பொருள்தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். அன்று வரை, தமிழ்க் கவிதை பாரத நாடு முழுவதும் தழுவிய தேசபக்தியை பிரதிபலித்ததில்லை தமிழிலக்கியம்.
    நாம் அனைவரும்  பாரதியின் மக்கள், அதன் மீது பக்தி கொண்ட புதல்வர் என்ற வெளியீட்டையே முதன் முதலாகப் பாரதி மூலம் தான் அனுபவித்தது.
    அதே போன்று சேர, சோழ, பாண்டியன் என்ற குறுநில மனப்பான்மையை விடுத்து நாம் அனைவரும் தமிழர், நம் நாடு தமிழ் நாடு என்ற பிரக்ஞையை தமிழிலக்கியத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியமுதல் படைப்பாளியும் பாரதியே
தமிழ் மொழியின் மீது பண்டிதர்களும் தமிழ் அறிஞரும் கொண்டிருந்த மூர்க்கமான உடமைப் பற்றினைப் பற்றினைப் பாரதி ஒரு காதலன் போன்று விடு வித்து, இணையில்லாத நேசத்துடன், அதை எளியோருடன் பேசும் மொழியில் வெளியிட்டார்.
    பாரதி பல மொழிகளைப் பயின்றவர். அவற்றில் தோய்ந்து ஈடுபட்டவர். தமிழ் மொழியே எல்லாவற்றிலும் இனியது என்றும் வள்ளுவர், இளங்கோ, கம்பன் போன்ற புலவர் எங்கணும் பி றந்ததில்லை என்றும் முரசறைந்து சொன்னவர்.
    இது தமிழிலக்கியத்தில் கேட்ட தீரமான முதலாவது குரல், நமது தன்னம்பிக்கை, தமிழ்ப் பற்று-ஏன் தமிழ் வெறிகூடப் பிறந்தது அந்த குரல் கொடுத்த தெம்பிலே தான்.
    தமிழின் மீது ஆழ்ந்த காதல் ஒருபுறம்; அதன் தாழ்ந்த நிலைமை குறித்து அடங்காத சோகம் ஒரு புறம், இவற்றைப் பிரதிபலிக்கும் விழிப்புணர்வுப் பாடல்கள் பாரதிக்கு முன்னே இல்லை. இந்த விழிப்புணர்வைத் தொடங்கி வைக்கும் வீர விளக்கு பாரதி தான்.
    என்னதான், தமிழையும் தமிழ் நாட்டையும் ஆறாத காதலோடு நேசித்த போதிலும், ஒரு போதும் பாரதி, அது பாரத நாட்டின் அங்கம் என்பதை மறந்தவரில்லை. அவருக்கு முன்னே பிற மாநில மக்களை வென்ற பெருமிதம்; அவர்கள் இழிந்தவர்கள் என்று இகழ்ந்த சான்றுகள் தமிழிலக்கியத்தில் உண்டு.
    ஆனால் பாரதி தான்  முதன் முதலாகப் பாரத தேசத்தின் பிற மாநில மக்களை தன் அகன்ற கரம் விரித்து ஆரத்தழுவிய முதலாவது படைப்பாளி.
    பாரதிக்குக் கவிதை ஒரு கைவாள் மட்டுமில்லை. கவிதை ஒரு கோடரி, கவிதை ஒரு கலப்பை. புன்மை கண்டு போரிட்டுத் தமிழிலக்கியத்தில் படைப்பாளிகளின் கால் படாத காடுகளை வெட்டி அழித்துக் கை தொடாத கன்னி நிலங்களை உழுது பெரு விளைச்சல் சாட்டியிருக்கிறது பாரதியின் கவிதை.
    ஒரு லட்சிய அயோத்தியைக் கம்பன் கற்பனை செய்ததுண்டு. போகத்தில் புரளும் புகாரைப் பட்டினப் பாலையும் சிலப்பதிகாரமும் சித்தரித்ததுண்டு.
    ஆனால் மனித முயற்சிகளைக் குறித்துத் தமிழிலக்கியம் அதற்கு முன்பு திட்டமிட்ட இலக்குகளோடு கனவு கண்டதில்லை.
    கனவு காண்பதன் மூலமக வெள்ளிப் பனிமலையில் உலவுவோம். மேலைக் கடல் முழுவதும் கப்பல் விடுவோம். சிங்கத் தீவுக்கு பாலம் அமைப்போம்.
    ஆயுதம், காகிதம், குடை, உழுபடை, கோணி, வண்டிகள், ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள், காவியம், ஓவியம் ஏன் ஊசிகள் கூடச் செய்வோம், என்று பிறந்த பிரகடனம், மூத்து முதிர்ந்த தமிழில் ஒரு புதிய குரல்.
    மனிதனின் பௌதீக உலக முயற்சிகள் குறித்து வாழ்த்தி, அதை வரவேற்று, அதற்குக் கனவு கண்ட பாரதி, தமது காலத்தை, தம் படைப்பில் அப்பட்டமாகப் பிரதிபலித்தார்.
    விடுதலைப் போராட்டம், அந்தக் காலத்தின் இதயத் துடிப்பு, சுதந்திரத்தின் அருமை, தேசீயத் தலைவர் பெருமை இவற்றைக் குறித்து பாரதி பாடிய பாடல்கள் 23 ஆகும். இவை தமிழிலக்கியத்தில் புத்தம் புதிய கருப்பொருள்.
    அடுத்து பாரதி தமது கவிதையை, சர் வதேசீயத் தன்மை வாய்ந்ததாக்கினார். தமிழிலக்கியத்தின் பழைய கரைகளையும் எல்லைகளையும் இடித்து விசாலப்படுத்தினார்.
    மாஜினியின் பிரதிக்கினை, பெல்ஜியத்திற்கு வாழ்த்து. புதிய ருஷ்யா இவை தமிழிலக்கியத்திற்கு புதிய பார்வைகள், தமிழிலக்கியம் பாரதியால் முதல் முறையாகக் கடல் கடந்தது.
    வென்றவர்களுக்குப் பரணி பாடிப்பழகியது தமிழிலக்கியம். பாரதி புது மரபு செய்தார், தோற்ற பெல்ஜியத்தை வாழ்த்தினார்.
    பாரதி பாடிய தோத்திரப் பாடல்கள் 98. இவற்றுள் சக்தி, கண்ணன் ஆகிய தெய்வங்களைப் பற்றிய பாடல்களே பெரும்பான்மை.
    துதிக் கவிதை தமிழுக்கு மிகவும் பழகிய ரதம். அதில் ஏறிய பாரதி, புதிய பாதைகளில் செய்த சாரத்தியம் நமக்குத் தெய்வத்தை மிகவும் நெருக்கமான உறவாக்கிற்று.
தாயிலும் தந்தையிலும் குருவிலும் குழந்தையிலும் நாயகனிலும் மட்டும் தெய்வத்தைத் தரிசித்தது தமிழ் மரபு, மன்னன், மந்திரி, காதலி, சேவகன், சீடன் என்று பல உறவுகளில் தெய்வத்தைக் கண்டு, அதை நம் உயிரில் கலந்தவர் பாரதி.
    ஒரு தெய்வ நாயகியான வள்ளியைத் தானே தெய்வ முருகனானப் பேருணர்வு பெற்றுக் கூடி களித்து அந்த சிருங்கார ரஸத்தில் சற்றேனும் விரசபாவம் தோன்றாதவாறு சித்திரித்த பெருமை தமிழில் ஒரு புதிய மைல்கல்.
    மதப் போர்களுக்கு களமாயிருந்த தமிழிலக்கியத்தை,  இம்மியளவும் நெறி பி றழாத ஹிந்துவாய் தான்வாழ்ந்த போதிலும் கிறிஸ்துவம், இஸ்லாம், பார்ஸி என்று பெயர் சொல்லி வணங்கி மூச்சு முட்டி நின்ற தமிழிலக்கியத்தின் பரப்பை விரிவு செய்த முதலாவது தமிழ்க் கவிஞரும் பாரதிதான்.
    பாரதி எழுதிய ஞானப் பாடல்கள் 34, அத்வைதக்கோட்பாடு  என்ற  சாகரத்தில் நீந்தித்தி ளைத்து வேதாந்த சிகரங்களை இதில் தொட்டியிருக்கிறார்.
    “காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையுமெங்கள் கூட்டம். நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறி்ல்லை“ இந்தப் பார்வையில் எல்லையொன்றின்மை என்ற கருத்தின் உட்பொருளுக்கு வடிவம்  தந்தார்.
    வண்டிக்காரன், ஒரு பாமர அம்மாக்கண்ணு, சிட்டுக் குருவி, குடுகுடுப்பாண்டி, பண்டாரம் இவர்கள் வாயிலே பாரதி ஞானங்களைப் பேச வைத்தார்.
    கவிதைகளிலே ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டுமு் என்று சொல்லி அதைச் செயல் வடிவாக்கினார் பாரதி. இ லக்கண மரபு அந்த மூன்று லட்சணங்களுக்கும் தடைபோட்டால் அதைத் தீரத்தோடு உடைத்து அவர் கவி செய்தார்.
சாதிக்கொடுமை, சமூகக் கொடுமை, சோற்றுப் பஞ்சம் இவை அவரால் முதல் முதலில் கவிதையாயின.
    பாரதி சங்கீத ஞானமுள்ளவர், கவிதைக்கும் சங்கீதத்துக்கும்உள்ள சம்பத்தம் உணர்ந்தவர். தாம் எழுதிய பல கவிதைகளை ராகம், தாளம் என்று இசைக் குறிப்புத் தந்து பல்லவி, சரணங்கள் எனக் கீர்தனை பாணியில் எழுதித் தமது முன்னோடிகளான கோபால கிருஷ்ண பாரதி, அருணாசலக் கவிராயர் முதலியோரின் பாதையை இன்னும் பெரிதாக்கினார்.
    சுயசரிதை, தமழ்க் கவிதைக்குப் புதியது, அதற்கும் பாரதியே முன்னோடியானார். அதே போன்று குழந்தைகளை முன் நிறுத்தி அவர்களுக்காக வென்றே தமிழில் எவரும் கவிதை செய்ததில்லை.
    “அளவையாரின் ஆத்தி சூடி” அறநெறிகளை குழந்தைகளை உத்தேசித்துப் புரட்டுவது போல் தோன்றினாலும், அது குழந்தைகளுக்காக மட்டும் ஆக்கப்பட்டதல்ல.
    நவீன குழந்தை இலக்கியத்தில் பிதா மகன் பாரதியே, வெள்ளை நிறப்பசு, கொத்திதிரியும் காக்கை, வண்டி இழுக்கும் குதிரை, அண்டிப்பிழைக்கும் ஆடு என்று குழந்தை புரிந்து கொள்ளும் மொழியிலே அதனோடு பேசிய முதலாவத தமிழ்க் கவி பாரதியே.
    பெண் விடுதலையே, தமிழுக்குப் புதிய கருத்து, பெண்ணடிமை பாரதிக்கு முன் போற்றப்பட்டு வந்தது. சங்க இலக்கியம் சமுதாயத்தில் பெண்ணுக்கு இருந்த உயர்ந்த அந்தஸ்தைப் பிரதி பலித்ததுண்டு.
    எனினும் பெண்ணின் அவலம் குறித்து அங்கே குரல்கள் இல்லை. பெண் விடுதலைக்காகக் கவிதையின் கைவாளை உயர்த்திய வீர மறவன் பாரதியே.
    அநீதிகளை சகித்து, சமுதாய மதிப்பிற்காக அதைச் சிலுவையாக ஏற்றுக் கொள் என்றுதான் தமிழிலக்கியம் பெண்ணை நிர்பந்தித்து வந்தது. எழுந்து நில், உன் உரிமைக்குப் போராடு என்று பெண்மைக்கு வீரம் வழங்கயி முதலாவது தமிழலக்கிய படைப்பாளி பாரதியே.
    மேலும் விஞ்ஞானம், நவீன அறிவியல், சங்கீதம் எனப்பல விஷயங்களைப் பாரதியின் கவிதை தொட்டது.
    பாரதியின் இருபெரும் (Major) படைப்புகள் பாஞ்சாலி சபதமும் குயில் பாட்டும், ஸ்தல புராணங்களைத் தவிர வேறு நெடிய கவிதை முயற்சிகள் செய்தறியாத தமிழில், காவிய மரபு அறியவில்லை; அழியாது என்று பெம்ப்பிக்க வந்த காவியம் பாஞ்சாலியின் சபதம்.
    இதில் பாரதியின் ஆளுமை முழுவதும் வெளிப்பட்டிருக்கிறது. மானம், வீரம், பக்தி, காதல், நகைச்சுவை, சோகம், கொந்தளிப்பு என்ற பல சுவைகளில் தமிழிலக்கியத்தின் ஜீவநதி சேமித்து வந்த சகல நீரோட்டங்களின் சாராம்சமும், கம்பீரமான காவிய தரிசனமும் பாஞ்சாலி சபதத்தில் உண்டு.
    பாஞ்சாலியை பலர் பாரத மாதாவாக காணுமளவு சித்தரித்து நிகழ் காலத்தோடு ஒரு மானசீக இயைபு செய்தார்..
    குயில்பாட்டு, தமிழில் அத்கு முன்னும் அதற்குப் பின்னும் தமிழிலக்கியம் எட்டாத ஒரு புதிய சிகரம். முற்றிலும் மாறுபட்ட கவி முயற்சி வேதாந்த அர்த்தம் ஒரு விநோதக் கதை, இசையின்பம் உலகின் ஓசைகள் குறித்து ஒலிச்சுவை இவை கலந்த ஒரு ஜீவ ரஸாமிர்தம் குயில் பாட்டு.
    மீண்டும் மீ்ண்டும் படித்து வயித்துத் திளைக்கச் செய்யும் ஏதோ ஒரு மந்திர சக்தி வாய்ந்தது. இப்பாட்டு, உருவம், உள்ளடக்கம், கவிஞனின் மொழி இம்மூன்றிலும் இது உலக இலக்கியத்திற்கே ஒரு புதிய முயற்சி.
பாரதியின் கவிதை உருவம்
    புதிய சந்தங்கள் புதிய படிமங்கள், புதிய கற்பனைகள், புதிய ஒலிச் சித்திரங்கள் இவை தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பாரதி வழங்கிய நன்கொடை, கலிங்கத்துப் பரணியைச் சற்றே நினைவூட்டி அனால் பரணி எட்டித் தொடாத உயரங்களில் விளையாடியது. ஊழிக்கூத்து எனும் பாரதி கவிதை.
    காலத்தின் மரணம் (The Death of Time ) பஞ்ச பூதங்கள் சிதறி ஒருமித்தல், அண்டவெளி வெடிப்பது இவை தமிழிலக்கியத்தில் கற்பனை எட்டிப் பிடித்த புதிய குறிகள்.
பாரதியின் ஓசை இன்பம்
    சட்ட சடசட சட்டென்றுடை படுதாளம் தாம் தரிகிட, தாம் தரிகிட, தீம்தரிகிட தித்தோம் தத்தரி கிட தத்தரிகிட தித்தோம், தகத்தகத்தக தக வென்றாடோமோ, என்ற இந்த ஒலிப் பிரயோகங்களில் தமிழ் ஓசை ஆனந்தத் தாண்டவனம் ஆடுகின்றது..
    ஓர் உணர்ச்சி நிலையை ஓர் ஒலி வடிவில் வடிக்கின்ற புதிய முயற்சியையும் பாரதியே தொடங்கி வைக்கிறார்.
    அருணகிரிநாதர் பக்தி, சிருங்காரம் இரண்டும் சேர எட்டிய ஓர் உயரத்தை, வேதாந்தம், ஆனந்த பரவசம் என்று கடந்தார் பாரதி.
    அர்த்தங்களின் உள்ளர்த்தம் (Meaning of the Meaning ) போன்ற ஒரு ரஸத்திற்குச் சொல் எனும் படிக்கல் போட்டுப் பாரதி எட்டிய நுட்பம் இது.
பாரதியின் படிமங்கள்
    அக்கினிக்குஞ்சு, மணிவெளுக்கும் சாணை, சேற்றிலே குழம்பல் ,திக்கிலே தெளிதல் ,பேசும் பொற்சித்திரம், பிள்ளைக் கனியமுது, உயிர்த்தீயினிலே வளர்சோதி, ஆடி வரும் தேன் இ்படி பளிச்சென்று மின்னும் பல படிமங்களைத் தமிழுக்கு பாரதி அறிமுகப் படுத்தினார்.
    இவ்வாறு பாரதியின் கவிதை, தமிழ் இலக்கியத்திற்கு உலகளந்த பெருவிரிவு, நுட்பம் ஓசை இன்பம், உயிரில் சுடும் உவமைச் சுகம் எனப்பல பரிசோதனைகளளைச் செய்து உருவம் உள்ளடக்கம் என இரண்டிலும் மகத்தான சாதனை புரிந்துள்ளது.
    தமிழில் சக்திமிக்க ரசமான, சிந்தனையைக் கிளர்கின்ற, சூடும் சுவையுள்ள வேகமும் விறுவிறுப்புமுள்ள வசனம் பாரதியிடம் தான் ஆரம்பித்தது.
18, 19 ஆகிய இரு நூற்றாண்டுகளிலும் பைபிளில் மொழி பெயர்ப்பு, இராமலிங்க சுவாமிகள் வசனம், ராஜமையரின் உரை நடை, வேத நாயகம் பிள்ளையின் நடை, விநோத ரசமஞ்சரியின் வசனம் எனப் பல நீரோட்டங்கள் இருந்தன.
    எனினும் பாரதிதான் தமிழ் நடைக்கு அராபியக் குதிரைகளின் வேகத்தைக் கொடுத்தார்.சிறுசிறு வாக்கியங்கள் வலிமை வாய்ந்த வினை முற்றுக்கள், கருத்தையும் காட்சியையும் Snap Shot வடிவமாக்கும் முயற்சிகள் என இவற்றுக்கும் பாரதியே தலைமகள்.
    பாரதியின் வசனம் கங்கு கரையற்ற காட்டாற்று வெள்ளம் போல் புதிய புதிய பூமிகளின் பாய்ந்திருக்கிறது.  சிறுகதைகளை எழுதியிருக்கிறது. புதிய நாவல் முயற்சிகளைச் செய்திருக்கிறது.
    பொருளாதாரம், உலக சரித்திரம், தார்மீக நெறி பெண் விடுதலை சமுக சீர்த்திருத்தம், தமிழ் நாடகம் அன்றாட உலக நடப்பு இப்படி எந்த விஷயங்களையும் தமிழ் வசனத்தில் சுவை பட, நெஞ்சில் சித்திரம் போல் பதியுமாறு எழுத முடியும் என்று முதன் முதலில் எழுதிக் காட்டி நிரூபித்தவர் பாரதியார்.
    யூடோபியா எனப்படும் கனவுலக நிலையை பாரதியின் ஞான ரதம் சித்தரித்தது போல்அதற்கு முன்னும் பின்னும் தமிழ் இலக்கியம் சாதித்ததில்லை.
    கவிதை பாரதியின் உணர்வுக்கு வடிகால், வசனம் பாரதியின் சிந்தனைப் போக்குக்கு வடிகால்
    பாரதியின் வசனம் தமிழிலக்கியத்திற்குப் புதிய திசைகளைக் காட்டிற்று. இன்று கதை, கட்டுரை நாவல் என எந்த உரை நடை முயற்சியையயும் மேற்கொள்வோர் தம்மை அறியாமலேயே பாரதி போட்ட உரை நடைப் பாதையில் பயணம் செய்கிறார்கள்.
பாரதியின் வசன கவிதை
    பாரதி தான் தமிழ் மொழியின் எல்லா நவீன சிந்தனைக்கும் தந்தை, வசன கவிதை மட்டும் அவர் பார்வையில் படர்ந்திருக்குமா?
    வசன கவிதையில் புதுக் கவிதையின் வித்துத் தூவப்பட்டுவிட்டது.
    கவிதையின் கட்டுக்கோப்பிலிருந்தும் வசனத்தின் ஆயாசத்திலிருந்தும் நீங்கி ஒரு நிர்பளுவான நிம்மதியோடு அவரது வசன கவிதை, சிட்டுக் குருவியை நிகர்த்துச் சிறகடிக்கிறது.
    “இளமை இனிது; முதுமை நன்று
    உயிர் நன்று காதல் இனிது.   
    மூடன், புலவன்
    இரும்பு, வெட்டுக்கிளி
    இவை ஒரு பொருள்.
    மழை பெய்கிறது:
    ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது.
    தமிழ் மக்கள் எருமைகளைப் போல் எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்.உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.”
    இப்படி வசனத்தில் புதிய ரஸம் சேர்த்த கவித்வத்தைப் பாரதி சிறைப்பிடிக்கிறார். இதிலும் பாரதியின் காம்பீர்யம் எள்ளளவும் குறைக் காணோம்.
பாரதியின் ஜர்னலிசம்
    பாரதி, பத்திரிக்கைகளில் உதவியாசிரியராய் இருந்தவர். தாமே சில சொந்த பத்திரிக்கைகளும் நடத்தியவர். சிறுபிரசுரங்கள் வெளியீடு என்ற துறைக்கும் தலைமை வகித்து அதைத் தொடங்கியவர்.
    அவர் ஒரு கை தேர்ந்த ஜர்னலிஸ்ட். கார்டூன்களைத் தமிழில் முதன் முதல் ஐகயாண்டவரும் கவிதைகளுக்கும் கதைகளுக்கும் சித்திரம் வரைய வேண்டும் என்று உத்தேசித்தவரும் அவர்தான்.
    தமிழின் 20ம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு என்பதே தமிழ் ஜர்னலிச வரலாறுதான்.
    எவ்வளவு பெரிய எழுத்தாளரும், ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் எழுதியவர்களே, பாரதியே கூட ஒரு பத்திரிக்கை எழுத்தாளர்தான்.
    இத்துறையில் ரஸத்திரட்டு, ஹாஸ்யம், மணித்திரள், உலக விநோதங்கள், விநோதக் கொத்து, விநோத விஷயங்கள் என்று அவர் இன்றைய ஜர்னலிஸ மாதிரிகளை, அன்றே உயர்வான முறையில் கடைப்பிடித்தார்.
    துணுக்குச் செய்திகள் எழுதுவதிலும் அவரே முன்னணியில் நின்றார்.
    குடிப்பாங்கு, எளிதாய் சமஸ்கிருதம் படிக்கும் வழி, குணமது கைவிடேல் என அறிவுக் கட்டுரைகள் எழுதும் கலையை அவரே ஆரம்பித்தார். ஆக இன்றைய பத்திரிகைக் கலைக்கும் பாதை போட்டவருள் பாரதி முதல்வர்.
    முடிவாக பாரதி, தமிழ் இலக்கியத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் வாரி வழங்கியதை எடைபோடுவது எந்த தராசிற்கும் இயலாது, சுருக்கமாகச் சில வார்த்தைகளைச்  சொல்லலாம்.
    அவர் நவீன சிந்தனையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தா். கடுமையின் சிறையிலிருந்து தமிழை விடுவித்தார். அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தமிழைக் குடிசையின் கதவருகே கொண்டு போனார்.
    உலகு தழுவிய மனித சமுதாயம் நடத்திவரும் ஆத்ம பரிசோதனைக்கான, சகல இலக்கிய சோதனைகளிலும் தமிழை ஈடுபடுத்தினார். புதுமைக்கு அஸ்திவாரமிட்டார். எது புதுமை என்று செதுக்கி நிறுத்திக் காட்டினார்
    அவரே புதுமையின் சிற்பி.
   


No comments:

Post a Comment