Friday, 31 January 2014

மாதர்க்குண்டு சுதந்திரம்

விளக்கிலே திரி நன்கு சமைத்தவர்
பெண் விடுதலை என்ற குரல் விடுதலைப் போராட்டத்தோடு ஒருங்கிணைந்து பிறந்த குரல். நமது சுதந்திரத்துக்கு என்ன வயதாயிற்றோ அதைவிட நூறு வயது அதற்குக் கூடுதல்.
    உலகின் எல்லாப் பகுதிகளிலும் பெண்கள், விடுதலை பெற்று வந்த அந்தக் காலகட்டத்தில் உரிமை வேட்கையின் உடன்பிறப்புத் தீயாக, அது நம் நாட்டில் நுழைந்த்து.
    தமிழ்மொழியில் அதை வரவேற்ற தலைமக்கள் வரிசையில் பாரதி முதலிடம் பெற்றவர். உடன் கட்டை ஒழிப்பில் தொடங்கி, பால்யத் திருமணம், விதவைத் திருமணம், பெண் கல்வி, பெண் சமத்துவம் என்று அது பற்பல சுடர்களாகப் பரவிப் படர்ந்ததைக்  குதூகலத்தோடு வரவேற்றுக் கொண்டாடியவர் மகாகவி.
    தமது பணி முன் கூறிய சமுதாயச் சீர்திருத்தங்களோடு நின்றுவிடவில்லை என்ற உணர்வு அவருக்கு இருந்தது. ஆண் பெண் என்ற இரு பாலருக்கு மிடையேயான சீரான சமவுணர்வுநிலை சமைப்பதை முக்கிய கடமையாக அவர் கருதினார்.
    ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட முக்கிய நெறியாக அவர் கருதிய கற்பு நெறியே, பெண் விடுதலை விஷயத்தில் ஆண்கள் காட்டும் பின்னடைவுக்குக் காரணம் என்பதையும் அவர் கூர்மையாக உணர்ந்திருந்தார்.
    அதனாலேதான் “ பெண்கள் விடுதலைக்கும்மியிலே
    “கற்பு நிலையென்று சொல்லவந் தாரிரு
    கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்“
என்றார். இதற்கான விரிவான விவாதத்தை ஒரு வழக்கறிஞரும் அறுவை மருத்துவரும் எவ்வாறு மனம் கூசாது தம் கடமையாற்றுவார்களோ அவ்வாறு தமது “பதிவிரதை“ கட்டுரையிலே எழுதினார்.
    “ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று  எல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.
    ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல இதர ஸ்தீரீகளின் பதிவிரத்த்திலே காட்டுவதில்லை...
    அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்?
    கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம் ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள்.
    அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்தபக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும்.
    இந்தக் கூட்டில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது    .
    அந்த இருபதினாயிரம் வ்யபிசாரிகளில் நூறு பேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள்.
    ஆனால் அவளவளுடைய புருஷனுக்கு அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.
    ஆகவே பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே, பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்தீரீகளைப் புருஷர்கள் அடிப்பதும் திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி  நடைபெற்று வருகின்றன.
    சீச்சி! மானங்  கெ ட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை.
    “இதென்னடா இது! “என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?“ என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன? இதைப் போல மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது...
    ... சில தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜபக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்திசெலுத்தாவிட்டால் சிறைச்சாலையிலே போடுவோம என்றம் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.
    அந்த அரசுபோலேதான், ஸ்தீரிகள் மீது புருஷர் செய்யும் “கட்டாய ஆட்சியும்“ என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும்.    கட்டாயப்படுத்தி, என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?“
    இப்படி பாரதி எழுதிச் செல்லும்போது அவருக்குக் கற்பின் மீது நம்பிக்கை போய்விட்டது. கற்பு என்பது கதைக்கப்படும் பொருள் என்று அவர் கருதுவதாக எவரும் எண்ணிவிடக்கூடாது.
    புதுமைப்பெண் பாடலில்
    குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்“ என்றும் “தமிழ்நாட்டு மாதருக்கு“ கட்டுரையில்
“தமிழ்நாட்டு மாதருக்கு மட்டுமேயன்றி உலகத்து நாகரீக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச்சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரீ எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும்“ என்று எழுதினார்.
    கற்பு என்பது உன்னத மனித தரிசனம் என்று நிலைநாட்டிய பாரதி அதைக் காக்க வேண்டிய பொறுப்பினை ஆணுக்கும் பங்கிட்டு வைத்தார்.
    அறிவு கொண்ட மனித வுயிர்களை
    அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்
    நெறிகள் யாவினு மேம்பட்டு மானிடர்
    நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே
    சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள்
    தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
என்று புதுமைப்பெண் பாடலில் அவள் வாயால் புதிய நீதி கூறவைத்தார்.
    கற்பு என்ற பெயரில் பெண்களே சில மூடப்பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வதையும் பாரதி எடுத்துக் காட்டத் தவறவில்லை. “தமிழ்நாட்டு மாதருக்கு“ கட்டுரையில்
    “குழந்தைப் பிராய முதலாகவே செவிகளில் மிகவும் கனமான நகைகளைத் தொங்கவிட்டுத் தோள் வரையிலும், சில சமயங்களில் மார்பு வரையிலும், காது வளர்க்கும் வினோதமான ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பல பகுதியாரிடம் காணப்படுகிறது.
    கற்பு எங்ஙனம் ஸ்வதர்மமோ  அதுபோலவே காது வளர்ப்பதும் ஸ்வதர்ம
மென்று அந்த ஏழை ஸ்திரீகள் அறியாமையாலே நினைக்கிறார்கள்.
    குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழங்கங்களாயினும் அவற்றுள் முக்கியத் தன்மையுடையன எவை. இல்லாதன எவை என்ற ஞானம் தம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின் அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதன மில்லை”.
    பெண் மூட நம்பிக்கையைச் சுட்டிக் காட்டிய பாரதி அதற்குக் காரணமும்  காட்டினார்.
    அடுத்து அதிகாரமின்றி ஆணுக்கும் பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு உபாயமும் சொன்னார்.
    “ஸ்திரீகள், புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும்.    நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று அரசனாயினும் குருவாயினும் புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது.
    அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது
    அடுத்து பாரதி பெண்களுக்குத் தமது துணைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பரிபூரணமாக உண்டு என்று அனுமதிக்கிறார்.
    “வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”
என்று பெண்கள் விடுதலைக்கும்மியிலும்
    “ஸ்தீரிகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்தீரி அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி“ என்று தமிழ்நாட்டின் விழிப்பு கட்டுரையிலும் தெளிவாக அறிவித்தார்.
    பெண்களை அடிமைப்படுத்திய  கொடுமைவிதிகள். ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்ற ஓர் எண்ணம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தை வீட்டில் அவர்கள் காட்டிய வழக்கம், நல்ல விலைக்கு நாய் விற்பவர் அதனிடம் யோசனை கேட்காது போவது போல் பெண்களைக் கொல்லத் துணிவின்றி அவர்களை அந்த நாய் நிலையிலே கட்டி வைத்த அகந்தை, இவையாவும் ஆண்கள் செய்து வைத்த சட்டத்தினால் தான் என்பது பாரதி பார்வை.
    இதை தமிழ்நாட்டு நாகரீகம் கட்டுரையில் அவர் குறிப்பிட்டார்.
    உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம் நீதி ஆண் மக்களாலேயே விதிக்கப்பட்டது“ அதை அப்படியே விட்டு வைக்கக் கூடாது.
    சட்டம் இயற்றும் உரிமை ஆணுக்கு மட்டும் சொந்தமில்லை என்று பாரதி கொடுத்த போர்க்குரல் தான் பின்வரும் வரிகள்.
    “பட்டங் களாள்வது ஞ் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
    எட்டு மறிவினி லாணுக்கிங் கேபெண்
    இளைப்பிலை காணென்று கும்மியடி
    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோ மென்று கும்மியடி
    சாதம் படைக்கவுஞ் செய்திடு வோந்  தெய்வச்
    சாதி படைக்கவுஞ் செய்திடுவோம்”
பெண்களின் அந்த மனத் துணிவிற்கு கல்வி தவிர வேறு வழியில்லை என்று உய்த்துணர்ந்த மகாகவி “தமிழ் நாட்டு மாதருக்கு கட்டுரையிலே -
    “ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்கு பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண் மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள்“ என்றார்.
    தமிழ்ப் பெண்களின் இயற்கை அறிவின்மீது பாரதிக்கு இணையிலாத நம்பிக்கை. அதைப்பற்றி அவர் அதே கட்டுரையில் குறிப்பிடும் போது
    “இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கை யறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம்.
    ஔவையார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா?    சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின் தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்துவிடுவார்கள்.
    அறிவு திறந்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதிஸு லபமாய் விடும்; எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள் தமிழ்ச் சகோதிரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள்“
    ஔவையார் மீது பாரதிக்கு மஹாபக்தி, தமிழ்ப் பெண்மையின் அறிவுக் கூர்மைக்கும் கடமைப் பற்றுதலுக்கும் வடிவமாகத் திகழ்ந்த அவரைப் பற்றி தமிழ்நாட்டு நாகரிகம் கட்டுரையில்
    கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லாருக்கும் குறள், நாலடியார் முதலிய நூல்களைக் காட்டிலும் ஔவையின் நூல்களில் அகப் பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன.
    “ஔவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ்நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப் பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார்.
    மேலும் அவர் சிறந்த ஆத்ம ஞானி ;  யோக சித்தியால் உடம்பை முதுமை, நோவு சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.
    ... கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம்மனைவரிலும் மிகச் சிறந்தவராக்க் கருதப்பட்ட ஔவைப் பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக் கூடும்.
    “தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?“ ஔவையின் நூல்களை இழந்து விடப் பிரியமா?” என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின் -
    “ மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்“ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
    “...ஒள்வையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக் கூடிய ஒர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன் பிறக்கவில்லை? இதினின்றும்  ஆண் மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத் திறமையிலே குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ ? என்று போதிக்கக்  கூடிய நிலைமையிலிருக்கிறார்கள் (பெண்கள்) - என்ற எழுதினார்.
    பெண்ணை ஆண் அடிமை செய்ய அனுமதிக்கக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும்.
எந்த வழியில்?
இக்கேள்விக்கு காந்தியடிகளின் சாத்வீக எதிர்ப்பையே பெண்கள் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் போர் முறையாக பாரதி சிபாரிசு செய்தார்.
    பாரதியின் குமாரி தங்கம்மாவால் புதுச்சேரியில் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப்பெற்ற பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது? என்ற கட்டுரையில் -
    “நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர்.
    இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர்  செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம் குருஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போலே, திகைக்கிறது.
    ஆண்மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது பற்றியே சாத்வீக எதிர்ப்பினால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன்.
    ...ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்-
    “நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே  தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதைவிட்டு வெளியேறவும் மாட்டேன்“ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும்.“
    பெண் அப்படி முரசறைந்து கூறிவிட்டுத் தன் பலவீனங்களை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அவள் கட்சி தோற்றுவிடும் என்பது பாரதிக்குப் புரிந்திருந்தது . அதை நாசூக்காக அதே கட்டுரையில் சுட்டிக் காட்டினார்.
    “இங்ஙனம் கூறும் தீரமான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வை ப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக் கூடாது.
    “பரிபூரண ஸமத்வ மில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழ மாட்டோம்” என்று சொல்வதனால் நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக் கூடிய கொடுமைகள் எத்தனையோவா யினும்,    எத்தன்மை யுடையவையாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும் நாம் அஞ்சக் கூடாது!“
    விவாகரத்து குறித்து பாரதிக்கு முழு மனதான ஒப்புதல் இல்லை....
    நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் கட்டுரையில் விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவசரப்பட வேண்டியதில்லை. பொறுமையை உபயோகப்படுத்தி விவாகக்கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம்அதற்குரிய ஏற்பாடுகள் செய்வோம்“ என்றார்.
    எனினும் அந்த விவாகரத்து உரிமை முற்றிலும் அவர்களுக்கு இல்லையென்று ஒதுக்கிவிடுதல் தீங்கு என்று புரிந்து வைத்திருந்தார்.
    பெண் விடுதலை கட்டுரையில்
    விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவனை அவமானப்படுத்தக் கூடாது“ என்று ஒரு விதி வகுக்கிறது.
Free Sex  எனப்படும் விடுதலைக் காதல் பற்றி பாரதிக்குக் கடும் விமர்சனம் உண்டு.
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலா மென்பார் அன்னோர்
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தாற் கலந்தன்பு பிரிந்து விட்டால்
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டு மென்பார்
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்!
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போ லாண்மக்கள் புவியின்மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்

இங்கே கற்பைப் பற்றிய உள்ளுணர்வு பாரதிக்கு மீண்டும் தோன்றுகிறது.
ஆணெல்லாங் கற்பைவிட்டு தவறு செய்தால்
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணமற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரையுந்தா னெரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காணுகின்ற காட்சியெலா மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே!
விதவைத் திருமணம் பற்றி ஆணியடித்தது போன்ற கருத்து பாரதிக்கு உண்டு.
    “இந்தியாவில் விதவைகளின் பரிதாப நிலை“ என்ற கட்டுரையில்
“எல்லா விதவைகளும் மறுமணம் செய்துகொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக்கு செய்யப்படும் அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்குத் தகுந்த மாற்று மற்றப் பேச்செல்லாம் வீண் கதை” என்கிறார்.
    பெண்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டால் பெரிய பிரளயம் ஒன்றும் நேர்ந்து விடாது என்பதைக் குறித்து எழுதும்போது பாரதியின் பேனாமுனை பரிகாசத்தின் உச்சத்திற்கே சென்று குலுங்கக்  குலுங்கச் சிரிக்க வைக்கிறது.
    பெண் விடுதலை (2) கட்டுரையில் -
“இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண் கல்வி ஏற்பட்டால் மார் ஒழுக்கத்தில் தவறிவிடுவார்களென்று ஒரு கருத்து தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.
    அண்டச்சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்ததால் ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து, பூமியின் முன்விழும் என்றும் வால் நக்ஷத்திரம் வகையராக்கள் எல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள்.
    “மதறாஸ் மெயில்“ போன்ற ஆங்கிலேய ப் பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்ஜியம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள்.
    “ஓஹோ! ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரத்திரரை க் கொல்வார்கள். பிறகு ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள்.
    அப்பால், மஹாராஷ்டிரர்  தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தின்றுவிடுவார்கள்.
    பிறகு மலையாளிகள் தமிழ்ப்பார்ப்பாரையும் தமிழ்ப்பார்ப்பார் திராவிடரையும் சூர்ணமாக்கி விடுவார்கள் சூர்ணித்த திராவிடர் வங்காளி எலும்புகளை மாலையாகப் புனைவர்“ என்று சொல்லிப் பெருமூச்சு விடுவார்”
    பெண் விடுதலைக்கு பாரதி வைத்த வாதம் மிகவும் எளிமையானது தர்க்கமயமானது பகுத்தறிவு பூர்வமானது. தவிர்க்கவோ சாக்குப்போக்கு சொல்லவோ இடம் தராதது.
    தாய்க்குலமே லிங்கேயோர் தெய்வ முண்டோ?
    தாய்பெண்ணே யல்லளோ!
தமக்கை, தங்கை வாய்க்கும் பெண் மகவெல்லாம்  பெண்ணே யன்றோ!
மனைவி யொருத் தியையடிப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
தாயைப் போ லேபிள்ளை யென்று முன்னோர்
வாக்குளதன் றோ? பெண்மை யடிமை யுற்றால்
மக்களெலா மடிமையுறல் வியப்பொன்றாமோ?
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறரா மென்பான்;
நாட்டினிலே நாடொறு முயன்றிடுவா னலிந்து சாவான்
பெண்களின் உரிமக்கு துந்துபி முழக்கியவர் மகாகவி அதன் பல்வேறு விகாசங்களை அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் அலசி “விளக்கிலே திரி நன்கு சமைத்தவர்“ என்பதில் ஐயமில்லை.

ஏதிலர் தரும் கல்விப் படுகுழி

ஏதிலர் தரும் கல்விப் படுகுழி
    பாரதிக்கு இளமையில் தாம் பெற்ற ஆங்கிலக் கல்வி மீது தீராத வெறுப்பு இருந்தது. திருநெல்வேலிக்குச் சென்று பள்ளியில் கல்வி பயில்க என்று அவரது தந்தை அனுப்பி வைத்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில் -
    புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
        போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்
    நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
        நாடு விப்பது போலவும், எந்தைதான்
    அல்லல் மிக்கதொர் மண்படு கல்வியை
        ஆரியர்க்கிங் கருவறுப் பாவதை
    நரியு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள்
        நாயெனத்திரி யொற்றர் உணவினைப்
    பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும்
        பேடி யர்பிறர்க் கிச்சகம் பேசுவோர்
    கருதுமிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
        கலை பயில்கென வென்னை விடுத்தனன்
என்று தமது சுயசரிதையிலே எழுதினார். அத்தகைய ஏட்டுக்கல்வி ஒரு மண்ணுக்கும் பயன்படுவதில்லை என்று கண்டு அவர் மனம் கொதித்தது.
    கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர் பின்
        கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
    அணிசெய் காவிய மாயிரங் கற்கினும்
        ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்;
    வணிக மும்பொருணூலும் பிதற்றுவார்;
        வாழு நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்;
    துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
        சொல்லு வாரெட்டுணைப்பயன் கண்டிலார்
என்று வரிசையாக, நம் தமிழ்நாட்டின் பெருமை, பாரதத்தின் சிறப்பு இவற்றைப் பற்றி எழுதிச் சென்றவர் அவற்றில் எதையுமே அறியாத ஞான சூனியம்தான் ஆங்கில ஏட்டுக்கவி பயில்வோருக்கு மிஞ்சுகிறது என்பதை சீற்றத்தோடு குறிப்பிடுகையில்
    “அன்ன யாவு மறிந்திலர் பாரதத்
        தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
    முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
        மூண்டி ருக்குமிந் நாளி னிகழ்ச்சியும்
    பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
        பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்”
என்றார். அத்தகைய கல்விமுறை பற்றி பாரதிக்கு இருந்த கருத்து" ஏதிலர் தருங் கல்விப் படுகுழி, ஏறியுய் தற்கரிய கொடும்பிலம்” தீதியன்ற மயக்கமும் ஐயமும்செய்கை யா யாவினுமே அசிரத்தையும் வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெங்குகை” என்பது  தான்,
    அதனால் ஒரு பயனும் இல்லை என்பதைக் கூற வருகையிலோ -
    நலமோ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
        நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்
என்று மனோ தீரத்தோடு  சாடினார், தாம் அக்கல்வி முறையால் சீரழிந்து விடாது தப்பியது பற்றிக் குறிப்பிடுகையிலோ
    விலைமுன் செய்நல் வினைப்பய னாலு நற்
        தேவி பாரத் தன்னை யருளினும்
    அலைவு றுத்துறும் பேரிருள் வீழ்ந்து நான்
        அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே
என்று நிம்மதிப் பெருமூச்சுடன் நன்றி கூறுகிறார்.
    நமது கல்வி முறை, தேச நலன்களுக்கு முற்றிலும் விரோதமான கல்வி முறையாக இன்றுபோல் அன்றும் இருந்திருக்கிறது. அத்துடன் அந்நிய ஆதிக்கத்திற்கு அடிவருடல் செய்ய முயன்றிருக்கிறது.
    அதன்  சீர்கேடுகளைப் பற்றி சீற்றக்கவி பாடி மட்டும் பாரதி தம் கடமை தீர்ந்தது என்று சும்மா இருக்கவில்லை.. சிந்தித்து அதற்கு மாற்றுகளும் கண்டு  எழுதினார்.
    தேசீயக்கல்வி என்ற கட்டுரையிலே பயிற்று மொழி தமிழாகவே இருக்க வேண்டும் என்று எழுத முனைந்து “தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப் படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்”
    “காளயுக்தி” என்ற தலைப்பில் காளயுக்தி வருஷம் தொடங்கியபோது எழுதிய குறிப்பில் பாரதி -
    “தமிழ்  நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரம் முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும்…”
    …“நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை குச்சி எலலாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். “ஸ்லேட் பென்சில்” என்று சொல்லக் கூடாது.
    நாம் இன்று அறிவியல் தமிழ் உருவாக்குவதில், சொற்களைத் தமிழ்ப் படுவதில் உள்ள சிக்கல்களைக் கடக்க முயன்று வருகிறோம்.
    அதே கட்டுரையில் பாரதி-
    இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப் படுத்த வேண்டும்.
    திருஷ்டாந்தமாக “ஆக்ஸிஜன்”, ஹை ட்ரஜன்” முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு ஜலவாயு என்ற நாமங்களையே வழங்கவேண்டும்.
    தமிழ்ச் சொற்கள் அகப்படா விட்டால் ஸம்ஸ்கிருதப் பதங்களை வழங்கலாம் பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ், சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும்.
    இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.
    ஆனால் குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது.
    பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரம் இங்கிலீஷில் சொல்லலாம். வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.. என்கிறார்.
    தொடக்க ப் பள்ளிக் கூடங்கள் அமைப்பதற்கு வேண்டிய ஒரு பாடத் திட்டத்தையே பாரதி (அ) எழுத்து, படிப்பு, கணக்கு, (ஆ) லேசான சரித்திரப் பாடங்கள் (இ) பூமி சாஸ்திரம் (ஈ) மதபடிப்பு (உ) ராஜ்யபௌதீக சாஸ்திரம் (ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப்பயிற்சி, வியாபாரம் (ஐ) சரீர பயிற்சி (ஒ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்) என்று பத்து தலைப்புகளிட்டு விரிவாக எழுதிச் செல்கிறார்.
    அவற்றை முழுமையாக அப்படியே மீண்டும் இங்கு தருவதைவிட ரத்தினம் போன்ற சிற்சில சுருக்கங்களைத் தருவது மகாகவியின் உள்ளக்கிடக்கையை நன்கு புரிந்து கொள்ள உதவும்.
    “வேதகால சரித்திரம், புராண கால சரித்திரங்கள், பௌத்த காலத்துச் சரித்திரம், ராஜபுதானத்தின் சரித்திரம் இவை மிகவும் கற்பிக்கப்பட வேண்டும்.
    இந்தச் சரித்திரங்களில் மஹாகீர்த்தி பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உத்ஸாஹத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தை களுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
    அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன.
    ஆதலால் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தில் அற்புதமான பகுதிகளையும் , அசோகன், விக்கிரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜுனன்   இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகள் மனதில் பதியும்படி செய்வது அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்தி மேன்மைப் படுத்துவதற்கு நல்ல ஸாதனமாகும்.
    …பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள் இவற்றைப் பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும்.
    ...உண்மை, நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகள் குணங்களையும், ஸர்வதேசபக்தி, ஸ்வஜனாபிமானம், ஸர்வ ஜீவதயை முதலிய புராதன வீர்ர்கள் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாக உணர்த்த வேண்டும்.
    ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியரை உயர்த்தி விடுதலை, முதலியனவே ஜன ஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்.
    ... உலகமே காற்றாலும் மண்ணாலும் நீராலும் அமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்து விடக் கூடும் என்ற மஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள் தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்று அந்த மூடக் கொள்கையை தமது தேசத்தில் இளஞ் சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும் படி செய்து விட்டார்கள்.
    சிறு பிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன. அசைக்க முடியாதன மறக்க முடியாதன.
    எனவே நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக் கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகு மட்டும் இந்த பெரும் பயத்துக்கு ஆளாகி தீராத கவலை கொண்டு மடிகிறார்கள்.
    பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும்.
    ... இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும், விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்கியமான கைத்தொழிலாகும்.
    நன்செய்ப் புன்செய்ப் பயிர்த் தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குக்கள் விளைவிக்கும் தோட்டங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று.
    ...தோட்டத் தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும் சரீரப்பயிற்சியே மிகவும் விசேஷமானது பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து, ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலிய அவசிய கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றாம்.
    ... படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை யெடுக்கும்படி செய்ய வேண்டும். சுவரில்லாமல் சித்திர மெழுத முடியாது.
    பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.
    ...பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும் தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள், விழாக்கள் முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின், உட்பொருளைக் கற்பித்துக் கொடுத்தல் நன்று.
    திருவிழாவிற்கு வந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும் படி செய்ய வேண்டும்.
    வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும் அன்பும் பரஸ்பர சம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
    மலைகள், கடலோரங்களுக்கு அழைத்துச் சென்ற இயற்கையின் அழகுகளையும் அற்புதங்களையும் பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்யவேண்டும்.
    இத்தகைய கல்வியை வழங்கவேண்டிய ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற அம்சத்தையும் பாரதியின் கூரிய பார்வை கணிக்கத் தவறவில்லை. அதே கட்டுரையில்,
    “தமிழநாட்டில் ஏற்படும் தேசீய பாடசாலைகளில் உபாத்தியாயர்களாக வருவோர் திருக்குறள், நாலடியார், முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும்.
    சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வர்தமாபிமானமும் எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உள்ள உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று.
    அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைக்காத போதிலும் பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
    ஆரோக்கியமும் திடசரீரமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று.
    பெண்கள் கல்வி கற்கவேண்டும் என்பது பாரதியின் பெருவிருப்பம்.
தமது மாதர் என்ற கட்டுரையில்,
“தமிழ்நாட்டு ஸஹோதரிகளே! உங்களிடம் எத்தனையோ அரிய திறமைகளும், தந்திரங்களும், உயர்ந்து இருந்தபோதிலும், கல்வியின் பரவுதல் அதிகமில்லாதபடியால், அவ்வப்போது வெளியுலகத்தில் நிகழும் செய்திகளையும் மாறுதல்களையும் நீங்கள் அறிந்து கொண்டு அதற்குத் தக்கபடி நடக்க இடமில்லாமற் போகிறது” என்று குறிப்பிடுகையில் வெளிப்படுகிறது.
    “தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக் கல்வித் தோணியே பெருந்துணையாம்“.
    மகாகவி தமது மொழியும் இனமும் மேம்பாடுற தேசீயக் கல்வியே, சிறந்ததெனக் கண்டவர். அக்கல்வியைப் பெறுவதில் ஆண், பெண் என்று வேற்றுமை கூடாது என்று தெரிந்தவர்.
    அவர் தமிழ்க்கல்வியே, தமிழின் மூலமே பயிற்றுவிக்கப்படும் கல்வியே, தேச நலனுக்கு உகந்த்து என்று உறுதியாக இருந்தவர்.
    தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்” என்றார்.
    கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கும் அம்சத்திலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பங்கு கேட்டார்.
    “தமிழ்க் கல்விக்கும் தமிழ்கலைகளுக்கும், தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக் கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?“ என்று காரணம் காட்டினார்.
    … அவர்கள் (பெண்கள்!) பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும், ஆண் மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேஹமில்லை. முன்பு தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஔவையார் உலக முழுதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?“ என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Monday, 27 January 2014

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
    பாரதி மாடமாளிகைகளில் அமர்ந்து கீழே மைதான வெளியில் மிதந்த இயற்கை எழிலைப் பார்த்துக் கவி எழுதியவர் அல்ல, மேலே விண்ணில் பறந்து கவிப்புள்ளாகிக் களித்துத் திரிந்தவர்தான்.
    ஆனால் அவருக்குப் பசி தெரியும். பசியின் கொடுமை புரியும், சுற்றிலும் மக்கள் சோற்றுக்குத் துடிக்கும் துடிப்பு தெரியும்.
    கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
    காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
    பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம்
    பரிதவித்தே உயிர் துடிதுடித்து
    துஞ்சி மடிகின்றாரே - இவர்
    துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே
என்று பாரத ஜனங்களின் தற்கால நிலைமை கவிதையிலே பாடினார் அவர்.
    அவர் வாழ்ந்த காலத்தில், சுதந்திரமடைந்துவிட்ட பின்பும் தற்போதுள்ள நிலை போன்றே பசித்த வயிறுகள் நாடுமுற்றும் ஒருவரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தன.

    செல்வம் (2) என்ற கட்டுரையில் அதைக் குறிப்பிடும்போது,
    “கோடிக்கணக்கான ஜனங்களை வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும், லட்சக் கணக்கான ஜனங்கள் ஒருவேளைக் கஞ்சி கிடைக்காமலே பட்டினியால் கோர மரணமெய்தும் படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு க்ஷணங்கூடச் சகித்திருப்பதில் நியாயமில்லை” என்று மனம் குமுறினார்.
மக்கள் சோற்றுக்கு அலைவது அவரது தார்மீகச் சினத்தை தீப்போல் கனலவைத்தது. மறவன் பாட்டிலே -
    “ஏழை யெளியவர்கள் வீட்டில் - இந்த
    ஈன வயிறுபடும் பாட்டில்”
என்றும்
    சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறுஞ்
    சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்?
என்றும் வெடித்தார்.
    மனிதர்களின் உணவை மனிதர்களே பறிப்பது அவருக்கு மனிதகுலத்தில் போது இகழ்ச்சியாகவும் பொதுத் துன்பமாகவும் புலப்பட்டது.
    தமது செல்வம் (2) கட்டுரையில் மிருகங்களை விட மனிதர் கீழ்நிலைக்குச் சென்ற வீழ்ச்சியை எழுதினார்.
    “நான்கு பன்றிகள் அல்லது நாய்கள் கூடி யாதேனும் ஒரு ஊரில் அல்லது ஒரு காட்டில் கிடைக்கக்கூடிய ஆஹார முழுவதும் தங்களுக்கே தஸ்தாவேஜூப்படி சொந்தம் என்றும் தாங்களாக இஷ்டப்பட்டு தாங்கள் திட்டம் செய்து கொடுக்கும் அளவுப்படிதான் மற்றெல்லாப் பன்றிகள் அல்லது எல்லா நாய்களும் உண்ணக்கூடுமென்றும் விதி போடுகிற வழக்கம் (மனிதருக்குள் இருப்பதுபோல்) அந்த ஐந்துக்களிடையே காணப்படுவதில்லை…
    இந்த அம்சத்தில் மனிதருடைய நாகரீக நிலை மற்றெல்லா மிருகங்கள் பக்ஷிகள் முதலியவற்றின் நாகரீக நிலையைக் காட்டிலும் தாழ்வானது”   
    பாரதியின் காலத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, பட்டினியில் மக்கள் மடிந்திருக்கிறார்கள். இது அவரது கவியுள்ளத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறது.
    அதே கட்டுரையில் அவர்,
    “மனிதஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும் பொதுக் கஷ்டமாகவும் ஹிந்துக்களுக்கு விசேஷ அவமானமாகவும் விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து அந்த நோயை நீக்கி இந்தியாவிலும் பூ மண்டலத்திலும் ஸகல ஜனங்களுக்கும் ஆஹார சம்பந்தமாக பயமில்லாதபடி அரைவயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்கு வழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவரசங்களைக் காட்டிலும் பெரிய அவசரம் என்று நான் கருதுகிறேன்” என்று எழுதினார்.
    இதற்கு உடனடி மருந்தாக அவருக்குத் தோன்றுவது ஒரே ஓர் உபாயம்தான்.“மாலை” கட்டுரையில் அவர் அதைத் தெளிவாக்கினார்.
    “பசி வந்தால் கோபம் வருகிறது. பசியடங்கினால் கோபம் அடங்குகிறது… ஒருவன் ஊருடன் கூடி வாழ விரும்பினால் ஊருக்கு வயிறு நிறைய அன்னம் போட வேண்டும். சிற்சிலர் புதிதான தர்மங்கள் கண்டுபிடிக்கின்றார்கள். ஏழைக்கு அன்னம் போடுவதுதான் உத்தம தர்மம். இது முற்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுக்கு வயிற்றுக்குக் கஞ்சி காட்முடியாவிட்டால், அந்த தேசத்தில் எவ்வளவு பெரிய வித்வானிருந்தும் பிரயோஜனமென்ன? நாகரீகம் உயர்வதினாலே போஜனம் குறைவாக இருந்தால் அந்த நாகரீகம் அவசியமில்லை.”
    இதையே கவிதையிலும் பாரதி சொன்னார்.
    “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு
    வாழும் மனிதருக்கெல்லாம்”
    தமது “பாரத ஸமுதாயம்” கவிதையில் பரந்து கெடுக இவ்வுலகியற்றியான் என்று வள்ளுவர் கூறியதற்கு ஒரு படி மேலே சென்று -
    “இனியொ ருவிதி செய்வோம் - அதை
    எந்த நாளும் காப்போம்
    தனியொருவனுக் குணவில்லை யெனில்
    ஜகத்தினை யழித்திடுவோம்”
என்று முரசறைந்தார்.
    ஒரு மகாகவி தன் தலைமுறையும் தன் மக்களும் என்ற வரைமுறையோடு நின்று விடுபவன் அல்ல. அவன் உலக முழுமைக்கும், எதிர்வரும் பல தலை முறைகளுக்கும் சொத்து.
    எனவே தன்னைச் சூழ்ந்துள்ள பல பிரச்சனைகளில் என்றென்றும் தீர்த்தே தீரவேண்டிய பிரச்னையை அவன் உலகக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். மனித இம் முழுமைக்குமாக காலங்கடந்த தூர நோக்குடன் தீர்மானிக்க வேண்டும்.
செல்வம் (2) கட்டுரையில் -
    “உலகத் துன்பங்கள் அனைத்திலும் கொடியதான இந்த ஏழ்மைத் துன்பத்தை ஸமாதான நெறியால் மாற்றக் கூடிய உபாயமொன்றை நாம் கண்டுபிடித்து நடத்துவோமானால் அதினின்றும் நமது நாடு பயனுறுவது மட்டுமேயன்றி உலகத்தாரெல்லாரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நம்மை அடைவார்கள்” என்று எழுதினார்.
    “வறுமையும் பசியும் மனித சமுதாயத்தை விட்டு நிரந்தரமாகத் துரத்தப்பட வேண்டும் என்பது அந்த மகாகவியின் மாறாச்சிந்தனையாக இருந்தது.

விதியே, விதியே தமிழச் சாதியை யென்செயக் கருதி யிருக்கின்றாயடா?

விதியே, விதியே தமிழச் சாதியை யென்செயக் கருதி யிருக்கின்றாயடா?

    தான் தமிழன் என்பதில் பாரதிக்கு தலைநிமிர்ந்த மிடுக்கு உண்டு.

    “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
        வள்ளுவர் போல். இளங்கோ வைப்போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை   
        உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!“
-என்று ஒரு முறை மட்டுமல்ல,
    “கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு
    ………………………………….
    வள்ளுவன் தன்னை உலகினுக்ககே - தந்து
    வான்புகழ்கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு“
என்று இரண்டாம் முறையும்,
    “சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
    திருக்குற ளுறு தியும் தெளிவும் பொருளின்
    ஆழமும் விரிவு மழகுங் கருதியும்
    “எல்லையொன்றின்மை“ யெனும் பொருளதனைக்
    கம்பன் குறிகளால் காட்டிட முயலும்…“
    என்றும் மூன்றாவது முறையாகவும்,
    “கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
    ………….
    “சேரன் தம்பி சிலம்பை யிசைத்ததும்
    தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்”
என்று சுயசரிதையில் நான்காவது முறையாகவும், தமது இதயத்தில் நிலவிய தமிழ்ப் பெருமையின் அஸ்திவாரங்களைச் சுட்டிக்காட்டினார்.   

    கம்பர், திருவள்ளுவர், இளங்கோ ஆகிய இம்மூவர்தான், தமிழ்ப் பண்பாடு கால நடை கடந்து சென்று கடைந்தெடுத்த அமுதக்கலசங்கள் என்பது பாரதி முடிவு.

    “தமிழ்நாட்டு நாகரீகம்“ என்ற கட்டுரையில்-
    “ஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்திலே சொன்னேன்” என்றவர் இந்திய நாட்டின் அரசுரிமையை இழந்தாலும் ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம்” என்று மெக்காலே சொன்னதை நினைவுறுத்தி -
    இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்; சிலப்பதிகாரமியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்” என்று மற்றுமொரு வலியுறுத்துகிறார்.
    மேலுக்கு இந்த மூன்று  கவிமேருகளின் உயர்வினால் தான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று தாம் உறுதி கொண்டிருந்ததாக பாரதி ஒரு விளக்கம் தருகிறார்.
    எத்தகைய சூழ்நிலையில்?
   இக்கேள்விக்கு -
    “……ஒரு பதினாயிரஞ்
    சனிவாய்ப்பட்டுத் தமிழச் சாதிதான்
    உள்ளுடை வின்றி  யுழைத்திடு நெறிகளைக்
    கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்
    என்று பதிலுறுத்தார் பாரதி.

        அதற்கு மேலே எழுதிய வரிகளில், மகாகவியின் தமிழுள்ளம் அனுபவித்த நோவுகள் , தன் இனம் படும் பாடு கண்டு துடிதுடித்த உணர்வுகள் எந்தத் தமிழனையும் உலுக்குவது போன்ற வேகத்துடன் வெளிப்பட்டன.
    “ஆப்பிரிக் கத்துக்குக் காப்பிரி நாட்டிலுந்   
    தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
    பூமிப் பந்தின் கீழ்புறத் துள்ள
    பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
    தமிழ்ச் சாதி தடியுதை யுண்டும்
    காலுதையுண்டும் கயிற்றடியுண்டும்
    வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
    செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
    பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதந்
    நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்”
என்று கடல் கடந்தும் இல்லம் துறந்தும், பிழைக்க வழி தேடிச் சென்ற தமிழ்கூறு நல்லுலகின் துன்பங்கேட்டுத் துடித்தவர் பாரதி.
    தமிழரின் துன்பம் பாரதியின் சொந்தத் துன்பம்
    தமிழரின் பெருமை அவரது சொந்தப் பெருமை.
    தமிழச்சி தவிர வேறொருத்தி அழகு என்பதைக் கேட்கவோ பார்க்கவோ முடியாத அளவு வருத்தம் கொண்டது பாரதியின் தமிழ்பற்று.
    தமிழ்மொழியின் மரணம் குறித்த ஜோசியம் சொல்லும் போக்கு, அவர் காலத்திலும் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டு தமது தென்றலுடன் பிறந்த பாஷை என்ற கட்டுரையில்-
    “பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரை குறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு மேலிட்டவர்களாகித்   தமிழ்மொழியே இறந்து போய்விட வேண்டுமென்றும் கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம்”  என்று குறிப்பிட்டார்.
    தமிழருக்குத்  தன்னம்பிக்கை தேவை என்பதால் தமிழருக்கு என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்-
“உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள் தெய்வங் கண்ட கவிகள், அற்புமான ச ங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்ப நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத் தர்மிஷ் டர் பெருகுகின்றனர்” என்று எழுதினார்.
    மேலும் நம்மைத் தெளிவாக்க….
    “உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார்” என்று எழுதினார்.
    தாம் வாழ்ந்திருப்பதற்கு என்ன நோக்கம் என்று குறிப்பிடுகையில் பாரதி “அந்தசக்தி” என்ற கட்டுரையில்-
    “தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவ நாம் உயிர் தரிக்கின்றோம்” என்று தெளிவாக எழுதினார்.
    வெறும் உணர்ச்சியால் மட்டுமல்ல; அறிவினாலும் ஆய்ந்து பார்த்து அச்சக்தி எதனால் எல்லாம் அதிகப்படும் என்பதை உணர்ந்து தமிழுக்கு அறிவித்தார்.
    “ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை,. மற்போர் முதலியவற்றிலே பழகுதல், பாடுதல் தர்க்கம், வாதம், தவம், பிரம்மச்சரியம் சுத்தம் முதலியவற்றால் ஓர் ஜாதிக்குச் சக்தி அதிகப்படுத்துகிறது” என்றார்.
    “மனம் வாக்கு செயல் மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளும் புறமும் மாசில்லாது செய்யப் பழகவேண்டும். பயம், ஸந்தேஹம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தியேற்படும்” என்று தெளிவு வேறு அறிவித்தார்.
    தமிழர் வீழ்ச்சிக்கும், அவர்கள் சக்திச் சிதறலுக்கும் இரண்டு காரணங்களை பாரதி மிகத்தெளிவாக அறிந்திருந்தார். முதலாவது சாதி வேற்றுமை. அடுத்து பொய்ச் சாத்திரங்களில் நம்பிக்கை. இவை இரண்டும் ஒழிய வேண்டுமென்று அடிக்கடி எச்சரித்தார்.
    “தமிழருக்கு“ - கட்டுரையில்
    “(தமிழா) ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே, “ஜாதியிரண்டொழிய வேறில்லை” என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள் ” என்றார்.
    ஜாதிக் குழப்பம் கட்டுரையில் -   
    “ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்வம்,ஸஹோதரத்துவம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால் அது சாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா?” என்று மனம் உழன்று கூறினார்.
    பொய்ச்சாத்திரங்களில் நம்பிக்கை தமிழருக்கு வலுப்பதைப் பற்றிய கவலை பாரதிக்கு ஏற்பட்டிருந்தது.
    பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
    பொய்மை யாகிப் புழுவென மடிவர்.
என்று “தமிழச்சாதி” கவிதையில் எச்சரித்துவிட்டு எது சாத்திரம் என்று சுட்டிக்காட்டி மேலும் ஓர் அபாய அறிவிப்பு தந்தார்.
    சாத்திரம் - (அதாவது, மதியிலே தழுவிய     கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்    ஈங்கிதிற் கலக்க மெய்திடு மாயின்    மற்றதன் பின்னர் மருந்தொன் றில்லை“
தமிழருக்கு கட்டுரையிலோ -
    “தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை - எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய், இவற்றை நீக்கிவிடு” என்றும்
    “தமிழா எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை; எதிர் நின்று கேட்பதெல்லாம்பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய், பி்ந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து கொள்ளாதே காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஓர் கணக்கு ஏற்பட்டிருக்கின்றதா?” என்று கேட்டுவிட்டு ஓர் உவமையும் சொன்னார்.
    “தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லிய மூடர்கள் உப்புநீரைக் குடிக்கிறார்கள்" என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.
    “வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு புராணங்களைக் கேட்டு பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே” என்று மேலும் இடித்துரைத்துவிட்டு,
“வருங்காலம்” கட்டுரையில் -
    “உலகம் எவ்வளவு தீரமாக மாறிக்கொண்டு வருகிறதென்பதை தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.  ஒவ்வொருவரும் சிற்சில விவரங்களில் மனத்தைப் பதிய வைத்துக் கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விஷயங்களிலும், அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை” என்று அறிவித்தார்.
    பரந்த உலக அனுபவமும், பல நாடுகளில் சென்று வாழ்வதும் நமது அற்பச் சண்டைகளை விலக்கக் கற்றுத்தரும்;  புதிய வழிகாட்டும் என்பதிலே அவருக்கு மகத்தான நம்பிக்கை உண்டு.
    அதே கட்டுரையில் -
    “வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப்படுங்கள், தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே புத்திமான்களே!பயணத்து க்குப் பணம் தயார் செ ய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட வேண்டாம்” என்று ஊக்குவிக்கிறார்.
    இந்தச் சிந்தனையின் எதிரொலிதான் தமிழ்த் தாய் பாட்டிலே -
    “மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசையொங்கும்”
    என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லமோ!
    சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் -  கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!
என்ற வரிகளில் கேட்கிறது.
    தமிழச்சாதி கட்டுரையில் “விதியே விதியே விதியே தமிழச்சாதியை என் செயக்கருதியிருக்கின்றாயடா” என்று சட்டையை உலக்கிக் கேட்பது போல் கேள்வி கேட்டாலும்,
நெஞ்சமும் தெய்வபக்தியும் தன்னல மறுப்பும் உடைய பல மேலோர்களை இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாக மாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புன்னோய் சீக்கிரத்திலே மாறிப்போய்விடும். வானத்திலே
 துந்துபியொலி அதிரக் கேட்கின்றோம்” என்று நம்பிக்கை வாக்கே வழங்குகிறார் அந்தசக்தி கட்டுரையில்,
    அதுவே தமிழருக்கு அவர் வழங்கிய  வாழ்த்தாகும்.

Friday, 24 January 2014

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

.வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கர்ஜித்தார் லோகமான்ய திலகர். அவரது கர்ஜனையின் கதிர் வீச்சுகளை குதூகலத்தோடு உள்வாங்கியவர் பாரதி.
    தனது “அடங்கி நட“ கட்டுரையிலே ஒரு வாக்கியம் எழுதினார். மேதைமை ததும்பும் வாக்கு அது.
    “தனக்குத்தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது“
    தேசிய விடுதலை இயக்கம் என்ற மக்கள் சக்தி உருவாக்கிய மின்சார வெள்ளத்தில் திளைத்து நீந்தி முன் வரிசைக்குச் சென்று அந்த வெள்ளப் போக்கிற்கு பாதை சமைத்தவர் பாரதி.
    அவரது தேசிய கீதங்கள் தேசபக்தியுள்ள ஒவ்வொருவர் மனசிலும் அன்றும் இன்றும் இனி என்றும் புதிய உத்வேகத்தை, காலத்தால் மாற்ற முடியாத கற்பூரச் சுடரொளியை எழுப்புவன.
    “எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
    ஈனமோ? - அவ - மானமோ?
என்றும்,
    “சதையைத் துண்டுதுண் டாக்கினு முன்னெண்ணம்
    சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
    இதயத்துள்ளே யிலங்கு மஹாபக்தி
    யேகுமோ? நெஞ்சம் - வேகுமோ?
என்றும் ஆங்கிலேயரைக் கேட்டவர் பாரதி.
    இந்த வீரசுதந்திர வேட்கை இந்தியருக்கு உலகிலே கிடைத்த அவமரியாதை கண்டு கொதித்த, அந்த மனக் கொதிப்பை தமது கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம், என்ற கட்டுரையில் அன்றைய இந்தியர் நிலை பற்றிய பாரதி வெளியிட்டிருக்கிறார்.
    இந்தியன் எங்கே போனாலும் நித்திக்கப்படுகிறான். யாரும் நம்மீது காறித்துப்புகிறார்கள். உலகத்தோர் இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர் மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியரும் இலேசாக ஆளலாம் என்று நம்பியிருக்கிறார்கள்“.
    இப்படி இந்தியர் அவமானப்படுவதில் மனம் கொதித்த பாரதிக்கு நமது பலவீனம் புரிந்திருந்தது. கொள்கையின்மை என்பதுதான் அது. அதனால்தான் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கொள்கை வேண்டும். அதில் உறுதி வேண்டும் “ என்று வலியுறுத்தினார்.
    ஒரு கொள்கை என்பதென்ன? என்ற கேள்வியைப் போட்டு அதற்கு பதிலையும் மேற்படி கட்டுரையில் நிலைநாட்டினார்.
    “ஒரு கொள்கையாவது, பகுத்தறிவின் துணையால் செய்யத்தக்கது இது. செய்யத்தாகதது இது என்று ஒருவன் அறிந்து முன்பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய, மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம் என்றார்.
    அப்படி கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கும் சக்தி வாய்ந்த மனிதர் பலர் நம் நாட்டில் உண்டு என்று ஒப்புக்கொண்ட பாரதி ஒரு முக்கியமான கருத்தை அடுத்துக் குறிப்பிட்டார்.
    “கொள்கைகளை அவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு; அவற்றின்படி நடத்தல் வேறு .யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன் படி நடக்க முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப்பிரேதந்தான்.
    அடுதுது கொள்கையற்ற மானிடப்பதர்கள், கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப்பதர்கள் என்று இரு வகுப்பினர் நம் நாட்டில் உண்டு எனக் கண்ட பாரதி.
    இவ்விரண்டு வகுப்பாரால், ஜனசமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது. அவர்கள் இருக்கும் வரை சோற்றுக்குக் கேடாகவும் நிலத்திற்குப் பளுவாகவும் இருந்துபோ வார்கள்“ என்று மன்னித்து விட்டு -
    “தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத்தின்னும் அரிப்பூச்சிகள்  போல ஒரு வகுப்பார் தலையெடுத்திருக்கிறார்கள்“ என்று எச்சரிக்கை செய்துவிட்டு மேலே தொடர்கிறார்.
    “அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமான கொள்கைகளை அடைத்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவ்வற்றை ஸாங்கோ  பாங்கமாகப் போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக்கொள்கைகளைக் கேட்டுப் பிரமித்து இவ்வரிய கருத்துகளுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் மனமே மனம், இம்மஹான்கள் அவதார புருஷர்களே“ என்று தம்மைப் போற்றும் பொழுது, அப்பூஜிதையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து வெற்றியடைகிறார்கள்“
    பாரதி மேலும் தொடர்கிறார்
    “ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும் சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன“
.......ஆபத்து வந்த காலத்தில் நான் சொன்னபடி நீங்கள் செய்ய வேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது“ என்று ஜனங்களை ஏமாற்றுகிறார்கள் அதிலும் கேடாய், தங்களுடைய கொள்கைகளை ஜாலவித்தைக்காரன் போல் மாற்றி விடுகிறார்கள்“
    அத்தகைய மனிதர்கள் பற்றியும் அவர்களால் நாட்டிற்கு நேரும் விளைவுகள் பற்றியும் பாரதிக்கு ஒரே கருத்துதான்.
    “இம்மஹா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா, ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக்கூடாதா மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள்“
    அத்தகைய மனிதர்கள் பற்றியும் அவர்களால் நாட்டிற்கு நேரும் விளைவுகள் பற்றியும் பாரதிக்கு ஒரே கருத்துதான்.
    “இம்மஹா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள்.“
    நமக்கு கொள்கை வேண்டுவமேயல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை“ என்று அடித்துச் சொல்லும் பாரதி அவர்கள் பற்றி ஒரு தீர்ப்பு வழங்குகிறார்.
    “ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானால் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம், அவனை எவ்வகையானாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும்.
    தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன் தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானால், அவனை மானிடராய் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனினும் பதரான மனிதன் ஒருவன் இருக்க முடியாது“
    அதே கட்டுரையில் பாரதி -
    “சுதந்திரக் கொள்கையை உடையவன் தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச் சித்தமாயிருக்க வேண்டும்“.
    இரட்டை வேடமிடும நடிப்புச் சுதேசிகள் பற்றிய கவிதையில் பாரதி சீறும்போது, அந்த நேர்மைக் கனல் ஜ்வலிக்கிறது.
    கூட்டத்திற் கூடி நின்று
    கூவிப் பிதற்றலன்றி
    நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
    நாளில் மறப்பாரடீ - என்றவர்
“கண்களிரண்டிருந்தும் காணுந்திறமையற்ற பெண்களின் கூட்டமடீ, தேவியர் மானமென்றும் தெய்வத்தின் பக்தியென்றும் நாவினாற் சொல்வதல்லால் நம்புதலற்றாரடீ, மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதமைகள் போலுயிரைப் பேணியிருந்தாரடீ எனக் கனன்றார்.
    அவர்கள் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்ட ஊமைச்சனங்கள், ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்கள், மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரியதென்றெண்ணும் ஈனர், பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை அறியாப பாமர்ர்!“ என்று தீர்ப்பெழுதுகிறார்.
    வீரசுதந்திரம் வேண்டி நிற்பது மாபெரும் பொறுப்பு, அதற்குபின் மற்றொன்று நினைப்பது வீழ்ச்சி என்பது பாரதி கட்சி.
“ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்து வாரோ?“
என்று கேட்ட பாரதிக்கு ஆழ்ந்த ஞான அமைதியோடு கேட்க மற்றொரு கேள்வி அதே பாடலில் பாக்கியிருந்தது.
    பிறந்தவர் யாவரு மிறப்ப துறுதியெனும்
    பெற்றியை யறிந்தாரேல் - மானம்
    துறந்தற மறந்துபின் னுயிர்கொண்டு வாழ்வது
    சகமென்று மதிப்பாரோ?
வீரசுதந்திரம் விண்ணின் ரவி (சூரியன்) அவருக்கு அதை விற்று விட்டு வெறும் மின்மினி கொள்ளும் பேதைமை மறுத்து-
    கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்
    கைகட்டிப் பிழைப்பாரோ?
என்று “மண்ணின் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பையிழப்பாரைக் கண்டு மனம் நொந்து கேட்டார்
    “கண்ணிரண்டும் விற்று சிற்திரம் வாங்கினாற்
    கைகொட்டிச் சிரியாரோ?
    வந்தே மாதரமென்று வணங்கியபின்
    மாயத்தை வணங்குவரோ?“
பாரதியின் சுதந்திர தாகம் மாட்சிமை வாய்ந்தது
கண்ணீராற் காக்கப்பட்டது. அது எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளந்த வண்ண விளக்கு.
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணி.
    எது இல்லையென்றால் வாழ்வு இல்லையோ அந்த வான்மழை.
    இப்படியெல்லாம் அவர் போற்றிய சுதந்திரத்தை வேண்டி, மனம் கரைந்து உருகிப் பெருகி, சர்வேசனிடம் அவர் விடுத்த பிரார்தனையிலே
    “வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
    பொய்க்கோ வுடலும் பொருளுயிரும் வாடு றோம்   
    பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுவே?
என்று அவரது சுதந்திர தாகம் கதறித் துடித்த துடிப்பிலே, நேர்மையின் உள்ளொலி கேட்கிறது.
    பாரதி தவிர மற்ற எந்த தேசீய கவிக்கும் பாரத நாட்டின் பெருமைகள் பற்றி இவ்வளவு பூரிப்பு இருந்திருக்குமா? என்று ஐயம் ஏற்படுவது போல் அவர் மனம் ஆனந்தத்தில் விம்மி இருக்கிறது. பாரதமாதா பாடலில்
    “முன்னை யிலங்கை அரக்கர் அழிய
    முடிந்தவில் யாரடை வில்“
    “காண்டிவ மேந்தி உலகினை வென்றது
    கல்லொத்த தோளெவர் தோள்?“
    “சாகும்பொழுதில் இருசெவி குண்டலம்
    தந்த தெவர்கொடைக்கை?“
    “போர்க்களத் தேபர ஞானமெய்யக் கீதை
    புகன்ற தெவருடைவாய்?
-என்று இதிகாசப் பெருமைகளை பாரத மாதாவின் பெருமைகளாகக் கருதிப் பூரித்தார் பாரதி.
    இத்தனை பெருமைகளும் எந்த மணிக்கயிற்றால் வலுவுற்று நிற்கிறதோ அந்த ஒற்றுமை என்ற கயிற்றை அவர் முக்கியமானதாக மதித்தார்.
    அந்த பக்கம் அறுந்தால் என்ன நேரும் என்பது நினைவூட்டப்பட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
    “ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
        ஒற்றுமை நீங்கி அனைவர்க்கும் தாழ்வே
    ஒன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
        ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?“
-என்ற எக்காலத்துக்கும் பொருந்தும் ஞானவாசகம் சொன்ன பாரதி -
    அவர் வேண்டி நின்ற வீரசுதந்திரத்தைக் காப்போர் வரிசையில் செந்தமிழ் நாட்டுப் பொருநர், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்து தெலுங்கர், தாயின் சேவடிக்கே பணி செய்திடும் துளுவர்.
    “கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பூதலம் முற்றிடும் வரையும், அறப் போர் விறல் யாவும் மறப்புறும் வரையும், மாதர்கள் கற்புள்ளவரையும், பாரில் மறைவரும் கீர்த்தி கொண்ட ரஜபுத்ர வீரர் -
    “பஞ்சநத்த்துப் பிறந்தோர், முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார், துஞ்சும் பொழுதினும் கூட தாயின் பதத்தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும், ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு சொன்னார்.
    “எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
        யாவர்க்கு மந்த நிலைபொது வாகும்
    முப்பது கோடியும் வாழ்வோம் -வீழில்
        முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்“
என்பதைவிட வேறு எந்த வாசகம் ஒருமைப்பாடு போற்றிவிட முடியும்?
    தமது கட்டுரையில் -
    “மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும் பசியென்றும், தாமமென்றும் நித்திரையென்றும் பாராட்டாதே. இந் சரீரமே அநித்தியம் என்றால் அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா?“ என்று கேட்ட பாரதி நமக்கு வழங்கிய பிரதான அறிவுரை.
    “இந்திரிய அவஸ்தைகளுக்கு அஞ்சியாவது, இந்திரிய சுகங்களைக் கோரியாவது, தேசிய தர்மத்தைக் கைவிடாதே“ என்பது தான்.
    அவரது தேச தரிசனம், பாரத நாட்டின்மீது செல்கையில் எங்கள் அன்னை பயங்கரி, எங்கள் மந்தித் தெய்வதம், பாரத்தேவி, பாரத ராணி, வயிரவி, பாரத நாயகி, ஆரியராணி என்று சக்தி தரிசனமாக மலர்கிறது.
    பாரத நாட்டின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை மாபெரும் நம்பிக்கை, இமயமலை போன்ற நம்பிக்கை அது.
    “ எல்லாரு மமரநிலை யெய்துநன்முறையை
    இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
    இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
    இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க
-என்று மும்முறை உறுதி கூறுமளவு வைரம்பாய்ந்த்து அவரது நம்பிக்கை.

Thursday, 23 January 2014

சக்திதனக் கேயுடைமை யாக்கு

சக்தி தனக்கே கருவியாக்கு
    ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும், இந்திய ஆன்மீகச் செழுமையை உலகறியச் செய்பவருமான ஜெர்மன் மேதை டாக்டர் மாக்ஸ் முல்லர் ஒருமுறை எழுதினார்.
    “பிரம்மமானது ஈஸ்வரனாகவோ, பிரபுவாகவோ வரையறுக்கப்பட்ட ஒரு தனிக்கடவுளாகவோ வழிபடப்படலாம். அதே சமயம் ஒரு மூர்த்தித்துவத்தில் உள்ள எல்லா வரம்புகளையும் எல்லா வடிவங்களையும் எல்லா நிலைகளையும் கடந்து உயர்ந்து நிலை பெற்றும் இருக்கலாம்“
    ஷண்மத ஸ்தாபனமாக பிரிக்கப்பட்ட அறுவடிவ வழிபாடுகளில் ஒன்றானது சாக்தம்.
    குணங்களற்றது (நிர்க்குணம்). குணமுடையது (சகுணம்) என்று பிரம்மத்தை ஒரு பார்வையாகப் பார்க்கும் வகையில் சாக்தம் சகுணமாகப் பிரம்மத்தைப் பார்த்தது.
    “பிரம்மம் ஒன்று அல்ல; பிரமங்கள் இரண்டாகும்“ என்று சில விமர்சகர்கள குறை கூறுவதற்கு வழிவகுத்தது இந்தப் பிரிவினை.
    இதற்கு தத்துவப் பேரறிஞர் டாக்டர் திரு. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் தமது ‘’The Insights of Advaita’’ என்ற நூலில் ஒரு தெளிவான விளக்கம் அளித்தார்.
“அபரப் பிரம்மம் என்ற தாழ் நிலையில் கடவுள், குறிப்பிடப்படும் போதுஈ பிரம்மமானது கடவுள் நிலைக்குத் தாழ்ந்து விட்டதாகப் பொருள் படாது. ஆனால் அக்கடவுள் ஒரு சார்நிலை அனுபவத்தின் தாழ்மட்டத்திலிருந்து நோக்கப்பட்ட பிரம்மம் என்பதே சரி.
    “பிரம்மத்திற்கு இரு வடிவங்கள் உண்டு. இரண்டு பிரம்மங்கள் இல்லை. தன்னுள் தான் அமைந்திருப்பது போன்ற பிரம்மம், உலகோடு தொடர்புடைய தன்மையில் இருப்பது போன்ற நிலையில் உள்ள பிரம்ம்ம் இவையே அவ்வடிவங்கள்.
    முன்னால் கூறப்பட்டது வரம்பிடப் படாத பிரம்மம். பின்னால் கூறப்பட்டது நாம, ரூப, மாற்றங்களால் வரையறுக்கப்பட்ட பிரம்மம்“
    பின்னால் கூறப்பட்ட வகையில் அமைந்த வழிபாடே சக்தி வழிபாடு. இது “primordial Energy”  எனக்படும் பிரபஞ்ச இருப்பு, இயக்கம் இவற்றுக்கு ஆதாரமாய் அமைந்த ஆதி சக்தியை ஒரு வடிவில் காணச் செய்யும் பிரம்ம தரிசனம் ஆகும்.
    மகாகவி பாரதி, தீவிரமான சக்தி வழிபாட்டுக்காரர்.
    தமது “சக்தி தர்மம் என்ற கட்டுரையில்
    “ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
    உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்திகள் இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்று சொல்லும்“ என விவரித்தார்.
    மகாகவி 38 பாடல்களில் சக்தியை வெவ்வேறு விதமாய் வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்று பூலோக குமாரி. இது சமஸ்கிருத்த்தில் எழுதப்பட்டது. லிபி மட்டும் தமிழ்.
    இவை தவிர சக்தி என்று ஒரு வசன கவிதை ஆக 39.
    இவை போக பாரததேவி என இந்திய நாட்டைத் தேவி வடிவமாகவும், சுதந்திர தேவியாகவும் உருவகித்துப் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 9.
    நாட்டை தேவி என்று பெண் தெய்வ வடிவில் உயர்த்திப் போற்றும் போதும், பாரதியின் சக்தி வழிபாடே பின்னணி ஆற்றலாக நின்று நாட்டை சக்தி வடிவமாக்கிக் காணுகின்றது.
    சக்தி வழிபாட்டைப் பற்றி பாரதி ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு “சாக்தம்“ என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
    “பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்த்து. ஹூணர்கணை எல்லாம் துரத்தி, மஹா கீர்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி, ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செயத விக்கிரமாதித்ய ராஜா மகாகாளியை உபாஸனை செய்தவன்.
    “அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆராதனைத்தை மேற்கொண்டவள்.
“சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்“
சக்தி எது? அதன் செயல்கள் யாவை?
    போற்றியகவல் - பாவிலே பாரதி தொடங்கும் போதே
    “போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
    மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய்,
    காப்பாய்!“ என்று எழுதினார்.
எது சக்தி என்பதற்கு விடை வரவில்லையே?
“கனியிலே சுவை, காற்றிலே இயக்கமும் கலந்தாற் போல அனைத்திலும் கலந்திருப்பது புதியதிற் புதுமை; முதியதில் முதுமை. உயிரிலே உயிர்; இறப்பிலும் உயிர் உண்டெனும் பொருளில் உண்மை. என்னுள்ளே நான் எனும் பொருள்.
    நானையே பெருக்கித் தானென மாற்றுஞ் சாகாச் சுடர். கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடல். பிணியிருள் கொடுக்கும் பேரொளி ஞாயிறு யான் எனதின்றி இருக்கு நல்யோகியர் ஞானமாம் மகுட நடுத்திகழ்மணி.
    செய்கை, ஊக்கம், சித்தம், அறிவாய் நின்றிடும் தாய்“
    சக்தி வசன கவிதையிலே
    “சக்தி முதற்பொருள்
    பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு
    சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை
    சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு; ஒரு ஸ்வரஸ் தானம்.
    சக்தியைப் பற்றி எழுத எழுத, மின்னலின் கொடியோட்டம் பாய்வது போல் மகாகவியின் கற்பனை விரிந்து பாய்கிறது.
    பாரதி சக்தி வழிபாட்டைப் பற்றி மாக்ஸ்முல்லரும் மகாதேவனும் குறிப்பிட்டதையே தமக்கே உரித்தான தீவிரம் கலந்து சொல்கிறார்.
    நவசக்தி மார்க்கம் கட்டுரையில்-
    “பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்த மதஸ்தர் நிர்க்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல், பெண்பாலாக்க் கருதி “ லோக மாதா“ என்று போற்றினார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “என் தாய் காளி“ என்று தான் பெரும்பாலும் பேசுவது வழக்கம்.
    பராதியின் சக்தி வழிபாடு ஒரு கோணத்தில் தூய்மையான குழந்தையின் நம்பிக்கை போல் அவ்வளவு வெள்ளையாகத் தோற்றமளிப்பது உண்டு.
    தமிழ்க் விதையில் ஓர் உரையாடலையே கவிதையாக்கி, கவிஞர் என்ற மூர்த்தித்துவத்தையே வெளிப்படுத்தாது. கவிதையில் எங்குமே தலையே காட்டாமல் ஒரு மகத்தான பொருளை உணர்த்திய பாட்டு என்று நாம் கருதும் பாட்டு வண்டிக்காரன் பாட்டு. அதில் ஒரு சிறிய நாடகப் பாங்கு. ஒரு பின்னணி. ஒரு மின்வீச்சு இத்தனையும் தென்படும்.
    அதில் தென்படும் குழந்தை நம்பிக்கை நம் நெஞ்சில் வேல் போல் பாய்ந்து கண் கலங்கி விடுகிறது.
பாட்டைப் பார்ப்போம்
   

“காட்டு வழிதனிலே - அண்ணே!
        கள்ளர் பயமிருந்தால்“? - “எங்கள்
    வீட்டுக் குலதெய்வம் - தம்பி
        வீரம்மை காக்குமடா!
    “நிறுத்து வண்டியென்றே -  கள்ளர்
        நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்
    கறுத்த மாரியின் பேர் சொன்னால்
        காலனும் அஞ்சுமடா!“
    சக்தி என்ற வசன கவிதையில் சகல செயல்களும் சக்தியின் அசைவுகள் என்று நிறுவிய மகாகவி வாழ்க்கைக்கே நறுக்குத் தெறித்தாற் போல் ஒரு பொருள் கூறுகிறார்.
    “வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல் இதன் பயன் இன்பமெய்தல்“ என்றார்
    சக்தியின் பிறப்பு பற்றி இந்த கவிதையில் -   
    “இவன் எப்படி உண்டாயினாள்? அதுதான் தெரியவில்லை.
    இவள் தானே பிறந்த தாய்; தான் என்ற பரம் பொருளிடத்தே“ என்று அனுமானம் கூறுகிறார்.
    சக்தி வழிபாட்டில் மூழ்கி முக்குளித்துக் கரையேறும் மனமின்றித் திளைத்தவர் பாரதி.
    கதைகள் சொல்லிக் கவிதையெழுதவோ காவியம் பல நீண்டன காட்டவோ, விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவும் நாடகச் செய்யுளை எழுதவோ -
    நாட்டு மக்களின் பிணியும் வறுமையும் நையப் பாடவோ, நாட்டி மானுடச் சாதியை ஒன்றென்று கொண்டு வைய முழுவதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்டவோ, பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் மின்கவி ஓதவோ -
    அவருக்கு உள்ளத்தில் அழைப்புக்கள் வந்து கொண்டே இருந்தன.
    எனினும் -
    “ அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவுந் தனக்னெக் கேட்கின்றாள்“ என்றே அவர் உள் மனத்தில் சக்தியின் குரல் வற்புறுத்திற்று.
    “யாது மாகி நின்றாய் - காளி
        எங்கு நீ நிறைந்தாய்
    தீது நன்மை யெல்லாம் - காளி
        தெய்வ லீலை யன்றோ?“
என்று அவர் சித்தம் சக்தியிலே தெளிந்த்து.
    மனித அறிவை சக்திப் பார்வையில் பாரதி பார்த்தவிதமே புதியது
மகா காளியின் புகழ் பாடலில்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமலர் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை
எழுதினார்.
    அடைக்கலப் பாட்டுக்கள் பல எழுதியவர் பாரதி, முருகனிடம், விநாயகரிடம், சரஸ்வதியிடம், லஷ்மியிடம், கண்ணனிடம் எனப் பல தெய்வ வடிவங்களிடமும் சரணம் கோரி, அடைக்கலம் வேண்டி அவர் பாடியதுண்டு. எனினும் முத்துமாரி பாடலில் -   
    “உலகத்து நாயகியே - எங்கள் முத்து
        மாரியம்மா - எங்கள் முத்துமாரி
    உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள முத்து
        மாரியம்மா எங்கள் முத்துமாரி!“
தொடங்கும்போதே சரணாகதி தத்துவத்தின் உட்கருவைத் தொகுகின்ற உருக்கம் பிற பாடல்களினும் மிஞ்சி நிற்கிறது.
    மனம் வெளுக்க வழியில்லை
    பேதைமைக்கு மாற்றில்லை
    பல கற்றும் பலகேட்டும் பயனொன்றுமில்லையடி
    நிலையெங்கும் காணவில்லை
என்று போட்ட வரிகளில் இதய முரசு அதிரும்  நாதம் எழுதுகிறதே!
    காணி நிலம் வேண்டும், என்று பாரதிக்கு பராசக்தியிடம் தான் கேட்கத் தோன்றுகிறது. அவ்வளவு உரிமை.
    பராசக்தியின் முடிவைப் பிடித்து உலுக்குவது போல் -
    சொல்லடி, சிவசக்தி! - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுலையோ
என்று கேட்கிற அதிகாரம்தான் வருகிறது. வரிசையாகச் சில கோரிக்கைகளை பராசக்தி முன் வைத்துவிட்டு இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? என்று மிடுக்கும் அங்கேதான் வெளிப்படுகிறது.
ஊழிக் கூத்து கவிதையில்
“காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆனந்தக்கூத் திடுவாய்
அன்னை, அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை
என்று
அக்கூத்திலே களித்துக் குதி போடுகிறது மகாகவியின் சித்தம்.
    குதிபோட்டுத்தானே கூத்தாடவும் தொடங்கிய அனுபவம்தான் சக்திக் கூத்து கவிதை.
    தகத் தகத்தகத் தகதகவென் நாட்டோமோ? - சிவ
    சக்தி சக்தி சக்தி யென்று பாடாமோ?
எனச் சொல்ல போடும் கூத்து நம் மனக்கூத்தாகிறது.
    சக்தி த்த்துவத்தின் மூலக்கனல் சுவையை அனுபவித்து நமக்குப் பரிந்துரைப்பது போல்பாரதி மேலே நாலு வரிகள் போடுகிறார்.
    “புகப்புகப் புகவின்பமடா போலெலாம்
    புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
    குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது
    குழந்தை யதன் தாயடிக்கீழ் சேய்போலே!“
சக்தி வழிபாடு எவ்விதம் இருக்கவேண்டும்?
    ஐம்புலன்களையும், கண்டம், தோள் என்ற உடல் உருப்புக்களையும், அகம், மனம், சித்தம், நெஞ்சம், மதி என உள்ளத்தின் பல தோற்றங்களையும் சக்தி தனக்கே கருவியாக்கு என்கிறார் பாரதி.
    அது போதவில்லை என்று உணர்வு மேலிடுகிறது.
    மதி, அகம் இரண்டையும் சக்தி தனக்கே உரிமையாக்குக, உடமையாக்குக.
    இப்படி சர்வ சமஸ்தமான ஆத்ம சமர்ப்பணம் செய்தால் வரும் விளைவுகளாகப் பாரதி கூறும் பயன்கள் பற்பல.
    அவை அனைத்திலும் உச்சமானதை மட்டும் ஒரு குறிப்பிற்காகக் காண்போம்.
அகம்,
சக்திதனக் கேயுடைமை யாக்கு - அது
தன்னையவன் கோயிலென்று காணும் - அகம்
சக்திதனக் கேயுடைமை யாக்கு - அது
தன்னையெண்ணித் துன்பமுற நாணும்
சக்தி (2) வசன கவிதையில் -
“கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்
மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் -
    இச்செயல்களை நமக்கு மஹாசக்தி அருள்புரிக“ என்று வேண்டும் போது, சக்தி வழிபாட்டின் வரமாக அவை கோருவதிலேயே அவர் இலக்கியக் கொள்கை வெளிப்படுகிறது.

பக்தி நெறியில் ஒரு புதிய வெளிச்சம்

பயனுண்டு பக்தியினாலே
மனம் எப்போதும் ஒரு கூடு கட்டுகிறது. இழை இழையாக, வலை வலையாக, முடிவேயின்றி மனம் கூடு கட்டிக்கொண்டே கேட்கிறது ஓய்வே இல்லாத எண்ணங்களின் கூடு
    சிலந்தி கட்டும் கூடுபோல், விடுபட முடியாமல் அதனுள்ளேயே ஒரு வலைப்பின்னலுக்குள்ளேயே  சுற்றிச் சுற்றி வந்து மனம் தவிக்கிறது. அதை மீட்க, அதை விண்ணுக்கு உயர்த்த மற்றொரு சக்தி தேவை.
    அந்த சக்தியையே பக்தி என்கிறார்கள்
    வேறொரு விதமாக சொல்லலாம்
    மனம் எண்ணங்களின் அலைகள்  சுருளும் கடலில் சிக்கித் தவிக்கிறது. எதுவோ, யாரோ கரம் நீட்டி கரை சேர்க்க வேண்டும். பொய்யா மொழியில் திருவள்ளுவர்  சொன்னது.
    பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்
வேறுவிதமாகவும் வள்ளுவர் சொன்னார்
   
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கூடு கடல், நீச்சல், என ஒரு கட்டும், அதிலிருந்து விடுபடும் ஒரு முனைப்பும் என்றே பக்தியை வளையமிட்டுப் பார்ப்பது ஒரு போக்கு.
மனம் என்பது வெறும் அலைச்சல் வளையமா? எங்கிருந்து அந்த வளையம் புறப்படுகிறது? அது வாழ்நாளின் ஆற்றலை சுற்றிச்சுழன்று வீணாக்கிவிடுகிறதா? இதற்கு மாற்று கிடையாதா? உண்டு. எப்போது? எப்படி?
    மனசின் எண்ண உற்பத்தி ஸ்தானத்திலேயே அதன் கர்ப்பக் கிரகத்திலேயே வேறொரு சக்தியை நிர்மாணித்து விட்டால் அது சொல்ல முடியாத ஆற்றலை உருவாக்கிவிடும்.
    எண்ணச் சக்கரத்தின் இருசாக ஓர் தெய்வத்தையும், உணர்வுகளையே அதன் சுழற்சியாகவும் அமைத்து விட்டால் மனசின் உழற்சியிலிருந்து பரிபூரண விடுதலை, இப்படி நினைப்பது மற்றொரு போக்கு.
    தத்துவ  தரிசனங்கள் பல, பக்திக்கு பல விதமாக வியாக்கியானம் கூறுவார்கள் மகான்கள், பண்டிதர்கள்.
    நம்மைப் பொறு த்தவரை பக்தி என்பது என்ன? பக்தி ஏன் தேவை? இவை முக்கியமான வினாக்கள்;
    மகாகவி நம்பிக்கை என்ற கட்டுரையில் எழுதினார்.
    “பக்தியாவது தெய்வத்தை நம்புதல்“ என்று
தெய்வத்தை ஏன் நம்ப வேண்டும்
நம்பிக்கையே வாழ்வின் உயிர்நாடி
“தன்னை நம்பலாமே! தெய்வம் எதற்கு? தெய்வம் மனிதக் கற்பனை தானே, தான் என்பது நிஜமல்லவா? நம்புவதற்கு நாம் போதாதா? நம்மையன்றி வேறொன்றை நம்புவது எப்படி சாத்தியம்?“
-இப்படி கடவுள் மறுப்பாளர் கூறுகின்றனர்.
அவர்கள் எல்லாம் ஒரு கூட்டமாகச் சேர்ந்து எங்கள் கூட்டத்திற்கு வந்துவிடு என்று விடுகிற கோரிக்கை தான் அது. அந்தக் கூட்டமில்லையேல் அதற்கொரு தலைவன் இல்லையேல் அவர்கள் நிராதரவாகி விடுகிறார்கள்.
    முதலில்நா ம் என்ற கூட்டத்திலிருந்து நான் என்பதைப் பிரித்தெடுப்போம்.
    இந்த நான் கூட ஒரு கற்பனையே, பிறந்தது  முதல் நான், நான், நான், என்று நம்மைச் சூழ்ந்து பல பிற நான் களின் கூட்டத்தொகுதி உருவாக்கியதே நமது நான்.
    அதாவது இந்த “நான்“ என்பது சூழ்நிலையால், காலமும் பிற இயற்கைச் சக்திகளும் ஒரு குறிப்பிட்ட சூழலில் நம்மை இருக்க விதித்ததில் உதித்தது தான்.
    சூழல்மாறினால் இந்த “நானும்“ மாறும். தேவைக் கேற்ப இது மாறி மாறிச் செல்லும்.
    இதையே பாரதி தாம் இயற்றிய விநாயகர் நான் மணி மாலையில்
    “நான் என்றோர் தனிப்பொருள் இல்லை நானெனும் எண்ணமே வெறும் பொய் என்றான் புத்தன்“ என்று எழுதினார்.
    நான் என்ற பொய்க் கற்பனையை தெய்வம் என்ற நிலைப்பொருள் மீது மாற்றியமைப்பதே தெய்வ பக்தி எனலாம்.
    பக்தியினால் என்ன பயன்?
    பக்தியினாலே - இந்தப்
    பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!“
என்று “பக்தி“ பாடலில் பாரதி எழுதுகிறார்.
    பக்தியினால் சித்தம் தெளியும், செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும், வீரர் உறவு கிடைக்கும், மனத்திடைத் த்த்துவ முண்டாகும், நெஞ்சில் சஞ்சலமும் நீங்கி உறுதி விளங்கிடும் என்கிறார்.
    “நம்பிக்கை“ கட்டுரையில் தெய்வத்தை எப்படி நம்புவது, அதனிடத்தில் என்னென்ன கேட்பது என்று விவரம் சொல்கிறார். கூறியது கூறல் எனும் பிழை பொறுத்து மீண்டும் காண்போம்.
    குழந்தை நாயை நம்புவது போலவும்
    பத்தினி கணவனை நம்புவது போலவும்
    பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும்
    தான் தன்னை நம்புவது போலவும்,
இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப் பற்றி நினைக்க வேண்டும்.
“நோய் வந்தால் அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணி வேண்டும்.
“செல்வம் வேண்டுமானால் தெய்வத்தினிடம் கேட்க வேண்டும்.
“கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா மங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்க வேண்டும்!
    தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்ப வேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை.
    பக்தி பக்குவமடைந்த பிறகு தான் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இது கர்ம விதி!“ என்று தெளிந்த அறிவுடன் பாரதி கூறுகிறார்.
    நாம் மனம் தளந்துவிடக் கூடாதே என்பதற்காக பாரதி மேலும் எழுதுகிறார்.
    “தெய்வத்தினிடம் கேட்ட பயன் கை கூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப் படமாமல் தெய்வ பக்தியையும், அதனால் உண்டாகும் ஊக்கத்தையும் முயற்சியையும் துணையாக் கொண்டு நடக்க வேண்டும். விதியின் முடிவுகளை தெய்வ பக்தி வெல்லும்.
    எந்த அதிகாரத்தை வைத்து எப்படிச் சொல்கிறோம் என்று பாரதிக்கே ஒரு கேள்வி பிறந்துவிட்டது போலிருக்கிறது. அடித்துச் சொல்வது போல் பின்வரும் வரிகளை எழுதுகிறார்.
“இந்த உலக முழுமைக்கும் ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கை கூடும். நம்பு; கேள்.
     இதற்கு அடுத்து மறவாமல் ஒரு முக்கியமான வாக்கினைப் போடுகிறார். இதுவே கர்மயோகத்தை பக்தி யோகத்துடன் இணைக்கும் உபாயச் சங்கிலி.

    “நம்பு; கேள்“ என்று எழுதிய பாரதி தொடர்ந்து “ஓயாமல்தொழில் செய்து கொண்டிரு பயனுக்கு அவசரப்படாதே; தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்“ என்றார்.

    அடுத்து தமக்கு சாஸ்திர, புராண, சரித்திர நிரூபணங்கள் சொல்லும் பொறுப்பு உண்டு என்று உணர்ந்து தொடர்கிறார்.
    “தெய்வம் பிரஹ்லா தனை ஹிரண்யனிடமிருந்து காத்தது. முதலை வாயிலிருந்து  யானையை விடுவித்தது, பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது“
    விக்கிரமாதித்தனுக்கும், காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராத புகழும் கொடுத்த்து. இவ் விதமான தெய்பக்தியை ராமானுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார்“ என்றார்.
    பாரதி பாடல்களை மேலெழுந்த வாரியாகப் படித்துச் செல்வோரும், அவரது படைப்பு முழுவதையும் நுணுகி ஆராயும் கூர்த்த அறிவுடன் படிப்போரும் கூட அவரது உள்ளம் பரம பக்தியென்ற ஆதார சுருதி மீதே இயங்குகிறது என்று எளிதில் முடிவுக்கு வருவர்.
    பக்தியை, பாரதி வெறும் குருட்டு நம்பிக்கையாக, மூடப் பிடிவாதமாக்க் கொண்டவர் அல்ல, அதே சமயம் அந்த குருட்டுப் பக்தியையும் அவர் இகழ்வதில்லை.
    “அடங்கி நட“ என்ற கட்டுரையில் -
    “பக்தி குருட்டுப் பக்தியாக இருந்தாலும் அதிலொரு வெளியழகுண்டு, இவ்வழகை நமது நாட்டில் யாத்திரை செய்யும் அன்னியர் சிலர் கண்டு மெச்சுகிறார்கள்“ என்று எழுதிச் செல்கிறார்.
    ஆனால் வெறும் குருட்டுப் பக்தி மட்டும் வைத்து சும்மாயிருப்பதை அவர் சம்மதிக்கவில்லை.
    “பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம் “ என்ற கட்டுரையில் முயற்சியில் பலன் என்ற தலைப்பில் எழுதும் போது-
    “...தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கும். தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும்...“
    இதற்கு சாதாரண ஒரு வீட்டு உவமையை பாரதி காட்டி வைக்கிறார்.
    “ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால், நாம் அதன் மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனம செலுத்துகிறோம் அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு, அதை எந்த விதத்திலாயினும் சமாதானப்படுத்த முயலுகிறோம்.
    “அது போல் நாம் ஒரு காரியத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தனப்பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்“ என்று எழுதுகிறார்.
    இவ்வளவு சொல்கிறவர் என்ன சொல்கிறார்?முயற்சியைத் தானே வாழ்த்துகிறார்; இதற்கு நடுவில் தெய்வம் வேறு எதற்கு ஒரு வீண் சுமை என்ற எண்ணம் நம்முள் எழுகிறது.
    அதை நீக்க பக்தியின் பயன்களை இரு கூறுகளாக்கி ஆக்கபூர்வமாகவும் அது நிகழ்த்தும் மாற்றங்களை பக்தி பாடலில் விளக்குகிறார்.
    அறிவு பூர்வமாகச் சொல்லவரும் போது -
    காமப் பிசாசைக் குதிக்கால் கொண்டடித்து விழுத்திடலாம். தாமஸப் பேயைக் கண்டு தாக்கி மடித்திடலாம்; எந்நேரமும் தீமையை எண்ணி அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து விடலாம்.
    ஆசையைக் கொல்வோம், புலையச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம். கெட்ட பாசமறுப்போம், சோர்வுகள் போகும், சோம்பலழியும், வீம்புகள் போகும், பொய்ப் பாம்பு மடியும் என்கிறார்.
    ஆக்க பூர்வமாக க்கூறும்போது-
    நல்ல சேர்வைகள் சேரும் - பல
    செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
    ......................
    கல்வி வளரும் - பல
    காரியங் கையுறும், வீரியமோங்கிடும்
    ......................
    ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்
    சொல்லுவ தெல்லாம் - மறைச்
    சொல்லினைப் போல பயனுள தாகும், மெய்
    வல்லமை தொன்றும், - தெய்வ
    வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்திடலாம்
என்று பட்டியலிட்டுச் செல்கையில் மகாகவி,
உண்மைப் பக்தியினாலே
என்ற சொல்லைச் சேர்க்கிறார்.
உண்மைப்பக்தி.
    வித்து முளைக்கும்  தன்மையென உணர்ந்த அந்தப் பேருணர்வு “வெடிப்படு மண்டத்திடி பல தாளம போட்ட“ மகாகவியின் உள்ளத்தின் மற்றோர் பரிமாணமாக வெளிப்படுகிறது.
    பக்திக்கும் வித்துக்கும் ஒரு தொடர்பு கண்டு, பக்தியையும் செயலையும் ஒருங்கிணைந்து வித்து முளைக்கின்ற அந்த நிதானத்திலே ஒரு பொறுமை கண்டு கவிதை செய்த மகாகவி -
    “முயற்சியின் பயன்“ என்ற தலைப்பில் கட்டுரையிலே
    “பல்லாயிர வருஷங்களாக, நாம் அடிமைப்பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை.
    “உங்களுடைய வழி இதுதான்“ என்று சட்டம் ஏற்படுத்தி வைத்த்து.
    இப்போது நாம் “இப்படி இருக்கமாட்டோம்“ என்றால்
“சரி, ஆனால் பாருங்கள், உங்களுக்காக இன்னொரு வழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்“ என்று கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.
“நான் தூங்குவேன்“ என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம் “ஸுகமாகத் தூங்கு. உனக்கு மெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்“ என்று சொல்லி நம்மைத் தூங்கப் பண்ணுகிறது.
    “மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்“ என்றால் “ எழுந்திரு குழந்தாய், இதோ பார்; உனக்கு இந்த பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன். அந்த வழியே போய் நீ நன்மை அடை“ என்கிறது - என எழுதுகிறார்.
    ஆக பக்தியை செயல்கள் புரியத் தேவையான இயக்கு சக்தியாக, தீமையற்ற மனோ விசாலமாகவே பாரதி புரிந்து கொண்டிருக்கிறார் என்ற தெளிவு நம்முள் எழுகிறது.
    செயல்களையே புரிந்து கொண்டு இன்பத்தை மறுத்துத் துறந்துவிடு என்று கூறவில்லை.
    பக்தியின்  இரு வழிகளை பாரதி அறிந்தவர்
    நவராத்திரி - 2 என்ற கட்டுரையிலே அதை குறிப்பாகவே சொல்லி விடுகிறார்.
    முக்திக்கு மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இகலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி இன்பங்கள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொள்வது மற்றொரு வழி.
    இதற்கு இலக்கியத்திலிருந்தும் இதிகாசத்திலிருந்தும் பாரதி மேற்கோள் தருகிறார்.
    “சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்ச்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்? ஸ்ரீ கிருஷ்ணனிடத்திலே கேட்டான் . ஸ்ரீ கிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்“
    இன்பம் மனிதனுக்கு வேண்டுமா வேண்டாமா? இதிலே தெய்வத்தின் தீர்மானம் என்ன? இந்த வினாக்களுக்கு பாரதி தரும் விடை -
“இகலோகத்தில் எல்லா விதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத் திறமை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம்.
    “தெய்வமே, நான் தூங்குகிறேன், நீ எனக்கு மாம்பழம் கொடு“ என்று கேட்கவில்லை.
    “தெய்வமே! தெய்வமே! மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்கு புண்ணியமுண்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது? சொல்லு.பாடுபச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம், ஆனால் மாம்பழம் கொடுதுதுத் தீர வேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுதுதினாய்?“ என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி, தெய்வம் உதவி செய்யும்“
    தெய்வத்தின் மீது கொள்ளவேண்டிய பக்தி பற்றி பாரதி கொடுத்த புதிய பார்வை, ஆண்மையாகச செயல் புரிந்து, இடைவிடாது நாடித்தேடி இலக்கை எட்டும் உயிர்வேகமுள்ள பார்வை.
    பக்தி நெறியில் ஒரு புதிய வெளிச்சம் கூட்டிய பார்வைதான் பாரதி பார்வை.

உயிர்த்தீயினிலே வளர்சோதியே

உயிர்த்தீயினிலே வளர்சோதியே
அக்கினி, தீ, நெருப்பு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இயற்கைச்சக்தி, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று மட்டுமல்ல.
    ஆற்றல் அனைத்திற்கும் அதுவே குறியீடு, தீ அழிப்பது மட்டுமல்ல, ஆக்குவதும் அதுவே, பசித்தீயை சமஸ்கிருதம் ஜாடராக்னி என்று வழங்கியது. பசித் தீ அணைய தீயின் உதவியின்றி எப்பொருளையும் சமைக்க முடியாது. சமைக்கப்படும் எப்பொருளும் தீயினால் விளைந்ததே.
    அது மட்டுமல்ல-
    செல்வங்களுக்கெல்லாம் தாயகம் தீயே, அதன் உதவியின்றி எந்த உலோகத்தையும் செல்வத்தின் செலாவணி யாக மாற்ற இயலாது.
    பெய்யும் மழையே கூட, கதிரவனின் எரி தழல்கள் இன்றிப் பெய்யாது. பொருள்களாகத் திரண்டிருப்பதெல்லாம் தீயின் உறங்கும் வடிவங்கள். உறைந்த ஒடுக்கங்கள் தான்.
    கண் காணும் செல்வங்கள் அனைத்துக்கும் தாய் என்று இந்துக்களால் போற்றப்படும் திருமகள் அக்னியின் குமாரி என்று ஸ்ரீஸூ க்தம் குறிப்பிடுகிறது.
    தீயின்றி மனித வாழ்வு எவ்வகையிலும் நடைபெறாது. அதனால் தானோ என்னமோ, மகாகவி தன் கவிதை, வசனம் இரண்டிலும் தீயின் மீதுள்ள மாளாக் காதலை தம் படைப்பு முழுவதும் வெளியிட்டுள்ளார்.
    கண்ணனைக் கதாதலி கண்ணம்மாவாக்கிப் பாடிய காதல் பாட்டு தான் கண்ணம்மாப் பாட்டுக்கள் அவற்றில் மூன்றாவது பாட்டில
-    கண்ணம்மாவென்ற பேர்சொலும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர்சோதியே - என்றன்
சிந்தனை யேஎன்றன் சித்தமே!
என இறுதி வரிகளைப் போட்டார்
    காதலியின் பெயர் உயிர்த் தீயினிலே வளர் சோதி என்ற புதுமை தமிழிலக்கியத்தில் மட்டுமல்ல; உலக இலக்கியங்களிலும் தேடினாலும் கிட்டுவது அருமை.
    அது கண்ணம்மாவானால் என்ன? குமர வடிவேலன் ஆயின் என்ன? குளக்கரை இருந்து பக்தரின் மனக்கரை பரவும் கற்பக விநாயகன் எனினும் என்ன?
    மகாகவிக்கு எல்லோர் மீதும் கொண்ட பக்தி தீயின் வடிவம்தான்
    அந்த பக்தி மூலம் தீ இதயத்தில் வளர வேண்டும் என்பது அவர்வேட்கை.
“பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன்“ என்று மணக்குள விநாயகர் மீது விநாயகர் நான் மணி மாலை பாடவரும் பாரதி வாயே திறவாத மௌனத்திலிருந்து விநாயகர் மலரடிக்கு
    நீயே நிகர்த்தொளி வீசுந்தமிழ்க்கவி செய்குவனே என்று தான் முடிவெடுக்கிறார்.
    அக் கணபதி தாளைக் கருத்திலே வைப்பதால் வரும் குணம் பலவாம். கேளீர் என்று நம்மை அழைத்துச் சொல்லும் பாரதி, பக்தியின் பயனாக
    உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும் அக்னி தோன்றும். ஆண்மை வலியுறும் என்கிறார்.
    பாரதிக்கு விநாயகரைப் போற்றும் போது
    “சுடரே போற்றி“ என்றுதான் கூறத் தோன்றுகிறது.
    அவரிடம் அபயம் கேட்கும்போதோ-
    “வேதச்சுடரே, மெய்யாங் கடவுளே,
    அபயம் அபயம் அபயநான் கேட்டேன்“
என்றுதான் கேட்க முடிகிறது.
    கணபதியிடம் கேட்கும் வரம் கூட-
    நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
    உளமெனு நாட்டை யொருபிழை யின்றி
    ஆள்வதும் பேரொளி ஞாயிறே யனைய
    சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும் தான்.

    முருகன் பாட்டிலோ மகாகவிக்கு
    “துணிவே கனலே, வருக“
என் வரவேற்கும் ஆற்றலாக முருகன் தென்படுகிறான்.
    “தீவளர்த் தேபழ வேதியர் - நின்றன்
    சேவகத் தின்புகழ் காட்டினார்“
என்று வேதியர் வேள்வியிலே வெற்றி வடிவேலன் சேவகம் தென்பட்டதை மகாகவி உணர்ந்தார்.
    கிளிப்பாட்டிலே கூட-
    தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணியனை நேயத் துடன் பணிந்தால் - கிளியே நெருங்கித் துயர் வருமோ?
என்று குமரன் வடிவம் தூய பெருங்கனல் என்று குறிப்பிடுகிறார் மகாகவி.
    தீயைத் தன் வாழ்வு முற்றிலும் குறியீடாக்க் கொண்டு வாழ்ந்தவர் பாரதி.
    தீ அவருக்கு அறிவின் ஒளியாய்; உணர்வின் மின்னலாய் மட்டுமல்ல;  ஒரு பேரின்பமாகவே தோன்றியிருக்கிறது இல்லாவிட்டால்
    “தீக்குள் விரலை வைத்தால் நினைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா“என்று பாடத் தோன்றுமா?
தீயின், ஒளியின், தீராத இளமையின் முழுவடிவமாக மகாகவிக்குத தென்படுவது ஞாயிறு வசன கவிதையிலே-
அறிவு எது போல் சுடரும்?
அறிவுத் தெய்வத் தின் கோயில் எது? என்று கேட்டுவிட்டு விடையும் சொன்னார்.
ஞாயிறு
    மகாகவி தன் அக்னிமோகம், தீ வேட்கை ஏன் என்பதற்கு மிகத் தெளிவாக ஞாயிறு வசன கவிதையிலும் விளக்கம் தருகிறார்.
    நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி மின்னல்; இரத்தினம், கனல், தீக்கொழுந்து.
    இவையெல்லாம் நினது நிகழ்ச்சி என்று வர்ணித்துச் செல்பவர் உவமைகளின் மாணிக்கம் போன்ற ஒரு வரியை அடுத்துப் போட்டார்.
கண் நினது வீடு
கண்ணை ஒளியின் வீடு என்ற உவமையே என்னமாய்  ஒளி வீசுகிறது!
    அவர் மேலே சொல்வது தான் பாரதியின் இதயக்கனல் முழுவதற்கு உட்கருவாக, அக்கினிக் குஞ்சாக இருந்திருக்கும் என்று புரிய வைக்கிறது.
    அறிவு நின் குறி;  அறிவின் குறி நீ
    தீயின் பெருமைகளை அடுத்த வரிகளில் மேலும் விரிவாகச சொல்கிறார்.
நீ சுடுகின்றாய் வாழ்க! நீ காட்டுகின்றாய் வாழ்க!
உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய் வாழ்க!

    பாரதியின் தீ வணக்கம், ஆதிகால வேத ரிஷிகளின் வேள்விகளையும் யோக யக்ஞங்களையும் அடியொற்றியது என்று கூறலாம்.
    அவரது ஆழ்ந்த வேத, உபநிஷத் ஞானத்தின் எதிரொலி என்று கூறுவதும் தவறாகாது.
“ஆரிய தரிசனம்“ பாடலில் -
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்“
என்றும் தமிழ்கவிதையில் ஒரு புதிய பரிசோதனை வடிவமாக ரிஷிகளும் அசுர்ர்களும் மாற்றி மாற்றிப் பாடுவது போல் எழுதப்பட்ட அக்னிஹோமம்
 பாடலிலும் இது தெளிவாகப் புலப்படுகிறது.
    பாரதியின் இலக்கியப் படைப்புக்களில் கவிதையும் பிற இலக்கிய வடிவங்களும் முடிவான எந்த குறிக்கோளை உடையன என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாட்டு “அக்னி பகவான்“ பற்றி அவர் பாடிய யாகப் பாட்டு.
    இதில் மகாகவியின் வேத ஞானம், மகரிஷிகளின் சித்த சுத்திக்கு நிகராக ஓங்கி நிற்பதைப் பாடல் முழுவதிலும் பார்க்கலாம்.
    தீயை அவர் விதவிதமான பேரிட்டு அழைக்கிறார். அவர் நெஞ்சில் எந்தெந்த உயிர் விருப்பங்களின் குறியீடாக ஒளி வீசுகிறது என்பது திரைகளெல்லாம் விலகிய திவ்விய தரிசனமாகப் புலப்படுகிறது.
    தேவி மகன், திறமைக் கடவுள், செங்கதிர் வானவன், விண்ணோர்தமைத் தேனுக்கழைப்பவன், சித்தத் துணிவு, மானுடர்கேள்வன், தீமை அழிப்பவன், நன்மை சேர்த்துக் கொடுப்பவன், ஆரியர் நாயகன், உருத்திரனின் அன்புத் திருமகன் என்றெல்லாம் தீயை அழைக்கிறார் மகாகவி.
    வெறும் நாமாவளி போதாது என்று விண்டுரைக்கும் ஆவலில் மேலே தொடர்கிறார்.
“கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
காட்டை யழிப்பவனை.“ என்கிறார்.
    இன்னும் தீயின் பெருமை சொல்ல வேண்டும் அதனால் பாரதி -
“நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்சலஞ் சேலென்று  கூறி யெமக்குநல்
லாண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனை“ என்கிறார்
ஊம்ஹும்ம்ஹுஹுஹும். இன்னும் தீயின் பெருமைகளில் முக்கியமானவைகள் விடுபட்டிருக்கின்றன என்று பாரதிக்குத் தோன்றுகிறது.
    மேலே எழுதுகிறார்.
“அச்சத்தைச் சுட்டங்கு  சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையுங் காதலும்
ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏறுந் தவக்கனலை“ என்றார்
அச்சத்தைச் சுட்டெரித்து மிச்சச் சாம்பலுமின்றிச் செய்யும் அக்கினித்தேவன் பற்றி மகாகவி மேலும் ஓரிரு சபாஷ்கள் பாக்கியுண்டு எனவே தொடர்கிறேன்  என்கிறார்.
    “வானகத்தைச் சென்று தீண்டுவ னிங்கென்று
    மண்டி யெழுந்தழலைக் - கவி
    வாணர்க்கு நல்லமுதைத் தொழில்
    வண்ணந் தெரிந்தவனை“ என்றார்
    இப்போது பாடலின் முதற் பகுதிக்குச் செல்வோம் அங்குதான் கவிதை முதலான சகல கலை வடிவங்களில் குறிக்கோள் பற்றி பாரதி பேசுகிறார்.
    தீ வளர்த்திடுவோம் - பெருந்
    தீ வளர்த்திடுவோம்
எந்தத் தீ? எதன் குறியீடான தீ? எந்த நோக்கத்தில் வளரும் தீ?
    ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
    அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
    ஆசை வளர்த்திடுவோம் - களி
    யாவல் வர்த்திடுவோம்
    கலைகளின் தாயான சரஸ்வதியை வேண்டும் போது பாரதிக்குக் கேட்கத் தோன்றும். ஒரே வரம் ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தில் கடைசிப் பாடலில் தென்படுகிறது.
    தீயினை நிறுத்துவீர் - நல்ல
        தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
கோகுலத்தில் கண்ணன் பிறந்தான், வரவேற்க வந்தவர் யார்?
    மகாகவி கண்ணன் பிறப்பு பாடலில் முதலில் எழுதுகிறார்.
    அக்கினி வந்தான் - அவன்
    திக்கை வளைத்தான் - புவி
    யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்;
    துக்கம் கொடுத்தாள்
    தமது படைப்பு நெடுகிலும் “தீச்சுடர் தேடி, தீயை வாழ்த்தி, தீக்கனல் வீசி நடக்கும் பாரதி, ஞாயிறு வசன கவிதையிலே தீயின் வகைகளைச் சொல்கிறார்.
தீ எரிக
அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ
விரதத் தீ, வேள்வித் தீ
சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ
இவை யனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றைக் காக்கின்றோம்
தீயே, நீ எமது உயிரின் தோழன்,
உன்னை வாழ்த்துகின்றோம்
    அக்கினி மின்னல் வடிவமானது. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே, எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றதைக் கண்ட பாரதி அதனைப் போற்றினார். அதனிடம் வேண்டினார்.
நமது விழிகளில் மின்னல் பிறந்திடுக
நமது நெஞ்சிலே மின்னல் வீசிப் பாய்க
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக
நமது பாட்டு மின்னலுடைத் தாகுக
நமது வாக்கு மின்போல் அடித்திடுக
மின் மெலியதைக் கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையை வளர்த்திடுக
நமது உயிர்த்தீயினிலே சோதி வளர்த்திடுக.
நமது உயிர்த் தீயினில் சோதி வளர்த்திடும் தூய விருப்பம் தான் பாரதியின் அக்கினி வேட்கை.

தியானம் என்பது என்ன?

 மனமென்னும் பெண்ணே வாழி நீ

    மனம் உள்ளவன் மனிதன், மனிதனை மற்ற உயிர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பகுத்தறிவு மனத்திலிருந்தே பிறப்பது.
    எளிய மனிதர் முதல் ஆற்றல் வாய்ந்த பெரிய மனிதர் வரை மனத்தின் ஆட்சியின் கீழ் இயங்குபவர்கள் தான்.
    சலிப்பது, கொதிப்பது, சீறுவது, உயர்வது, தாழ்வது, சாந்தமுறுவது, குளிர்வது, கனல்வது என்ற இன்னும் பற்பல நிலைகள் கொண்டது மனம். இது சாதாரணமாக அனைவருக்கும் உரியது.
    பாரதி போன்ற மகாகவியின் மனம் எத்தகைய கொதி நிலைகளில் சிக்குண்டு தவித்திருக்கும் என்று ஊகிப்பது கடினம்.
    எனினும் மனம் பற்றி அவர் எழுதியுள்ள கவிதைகளிலும் கட்டுரைகளிலும் ஆங்காங்கே அவர் தம் மனத்தோடு நிகழ்த்திய துவந்த யுத்தம் புலப்படுகிறது.
    தமிழ் இலக்கிய வரலாற்றில் தேவாராம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், பட்டினத்தார், தாயுமானவர், வள்ளலார் என பக்தி மார்க்கத்திலோ, ஆத்மீகத் தேட்டத்திலோ திளைத்த கவிஞர்களின் கவிதைகளிலே மனத்தோடு கிளத்தல் என்று கூறப்படும் மனசோடு உரையாடும் கவிதைகள் உண்டு.
    ஆயினும் மனத்தையே ஒரு தனிப்பாடல் பொருளாக்கி, மேற்கத்திய அறிவியல் முறைப்படி அதை ஓர் அறுவை மேஜையில் கிடத்தி, அதன் பண்புகளை ஆராயும் போக்குள்ள கவிதை எதுவும் பாரதிக்கு முன் இருந்தில்லை எனலாம்.
    தமது “மனப்பெண்“ என்ற கவிதையில் பாரதி மிகவும் ஆழ்ந்தும், வரிவாகவும் மனத்தின் போக்குகள் ஒன்றுவிடாமல் பட்டியலிடுவது போலவும் விவரிக்கிறார்.
    ஏனோ பாரதிக்கு மனத்தைப் பெண்ணாகவே மதிக்கத் தோன்றியிருக்கிறது. ஆத்ம விழிப்பு என்ற பண்பு ஆண்மை வடிவமாகவும், அதை எட்டவிடாது செய்யும் மனம் பெண்மை வடிவமாகவும் அவரால் மதிக்கப்பட்டிருக்கலாம்.

    மனமெனும் பெண்ணே! வாழி நீகேளாய்
    ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
    அடுத்ததை  நோக்கி யடுத்தடுத துலவுவாய்
என்று மனதை அழைத்துச் செல்ல வந்தவர் எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாக, அடங்காப் பிடாரியாக மனம் படுத்தும் பாட்டை விவரிக்கிறார்.

    நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
    விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்

மனம் எப்போதும் புதுமையை விரும்புவது  என்று நாமறிவோம். ஒரு புதுமையை மனம் ஏற்குமா? அதை விரும்பும், ஆனால் தன்னகப்படுத்திக் கொள்ளுமா? சந்தேகம் தான். புதுமையைக் கண்டாலே ஒதுக்கித் தள்ளுகிற போக்கும் கூட மனதிற்கு உண்டு. அவ்வாறே பழமையையே என்றும் ருசித்து அதிலேயே மூழ்கித் திளைக்குமா என்றால் அப்படியுமில்லை.
மனதில் பழமைக்கும் புதுமைக்கும் என்றென்றும் ஒரு போராட்டம் தான். இதை அழகாகப் பாரதி படம் பிடிக்கிறார்.

புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமைகா ணோமெனப் பொறுமுவாய் சீச்சீ!
என்று சீறுகிறார். அருவெறுப்பில் பிறந்த அந்த “சீச்சீ!“ கூட மனதின் வேறோர் இயல்புக்கு உரியது.

    பிணத்தினை விரும்புங்  காக்கையே போல
    அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
    இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்
என்று அழிவுக்கு அஞ்சி அழிந்து, மாண்ட காலத்தில் போய் மீண்டும்  மீண்டும் உழலும் பண்பிற்கே அந்த அருவறுப்பை உரியதாக்கினார்.
    மனம் என்ற பொருளினைப் பற்றி, அதனோடு பேசுவது போலவும், அதன் வாயிலாக பிறருக்கு உணர்த்துவது போலவும் பாரதி எழுதிய கவிதைகள் ஏழு.
    இந்த ஏழு கவிதைகளிலுமே மனம் படுத்தும் பாடும் அதை வெல்ல பாரதி செய்யும் முயற்சிகளும் தெளிவாகத் தெரிகின்றன.
    மனத்தின் உளைச்சலே பாரதியின் பிரதான பிரச்சினையாக இருந்திருக்குமோ என்று ஐயம் நமக்கு ஏற்படுதகிறது.

    “நெஞ்சோடு சொல்வது“ என்ற கவிதையில் இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே எதற்குமினி யுளைவதிலே பயனொன்றில்லை; என்றவர்-
  
மனத்திற்குக் கட்டளை என்ற கவிதையில்
    “பேயா யுழலுஞ் சிறுமனமே
    பேணா யென்சொல்“ என்னும் போதும் சரி, பாடலின் இறுதி வரிகளில்
    “ஓயா தேநின் றுழைத்திடுவாய்
    உரைத்தேன் அடங்கி உய்யுதியாய்“
எனும் போதும் சரி, மன உறழ்சியோடு  அவர் செய்த மல்யுத்தம் தெரிய வருகிறது.
    அச்சமும், அதன் பிள்ளையான கவலையும் தான் மன உழற்சிக்குக் காரணங்கள் என்று மகாகவி ஒரு தெளிவுக்கும் வந்து விடுகிறார்.
“தீ வளர்த்திடுவோம்“ பாடலில்
“நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை“-
“அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனை“-
    என்று அக்னி பகவானை வாழ்த்தும்போது அவரது இரு முக்கியப் பார்வைகள் வெளிப்படுத்துகின்றன.
    அச்சத்தை உள்ளத்தினுள் நுழைய விட்டுவிட்டால் அது மனிதனை என்ன பாடுபடுத்துகின்றது என்பதை நேரடியாகப் பார்த்து மனம் குமுறியவர் பாரதி.
    சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய கால கட்டத்தில், மக்களின் அச்சம் அவரை அவ்வளவு மனம் குமுற வைத்திருக்கிறது என்பது பாரத ஜனங்களின் தற்கால நிலைமை“ என்ற பாடலில் தெளிவாகப் புலப்படுகிறது.
    நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
        நிலைக்கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
    அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
        அஞ்சாத பொருளில்லை அவனியிலே
    வஞ்சனைப் பேய்க ளென்பர் - இந்த
        மரத்திலென் பார்; அந்தக் குளத்திலென்பார்
    துஞ்சுது முகட்டி லென்பார் - மிகத்
        துயரப்படுவார் எண்ணிப்பயப்படுவார்
என்றார்.
    சிப்பாயைக் கண்டு, ஊர்ச்சேவகனைக் கண்டு, துப்பாக்கி பிடித்த ஒருவன் வெகு தூரத்தில்  வருவது கண்டு, மந்திர வாதியைக் கண்டு, அரசியலைக் கண்டு, எவனோ அணிந்திருக்கும் ஆடையைக் கண்டு அச்சம் மக்களை ஆட்டிப் படைப்பதைக் காண பாரதி மனம் வெந்தது.
    அதனாலேயே போகின்ற “பாரதத்தை  சபித்தல்“ கவிதையில் போகவேண்டிய தீமைகளில் பட்டியலில் ஏழாவதாக
    “கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ“ என்றார்.
    கவலையின் பிறப்பிடம் அச்சம் என்பதை தீர்மானமாய் அறிந்ததாலேயே
 மகாகவி பாரதி தமது அச்சமில்லை பாடலில்
    இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்
    துச்சமாக யெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்
    பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
    இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
    கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசு போதினும்
    நந்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
    பச்சையூ னியைந்தவேற் படைகள் வந்த போதினும்
என்று அடுக்கிச் சென்றவர் உச்ச கட்டமாக-
 உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை என்று எழுதினார்.
    அச்சமுள்ளவன் எவனையும் பாரதி அறிவாளி என்று மதிக்கத் தயாரில்லை. அவன் எவ்வளவு படித்திருந்தாலும் சரி! இதைத் தனது “தைரியம்“ கட்டுரையில்- “எடுத்ததெற்கெல்லாம் அஞ்சும் இயல்புடைய கோழை ஒருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளி யென்றும் சொன்னானால் அவனை நம்பாதே! அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு அவனிடம் பின்வருமாறு சொல்-
“அப்பா, நீ ஏட்டைத் துளைக்கும் ராம பாண பூச்சியைப் போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒருவேளை வாழ்நாளை வீணாக்கியிருக்க்க் கூடும்.  ஆனால் அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்ய் என்று எழுதிவிட்டு மேலும் தொடர்கிறார்.
    ஆம், அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன் தான். விபத்துக்கள் வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் அவற்றையெல்லாம் போக்க முயற்சி  செய்கிறானோ அவனே ஞானி“
    பயம் ஒரு பேய் என்பது பாரதியின் கணிப்பு. அஞ்சி ஓடவேண்டிய பேய், இதை “ஜயபேரிகை“ பாடலில் தெளிவாகச் சொன்னார்.
    “பயமெனும் பேய்தனை அடித்தோம்  - பொய்ம்மைப்
    பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்“
பயம் என்ற பேய் ஏன் பிடித்திருக்கிறது? பொய்மை சூழ்ந்ததால்..
 பொய்மை ஒரு பாம்பு. அந்த பாம்பு கடித்தால் பயம் என்ற பேய் பிடிக்கிறது.
பொய்மை என்று பாரதி எதைச் சொல்கிறார்?
நாம் பேசும் பொய்யையா? அல்லது இல்லாத ஒன்று இருப்பது போல் தோன்றும் பெய்யையா?
இதற்குப் பதிலையும் அவரே தனது அடங்கி நட என்ற கட்டுரையில் தந்திருக்கிறார்.
“பொய் எது? தன்னை ஸர்வத்திலிருந்தும் பிரிவாகக்  காணுதல். உலகமும் தானும் ஒன்றெனக் காண்பதே உண்மை அறிவு.
பயம் தோன்றுவதற்குக் காரணமே பிரித்துக் காணும் கோட்பாடு. இந்த கோட்பாட்டின் பின்னணியில் தான் மகாகவியின் பகைவனுக் கருள்வாய்“ ஒளி தருகிறது.
புகை நடுவினில் தீயிருப்பதையும் சிப்பியிலே நல்ல முத்து விளைவதும், குப்பையிலே குருக்கத்தி வளர்வதும் பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்வதை மகாகவிக்குப் புலப்படுத்துகிறது.
ஆனால் எல்லாம் ஒன்று என்று நிறைவு வந்து விட்டால் மட்டும் போதாது; அதற்கு மாறான கருத்து ஒரு குறுவடிவில் வந்து நுழைந்தாலும் எல்லாம் பாழாகும்.
அதையே தான் “பகைவனுக் கருள்வாய்“ பாடலின் பிற்பகுதியில் தெளிவுறுத்திக் காட்டுகிறார்.
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைலாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?- நன்னெஞ்சே
தாழ்வு பிறர்கெண்ணத் தானழி வானென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்கெண்ணத் தானழி வானென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே
இதனையே தெளிவு பாடலில் மகாகவி
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல
நினைத்தபின் புத்தி மயக்கமுண்டோ?
என்று கேட்டார்.
    மனத்தோடு நடத்தும் உரையாடலில் எல்லாம் ஒன்று எனக்கண்ட மெய்யறிவு வாய்க்கப் பெற்றால் உள்ளங்குலையாது .வேதனை இல்லை என்றார்.
    உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
    உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
    வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
    வேதனை யுண்டோடா?-என்றும்
“ஆன்ம வொளிக் கடல் மூழ்கித் திளைப்பவர்க்கச்சமு
முண்டோடா?“ என்றும் கேட்டார்.
மனத்தோடு நடத்தும் உரையாடலில் எல்லாம் ஒன்று எனக்கண்ட மெய்யறிவு வாய்க்கப் பெற்றால் உள்ளங்குலையாது வேதனை இல்லை என்றார்.
உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைய துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்மொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா? - என்றும்

“ஆன்ம வொளிக் கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா?“ என்றும் கேட்டார்.
அச்சத்தைத் தொடர்ந்து கவலை வரும். அதையே பாரதி கவலை - நடந்ததைப்பற்றி, நடக்காததைப் பற்றி,இனி நடக்க விருப்பதைப்பற்றி என்று பல்வேறு வடிவம் எடுக்கும். அதை யுணர்ந்து மகாகவி நெஞ்சொடு சொல்வது கவிதையில் முதலில் நயமாகச் சொல்லிப் பார்க்கிறார்.
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி யிடைநமது வசத்தி லில்லை
மன்னுமொரு தெய்வத்தின் சக்தியாலே
வையத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்

மனமோ, மனமுடைய மனிதர்களோ அதைச் சட்டை செய்வதாகக் காணோம் என்ற சீற்றம் வந்து அதட்டிச் சொல்கிறார்; மனத்திற்கு என்ற கவிதையிலே!
    “சென்றதினி மீளாது, மூடரே நீர்
    எப்போதுஞ் சென்றதையே சிந்தைசெய்து
    கொன்றழிக்கும் கவலையெனும்
    குழியில்வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா”
என்ன சொன்னாலும் மனம் பற்றிய பிரச்சனைகளுக்குத் தீர்வில்லை என்ற நிலை தட்டுப்பட்டபோது அதை மாற்றும் உபாயங்களைச் சொல்லவேண்டிய பொறுப்பு தமக்குண்டு என்ற உணர்வு அவருக்கு மேலிட்டிருக்க வேண்டும்.
    அவர் சிபாரிசு செய்யும் உபாயங்கள் இரண்டு. ஒன்று பக்தி.
    பக்தி என்பதற்கு பாரதி கொண்ட மாற்றுப் பொருள் நம்பிக்கை. தமது நம்பிக்கை கட்டுரையில்
   " பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போல, தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்பவேண்டும்."
நெஞ்சோடு சொல்வது கவிதையிலே-
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்
நமோ நமஓம் சக்தி“ யென நலிவாய் நெஞ்சே
பாட்டினிலே சொல்வது மவள் சொல் லாகும்;
பயனின்றி யுரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயமில்லை;
என்றார்.
(பக்தியைப் பற்றி மஹாகவி பார்வையை மற்றொரு முறை விரிவாகக் காணவேண்டியிருப்பதால் அடுத்து தியானத்தைப் பார்ப்போம்)
    தியானம் அச்சத்தையும் கவலையையும் அழிக்கும் மஹாசக்தி என்பதில் பாரதிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் என்ற கட்டுரையில்,
    “தியானத்தின்  சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான்“ என்று சுருக்கமாகக் கோடி காட்டுகிறார்.
    தியானம் என்பது என்ன? நாம ஜபமா ஒரு மந்திரத்தை இடைவிடாது உச்சரிப்பதா? ஓர் இஷ்ட தெய்வத்தை இடைவிடாது சிந்திப்பதா? அவ்வப்போது தோன்றி மறையும் எண்ணங்களா? அதே கட்டுரையில் பாரதி தெளிவாக்குகிறார்.
    ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் தோற்றங்களெல்லாம் தியானமாக மாட்டா!
    புதர்க் கூட்டத்தில் தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம்.
    அத்தகைய மூண்டெழும் அக்னி போன்ற விருப்பம் ஏற்படுவது சாத்தியமா? அதற்கு நமக்கு அதிகாரம் உண்டா?
 பாரதியே பதிலளிக்கிறார்.
    “தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத் தான் வளர விடவேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளர விடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் - திறமை - ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கிறது."
    சரி நமக்கு அந்த அதிகாரமோ திறமையோ உண்டு என நம்பினாலும் அனுபவ பூர்வமாகவே எல்லாம் மாறுபடுகிறதே. மனம் அடிக்கடி புரண்டு விடுகிறதே! இதற்கு பாரதி என்ன சொல்கிறார்?.
“இதை அனுபவித்துக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும்.  உன்னை எதிர்த்துச் சில விகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்துக்கொண்டு, வெளியே பிடித்துத் தள்ளினாலும் போகமாட்டோம் என்று பிடிவாதஞ் செய்யும்."
    தம் அனுபவத்தை கொண்டு அறிந்த அத்தகைய சிந்தனைகளை வெல்லும் உபாயத்தையும் மகாகவி வெளியிடுகிறார்.
    "அங்ஙனம் சிறுமைக்கு உரிய எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப் படுத்துமானால் நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம் நீ அதைத் தள்ள தள்ள, அது அங்கே தான் இருக்கும்.அதற்கு யுக்தி வேறு.
நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாறான வேறொரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக.
அப்போது அந்த சிந்தனை வந்து அறிவில் இருந்து கொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச் சாத்தான் தானாகவே ஓடிப்போய்விடும்."
தியானத்தில் பெருமை குறித்து பாரதி மேலும் பேசுகையில்-
"தெய்வ பக்தி உள்ளவர்களாயினும் நாத்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்தைச் சேராதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தியானம் அவசியம்.
பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் தியானம் அவசியம்.
பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம உணவைக் காட்டிலும் இன்றியமையாதது.சோற்றை விட்டாலும் விடு.
    ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்க்க் கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் - இவற்றால் அறிவை நிரப்பிக் கொண்ட தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவறவிடாதே.
    தியானம் எப்படிச் செய்ய வேண்டும்? எந்த விதத்தில் அது அமைய வேண்டும்?
மகாகவி கூறுவது-
    தெய்வபக்தி உடையவர்கள் இஷ்ட தெய்வத்தை அறிவில் நிறுத்தி, அதனிடம் மிகுந்த தாகத்துடனும் உண்மையுடனும் மேற்கூறியவாறு பெருமைகள் உண்டாகுமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். வாயினால் பழங்கதை ஒன்றை முணுமுணுப்பது அதிகப் பயன் தரமாட்டாது.
    உன்னுடைய உள்ளுயிரிலிருந்து அந்தப் பிரார்த்தனை வெளியேற வேண்டும். நீயாக உனது சொந்தக் கருத்துடன் சொந்த வசனங்களில் உயிர் கலந்து தியானம் செய்வதே பயன்படும்.
    மனமெனும் பெண்ணை வாழ்த்திய மகாகவி, அதன் சமர்களில் தோற்று அதனோடு என்றும் வணங்கியே வாழும் வாழ்வை விரும்பாதவர். மனம் வென்று, தான் தோற்று விட்டால் பயன் இல்லை  என்று உணர்ந்தவர் அதனாலேயே-
    இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
    விரும்புவன், நின்னை மேம்படுத் திடவே
    முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்;
    உன் விழிப் படாமல் என்விழிப்பட்ட
    சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
    உன்றனுக் கின்ப மோங்கிடச் செய்வேன்
என்று முத்தாய்ப்பு வைக்கிறார். மனம் பற்றிய எதிர்மறைக் கூற்றாக கவிதையை அமைக்காமல் அதை வசங்காணும் உடன்பாட்டுக் கூற்றாக (Positive) அமைந்ததே மகாகவியின் முத்திரை.