உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
ஒரு மகாகவியின் இதயமும் அறிவும் குறிப்பிட்ட சில விஷயங்களோடு மட்டும் வரம்பு கட்டி நின்று விடுவன அல்ல.
உலகம் போகின்ற ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு பாதையிலும் அதன் போக்கு என்னவென்று அவன் பார்வை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. தன் மொழி, தன் இனம், தன் நாடு என்ற சுற்றுச் சூழல்களில் நிலவுகின்ற நீதிகளையும் அநீதிகளையும் அவன் பார்வை சதா கவனித்துக் கொண்டிருக்கிறது.
மனித இனம் முழுதும், தனது சம காலத்தில் நடத்திக் கொண்டிருக்கிற வாழ்க்கைப் போராட்டத்தை, பரிவும் இரக்கமும் கொண்ட நேசநோக்கோடு அவன் மனம் தன்னுள் பதிவு செய்து கொள்கிறது. தேவைப்பட்டால் வழிகாட்டுகிறது.
தனது சமகாலத்தின் உழவனும் தொழிலாளியும் படுகிற பாட்டை, வாழ்க்கைச் சக்கரத்தை அவர்கள் உந்தி உருட்டுகிற போக்கை, ஒரு மகாகவி - என்றென்றும் நினைவு வைத்துக் கொள்கிறான்.
எனவே தான் சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம் என்ற வள்ளுவர் வாசகமும், ஏரெழுபது பாடிய கம்பன் நோக்கமும்,
“உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய
கழா அமயிர் யாக்கைச் செங்கட் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிநெகிழ் புற்ற
குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு
சுவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்குநின் றார்க்கும் ஒலியே…”
என்று உழவர் சமுதாயத்தின் ஒலிகளில் தோய்ந்த இளங்கோவடிகளின் சிந்தையும் சென்ற பாதையை பாரதியின் உள்ளம் தொடர்ந்தது.
சுதந்திரத்தை உழவன் பார்வையில் பார்த்துப் பயிர் என்று சொன்னவர் பாரதி.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?” என்று போட்ட வரிககளில் உழவனின் இதயம் விம்முவது கேட்கலாம்.
ஒரு புயற்காற்றின் பின், நாற்றினைப் போல மரங்கள் நாடெங்கும் சிதறி விழுந்திருந்தபோது பிழைத்த தென்னந்தோப்பு அவர் மனதிற்குத் தந்த உவகை,
“சிறிய திட்டையிலே - உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு -
வறியவ னுடைமை - அதனை
வாயு பொடிக்கவில்லை”
என ஓர் ஏழைச் சிறு விவசாயியின் உழைப்பு தப்பித்த நிம்மதியில் பிறந்தது.
அறிவுடையோரும், யந்திரமயமாகிவிட்ட புதிய உலகமும் உழைப்பாளிகளைச் சுரண்டத் தொடங்கி விட்டதை அவர் பார்வை கூர்ந்தது கவனித்தது.
செல்வம் (1) கட்டுரையில் -
“அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள், ஐரோப்பிய யந்திரத் தொழிற்சாலைகள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னைக்காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவே யன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை”
“தொழிலாளருக்குச் சில வார்த்தை” என்ற கட்டுரையில் மேற்படி பிரச்சினையை மிகத் தெளிவாகவே விவரித்தார்.
“ஆயிரம் மனிதர் சேர்ந்து ஆயிரம் நாட்களிலே செய்தற்குரிய தொழிலை, இந்த இயந்திரங்கள் ஒரு தினத்தில் செய்து முடிக்கத் தொடங்கின, எனவே பெருஞ் செல்வமுடையோர் தம்முள்ளே கூட்டுகள்கூட்டிக் கொண்டு யந்திரங்களை ஏராளமாகத் தயார் செய்து, அவற்றின் மூலமாக நெசவு முதலிய தொழில்களைச் செய்யத் தலைப்பட்டனர்.
இதனால் ஏக காலத்தில் பதினாயிரம் லட்சக்கணக்கான தொழிலாளருக்குத் தொழிலில்லாமற் போய்ப் பட்டினி கிடக்க நேர்ந்தது” என்று வேதனைப் பெருமூச்சுவிட்டார்.
அப்படிப் பட்டினி இருந்த பலர் பிச்சைக்காரர்களாக மாறி இரந்துண்டு வாழும் வீழ்ச்சிக்கு ஆளானபோது அவர்களை, கற்றறிந்தவர் அவமானப்படுத்துவது பாரதிக்கு தார்மீகச் சினத்தைக் கிளப்புகிறது.
செல்வம் (1) கட்டுரையில் -
“இங்கிலிஷ் நாகரீகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து, இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக் கூர்மைக்கு அடையாளமென்று நினைக்கிறார்கள்.
பிச்சைக்காரன் வந்தால், “ஏண்டா தடியன் போலிருக்கிறாயே! பிச்சைக் கேட்க ஏன் வந்தாய்? உழைத்து ஜீவனம் பண்ணு!” என்று வைது துரத்துவார்கள்.
“உழைத்து ஜீவனம் பண்ணு” என்று வாயினால் சொல்லிவிடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேலையகப்படாமல் எத்தனை லட்ச லட்சம் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரீக வேட்டை நாய்க்குத் தெரியாது.
சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பது உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை.
ஆனாலும் பிச்சையென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை.
சோம்பேறி! பிச்சைக்காரன் மாத்திரம்தானா சோம்பேறி? பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறைய தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு, அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம்!” என்று எழுதினார்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றது அவர் வாக்கு.
தொழில்கள் பற்றி எழுதுகையில் பாரதிக்கு வகை வகையான பல தொழில்களிலும் பார்வை செல்கிறது.
“கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் சூழ்கிநன் முத்தெடுப் பீரே!
…………………………………………………………………………………
மண்ணெ டுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
இழையை நூற்றுநல் லாடை செய்வீரே!”
-என்று தொழில்களின் வகை அனைத்தையும் போற்றி அறிவிக்கும் ஆர்வம் பிறக்கிறது.
பாரதி நவீன சிந்தனையை வரவேற்றார்.அதே சமயம் மரபுகளை அந்த நவீன சிந்தனை தகர்த் தெறிவதைச் சகிக்க மாட்டார்.
இந்திய கைத்தொழிலாளிகள், சிதைந்து போவதில் அவருக்கு ஆழ்ந்த கவலை உண்டு. அன்றைய நமது கல்விமுறை நமது கைத்தொழிலை நமக்குக் கற்றுத் தரவில்லை என்பதற்காக “ குணமது கைவிடேல்” கட்டுரையில் -
“… ஜீவனத்திற்கு வேண்டிய கைத்தொழில்களைப் பற்றி ஏதுமே கற்றுக் கொள்ளாமல் மனிதர்களைப் “போனகிராப்” பெட்டிகளாகச் செய்யும் நாசகரமான கல்வி கற்கும்படி செய்து அவர்களைக் (தனது குழந்தைகளை) கெடுக்க மாட்டேன்” என்றார்.
பாரதி தொழிலில் நவீனத்துவத்திற்கு ஒரு நாளும் எதிரியல்லர்.
புதிய ஆத்திசூடியிலே -
“கைத்தொழில் போற்று” என்று எழுதிய அதே கையோடு -
“உலோக நூல் கற்றுணர்” என்றும் எழுதினார்.
அதனாலேதான் தொழிலாளர் வாழ்வை, யந்திரங்கள் இன்னல் மயமாக்கிவிட்டன என்று கண்ட பாரதி யந்திரங்களுக்கு எதிரியாகி விடவில்லை.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
என்று தொழில் கவிதையிலும்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம். குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம். கோணிகள், இரும்பாணிகள், நடையும் பறப்புமுணர் வண்டிகள், ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்ாம், என்று “பாரத தேசம்” கவிதையிலும் அவர் ஆக்கபூர்வமாக உற்சாகம் தந்தார்.
இரும்புத் தொழிலின் மீது பாரதிக்கு குறிப்பான ஈடுபாடு இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர் நண்கு உணர்ந்திருந்தார்
“வருங்காலம்” கட்டுரையில்-
”இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமுங் கொடுப்பது, எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்புயந்திரங்களாலே செய்யப்படுகின்றன. ஆதலால், நமது தேசத்துக்கொல்லருக்கும் நாம் பலவிதங்களிலே அறிவு வி ருத்தியும் ஜீவன ஜௌகரியங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்ற வரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேற்படி தொழில்வளர்ச்சியில், கைத்தொழில்கள் புறக்கணிக்கப்படுவதில் அவருக்கு சம்மதமில்லை. இந்தியாவின் பாரம்பரியம், அதன் கைத்தொழில் சிறப்பிலே உள்ளது என்று அவர் அறிவார்.
எனவே தான் அதே கட்டுரையில் -
“கைத்தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டிவரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவறுப்புக்கு இடம் தருகின்றன.
திருஷ்டாந்தமாக, நேர்த்தியான சித்திரங்களும், வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும், அழகான ஆடைகள் செய்ய வல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள்.
இவர்களுக்குப் படிப்பில்லை; வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து, வெளிநாடுகளில் வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்.
…வர்ணப்படம், தையல்வேலை, மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களின் அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால், இந்தத் தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து விடலாம்” என்று எழுதினார்.
தொழிலாளிகளுக்குக் கல்விப் பயிற்சி தேவை என்பது பாரதி கருத்து.
அதே கட்டுரையில் -
“நம்முடைய தேசத்தில் மட்டுமே யன்று, உலக முழுமையிலும் எல்லா நாடுகளிலும்கைத்தொழிலாளருக்குக் கல்விப் பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
…எல்லா வகுப்புகளையும் எல்லா மனிதரிடையேயும் கல்வியும் அதன் விளைவுகளாகிய பலவகைப்பட்ட அறிவுப் பயிற்சிகளும் பரவிடுமானால், அதினின்றும் கைத் தொழிலாளர்கள் கல்விப் பயனைக் காவியங்கள் இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமே செலவிடும் வழக்கம் மாறிப்போய், அவரவர் தத்தமக்கு உரிய தொழில்களிலும் கல்வியறிவை பயன்படுத்தத் தொடங்குவார்கள்.
தொழிலாளிகளுக்கு கல்வியளிப்பதையும் பற்றி மேலும் எழுதும்போது -
“பகற் பள்ளிக்கூடங்கள் மாத்திரமேயன்றி இராப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள் - எல்லாப் பிராயத்தினரும் - சென்று படிப்பதற்குரிய காரியங்களை நடத்த வேண்டும்”.
தொழிற் சங்கங்கள் பற்றிய உணர்வும் பாரதிக்கு உண்டு. அதே கட்டுரையில்.
”இப்போது நமது நாட்டில் அங்கங்கே பல தொழிற் சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் பல செய்துகொண்டு வருகிறார்கள், இந்தப் பிரயத்தனங்களெல்லாம் முற்றிலும் நியாயமே. இதில் ஐயமில்லை” என்று எழுதிய பாரதி தொழிற்சங்கத்துக்கு மற்றொரு யோசனையும் சொன்னார்.
“…இச்சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிலே முயற்சி செய்வதுடன் தமது காரியங்களை நிறுத்தி விடாமல், அங்கங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்கான ஏற்படுத்தி தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வியூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்யவேண்டும்.
தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள பகைமை வலுப்பெறக்கூடாது என்பது பாரதி விருப்பம். அதே கட்டுரையில் -
“நமது ஜனத்தலைவர்கள் முதலாளிகள், தொழிலாளிகள் என்று இரு திறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலேயே கிள்ளிவிட முயற்சி செய்ய வேண்டும்.
தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிங் உபாயங்கள் செய்ய வேண்டும்.
…தொழிலாளிகளின் விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்த வேண்டும்.
மகாகவி தொழிலாளியின் பெருமையையும் தொழிற் பெருமையையும் கரங்கூப்பி வணங்கிய வணக்கம் தான். -
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்“ என்ற வரி.

No comments:
Post a Comment