பாரதி என்றொரு மானுடன்
பாரதி என்ற மகாகவியின் கவிதைகளையும் உரைநடையையும் வாழ்வைப் பற்றியும் படிக்கப் படிக்க மனசில் பல சித்திரங்கள் மாறி மாறிப் பதிகின்றன உடனே சில கேள்விகளும் உதிக்கின்றன.
இவன் யார்? ஞானக் கிறுக்கனா? சிறு குழந்தையா ரோமியோவையும் அம்பிகாபதியும் கயாஸையும் போன்று காதலுக்கு உருகிய காதற்பித்தனா?
பட்டினத்துப் பிள்ளையையும், தாயுமானவரையும் போன்ற சித்தர் கணமா?
வீர சிவாஜியையும், ஒரு கோவிந்த சிங்கையும் போன்று தீரமான தேசபக்தனா?
கண்ணனைப் போன்று குழலூதி மயக்கிக் கீதை போல் கவிதை சொன்ன பரமாத்மாவா? அதைக் கேட்டு கொண்ட அர்ஜுனனா?
கூண்டிலுள்ள சிங்கத்திடம் கை குலுக்கிக் கோயில் யானைக்குப் பழம் கொடுத்து, சமைக்கவைத்திருந்த வீட்டுத் தானியத்தை சிட்டுக் குருவிகளுக்கு வாரியிறைத்து, மெய்யிலே ஆனந்தித்த இவன் ஒரு மெய்ஞ்ஞானியா?
தனது காதல் மனைவியை ஒரு சிறிது காலம் பிரிந்தாலும் துடித்த அன்புக் கணவனா?
நாட்டுக்கு நல்லது சொல்ல வந்த ஞானகுருவா ?
புதிய பாரதத்தைத் தட்டி எழுப்ப வந்த தலைவனா? என்றும் நிலைத்து நிற்கும் சக்தி பதம் தொழப் பிறந்த பக்தனா?
விண்டுரைக்க அரிய அரியதாக வேதப் பொருளுணர்த்த வந்த வேதாந்தியா?
வண்டிக்காரன் தெம்மாங்கிலும் பண்ணை மடவாரின் சுவை மிகுந்த பாடலிலும் மனம் பறிகொடுக்கும் கவாரசிகனா?
யார் இவன்?
தெய்வங்களைக் காதலித்த இவன் தேவனா? மானுடனா?
உலகமே போற்றி வணங்கிய மகாத்மா காந்தியிடம் போய், மிஸ்டர் காந்தி, நான் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கும் நீர் வந்து பேசமுடியுமா?” என்று கேட்கும் வீரனா?
பாவேந்தர் சொன்னபடி
“அறம் பாடவந்த அறிஞனா? மறம் பாடவந்த மறவனா? சிந்துக்குத் தந்தையா? காடு கமழவந்த கற்பூரச் சொற்கோவா? அல்லது தமிழர் தம் நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலாவா?"
சீறும் எரிமலையா? சாந்தமான நடுக்கடலா?
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை. நோக்க நோக்கக் களியாட்டம்” என்று குதி போட்ட பிரம்ம ஞானியா? பெண் விடுதலைக்குக் கொடிபிடித்த தீர ஆண் மகனா?
யார் இவன்?
படிக்கின்றவருக்கெல்லாம் இவன் நமது ஆள் என்று பூரித்து செஞ்சு விம்ம வைத்த இந்த மனிதன் யார்? அப்படி ஒருவன் பிறந்தது உண்மையா? .இப்படியெல்லாம் வாழ்ந்து இன்னின்ன விதமாய் கவியும் உரைநடையும் செய்தது உண்மைதானா?
இத்தனை கேள்விகளையும் ஒருங்கடக்கி ஒரே ஒரு பதில் சொல்லலாம். எல்லாமாகி இருந்து, நம் தமிழ் ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின் வாராது போல் வந்து வாழ்ந்து காட்டிய மாமணிதான் நம் மகாகவி.
No comments:
Post a Comment