Thursday 6 February 2014

பாரதி என்றொரு மானுடன்


 பாரதி என்றொரு மானுடன்
    பாரதி என்ற மகாகவியின் கவிதைகளையும் உரைநடையையும் வாழ்வைப் பற்றியும் படிக்கப் படிக்க மனசில் பல சித்திரங்கள் மாறி மாறிப் பதிகின்றன உடனே சில கேள்விகளும் உதிக்கின்றன.
    இவன் யார்? ஞானக் கிறுக்கனா? சிறு குழந்தையா ரோமியோவையும் அம்பிகாபதியும் கயாஸையும் போன்று காதலுக்கு உருகிய காதற்பித்தனா?
    பட்டினத்துப் பிள்ளையையும், தாயுமானவரையும் போன்ற சித்தர் கணமா?
    வீர சிவாஜியையும், ஒரு கோவிந்த சிங்கையும் போன்று தீரமான தேசபக்தனா?
    கண்ணனைப் போன்று குழலூதி மயக்கிக் கீதை போல் கவிதை சொன்ன பரமாத்மாவா? அதைக் கேட்டு கொண்ட அர்ஜுனனா?
    கூண்டிலுள்ள சிங்கத்திடம் கை குலுக்கிக் கோயில் யானைக்குப் பழம் கொடுத்து, சமைக்கவைத்திருந்த வீட்டுத் தானியத்தை சிட்டுக் குருவிகளுக்கு வாரியிறைத்து, மெய்யிலே ஆனந்தித்த இவன் ஒரு மெய்ஞ்ஞானியா?
    தனது காதல் மனைவியை ஒரு சிறிது காலம் பிரிந்தாலும் துடித்த அன்புக் கணவனா?
    நாட்டுக்கு நல்லது சொல்ல வந்த ஞானகுருவா ?
 புதிய பாரதத்தைத் தட்டி எழுப்ப வந்த தலைவனா? என்றும் நிலைத்து நிற்கும் சக்தி பதம் தொழப் பிறந்த பக்தனா?
    விண்டுரைக்க அரிய அரியதாக வேதப் பொருளுணர்த்த வந்த வேதாந்தியா?
    வண்டிக்காரன் தெம்மாங்கிலும் பண்ணை மடவாரின் சுவை மிகுந்த பாடலிலும் மனம் பறிகொடுக்கும் கவாரசிகனா?
    யார் இவன்?
    தெய்வங்களைக் காதலித்த இவன் தேவனா? மானுடனா?
    உலகமே போற்றி வணங்கிய மகாத்மா  காந்தியிடம் போய், மிஸ்டர் காந்தி, நான் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கும் நீர் வந்து பேசமுடியுமா?” என்று கேட்கும் வீரனா?
    பாவேந்தர் சொன்னபடி
“அறம் பாடவந்த அறிஞனா? மறம் பாடவந்த மறவனா? சிந்துக்குத் தந்தையா? காடு கமழவந்த கற்பூரச் சொற்கோவா? அல்லது தமிழர் தம் நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலாவா?"
    சீறும் எரிமலையா? சாந்தமான நடுக்கடலா?
    நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை. நோக்க நோக்கக் களியாட்டம்” என்று குதி போட்ட பிரம்ம ஞானியா? பெண் விடுதலைக்குக் கொடிபிடித்த தீர ஆண் மகனா?
    யார் இவன்?
    படிக்கின்றவருக்கெல்லாம் இவன் நமது ஆள் என்று பூரித்து செஞ்சு விம்ம வைத்த இந்த மனிதன் யார்? அப்படி ஒருவன் பிறந்தது உண்மையா? .இப்படியெல்லாம் வாழ்ந்து இன்னின்ன விதமாய் கவியும் உரைநடையும் செய்தது உண்மைதானா?
    இத்தனை கேள்விகளையும் ஒருங்கடக்கி  ஒரே ஒரு பதில் சொல்லலாம். எல்லாமாகி இருந்து, நம் தமிழ் ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின் வாராது போல் வந்து வாழ்ந்து காட்டிய மாமணிதான் நம் மகாகவி.   






Wednesday 5 February 2014

எல்லாமாகிக் கலந்து நிறைந்தபின்

எல்லாமாகிக் கலந்து நிறைந்தபின்
பொதுவான மனித இயல்பு மனித அளவீடுகளுடன் மட்டும் நின்றுவிடுகிறது. மனிதன் பெற விரும்பும் பேறுகள், அவன் வெற்றிகள் ஆகியன காதல், செல்வம், வீரம் புகழ் என்ற மனித வரம்புகளோடு நின்றுவிடுகின்றன.
    சில அசாதாரண மனிதர்கள் உண்டு. அவர்களின் உயிர் கொள்ளும் உறவுகள் மேற்கண்டவற்றோடு மட்டும் நின்று விடுவதல்ல.
    பறவைகள், மிருகங்கள், புழு பூச்சிகள் என்று உயிரிகள் அமைந்த எல்லா வடிவங்களோடு அவை உறவு கொள்கின்றன.பாரதி கூறுகிறார்.
மகத் என்றால் பெரியது. பெருமை உடையது.
பெரியது எதனால் பெரியதாகிறது?
சிறியவை, தத்தம் வரம்புகளில் ஒடுங்கி விடுபவை.
 பெரியவை பல்வகை உயிர்களை ஆரத்தழுவி தன்னுள் கண்டு, ஒடுக்கி உணர்ந்து லயிப்பதிலே தான் பெரியதாகிறது.என்று விளக்குகிறார்
    மகாகவி பறவைகளின் மீது மிகவும் நேசம் கொண்டவர். ஒரு குயிலும் சில குருவிகளும் அவரது கவிதையிலும் உரை நடையிலும் அடிக்கடி வந்து போகின்றன.
    குயில் அவருக்கு உயிர்ச்சுவையின், உயிர் தரித்ததால் உணர நேர்ந்த இன்பங்களின் அளவு க்குக் குறியீடு (Symbol)
    குயில்பாட்டை மீண்டும் படிக்கும் போது கன்னிக்குயில், ஒற்றைக்குயில், மாயக்குயில், கானக்குயில், சின்னக்குயில், பிள்ளைக்குயில், நீலக்குயில், சிறுகுயில், நீசக்குயில், ஒப்பில்லா மாயத்தொரு குட்டிப் பிசாசக் குயில், செத்தைக்குயில், வன்னக்குயில், பொய்மைக்குயில், எத்துக் குயில், வஞ்சக்குயிலி என்று பல்வேறு பெயர்களில் செல்லமாகவும், அதன் வஞ்சனையால் பாதிக்கப்பட்டவர் போலவும் பாரதி அழைப்பது காணலாம்.
    மண்ணில் உள்ள இன்பங்கள் யாவினுக்கும் உருவகமாகத் தென்படும் குயில் அவற்றின் மயக்கி ஈர்க்கும் சாகசங்களுக்குச் சின்னமாக அவருக்குத் தென்பட்டிருக்க வேண்டும்.
    இதனாலேயே அவர் குயிலை அத்தனை பெயர்களால் அழைக்கிறார்.
    சிட்டுக்குருவி பாரதிக்கு மிகவும் பிடித்த பறவை . அது ” எட்டுதிசையும் பறந்து திரிவதும் ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவதும், மட்டுப்படாது எங்கும் கொட்டிக் கிடக்கும் வானொளி என்னும் மதுவின் சுவை உண்டு பெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புற்று பீடையிலாதவோர் கூடு கட்டிக் கொள்வதும், முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி, முந்த உணவு கொடுத்து அன்பு செ்யவதும்  மட்டும் காரணமல்ல
     சிட்டுக்குருவி பாரதிக்கு விடுதலையின் குறியீடாக விளங்கியது.
    குயிலோ பாரதிக்கு உயிர் இன்பத்தின் குறியீடு.
    வெறும் நாட்டின் விடுதலை மட்டுமல்ல.
    சிட்டுக்குருவி உயிர்களை மாட்டிப்பூ ட்டும் எல்லாத் தளைகளிலிருந்தும் கிட்டும் விடுதலை.
    அதனால் தான் -
    “விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே”
என்று அவர் பாடினார்.
    பாப்பாவுக்குப் பாட்டு சொன்ன போது
    “சின்னஞ்சிறு குருவி போலே - நீ
    திரிந்து பறந்துவா பாப்பா - என்றார்
    சிட்டுக்குருவி கட்டுரை தமிழ் உரைநடை கண்ட ஓர் அமிர்தத்துளி எனும்படி மகாகவி எழுதிச் செல்கிறார்.
    “சிறிய தானியம் போன்ற மூக்கு” சின்னக்கண்கள், சின்னத் தலை, வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு ; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித்துளிக் கால்கள்” என்று நுனி  நுட்பச் சுவையோடு அறிமுகம் செய்கிறார்.
    “சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமை யுண்டாகிறது” என்கிறது.
    உடலை அது லாகவத்துடன் சுமந்து செல்வது, அதற்குத்  தலை நோவு வராதது. மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போல அரிக்கும் கவலைத் தொகுதி அதற்கு இல்லாதது தான் அவர் பொறாமைக்குக் காரணம்.
    சிட்டுக்குருவி மீது அவர் கொண்ட அன்புக்கும் அதன் வேறு சிறப்புகளும் காரணம்? அதே கட்டுரையில் எழுதினார்.
    “குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை, குருவிக்கு வீடுண்டு ; தீர்வை கிடையாது. நாயகனில்லை; சோகமில்லை”
    குருவியின் பேச்சினை பாரதி மொழி பெயர்க்கிறார்.
    “இந்தக் குருவி என்ன சொல்கிறது. விடு ,,விடு..விடு.. என்று கத்துகிறது. இஃது  நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது.
    பாரதிக்குக் குருவி விடுதலையின் குறியீடாகத்  தோன்றும் போதே அந்த விடுதலை எத்தன்மையது என்று உணர்த்தத் தோன்றுகிறது.
விடு, விடு, விடு  - தொழிலை விடாதே, உணவை விடாதே, கூட்டைவிடாதே, குஞ்சை விடாதே, உள்ளக்கட்டை அவிழ்த்துவிடு, வீண் யோசனையை வீடு துன்பத்தைவிடு”
    “ஜகத்சித்திரம்” என்ற சிறு நாடகத்தில் கிளியாக வும் காக்கையாகவும் அணிற் பிள்ளையாகவும் பசுமாடாகவும், நாகணவாயாகவும், எருமைமாடாகவும் பாரதி மாறி மனச்சித்திரம் தீட்டிக்காட்டுகிறார்.
    அதில் கிளி ஒருமுறை சொல்கிறது.
“இவ்வுலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை”
    மற்றொரு முறையோ -
    ”காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை”
    கண்ணனைப் பல வகை மனித உறவுகளில் பாடிய பாரதி கண்ணனைத் தாயாகக் காணும்போது -
    “இறகுடைப் பறவைகளும் - நிலந்
    திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள்
    அறைகடல் நிறைந்திடவே - எண்ணில்
    அமைத்திடற் கரியபல் வகைப்படவே
    சுறவுகள் மீன்வகைகள் - எனத்
    தோழர்கள் பலருமிங் கெனக்களித்தாள்”
,இப்படி எல்லா விலங்கினங்களையும் தமது தோழர்கள் என்று கருதும் கருத்தே ஒரு புதிய வீச்சு கொண்டது ஒரு நேசப்பான்மையுடையது.
    அந்த நேசத்தினால்தான் பாரதிக்கு மாமிச உணவின் மீது வெறுப்பு மிருகங்களை நாகரீகப்படுத்தும் வழி கட்டுரையில்-
“மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியும் பூ மண்டலாதிக்கத்தையும் அவன் நியாயமான வழியில் உபயோகப்படுத்தவில்லை.
    குட்டிகளைப் பட்டினி போட்டுத்தான் தீர்வை கறந்து வாங்கித் தன் வயிற்றில் அஜீரணமுறப் புதைக்கும் கொடுங்கோலனைப் போல், தன் குடிகளாகிய மிருக பக்ஷி கீடங்களில் பலவற்றைத் தின்று பிழைக்கும் ஈன வழக்கத்தைக் கைக்கொண்டிக்கின்றான்.
மனிதன் செய்யும் அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயமென்று என் புத்திக்கு நிச்சயமாகப் புலப்பட்டிருக்கிறது.
    மனிதன் செய்யக்கூடிய பாபங்கள் அனைத்திலும் இதுவே மிகக்கொடிய பாபம் என்று என் புத்திக்கு ஐயந்திரிபற விளங்கியிருக்கிறது” என்று விரிவாகவும் மனசில் தைக்கும்படியும் குறிப்பிடுகிறார்.
    விலங்குகளை வதைப்பது அவற்றைத் தின்ன விரும்புவது இவற்றை ஒரு மனச்சாட்சியின் சுடுகுரல் போல் பாரதி சாடுகிறார்,
 “மிருகங்களைச் சீர்த்திருத்தல்” என்ற கட்டுரையில் -
    “நமது முன்னோர் பசுவை மாதா என்று சொல்லி வணங்கினார்கள், நாம் அவர்களை (ஈக்வாலிடி) ஸமத்வம் (லிபர்டி) விடுதலை (ப்ரெடர்னிடி) உடன்பிறப்பு, தெரியாத மூடர்கள் என்று சொல்லி மேற்படி பசுக்களைக் கறி சமைத்துத் தின்ன இச்சிக்கிறோம். அதன் பாலை ஊட்டி நம்முடைய குழந்தைகளை வளர்த்தும். ஏன்? நினைப்பில்லாமல்.போடா! என்று சினந்து ஒரு சொல் கூறிவிட்டுத் தொடர்கிறார்.
    வெள்ளைக்காரன் சொன்னான் “யோக்கியதை உத்தம மார்க்கம்” நியாயமான வார்த்தை.    மாட்டை நாம் தாய்போலவே நினைப்பது யோக்கியதையா? கறி சமைத்துத் தின்பது யோக்யதையா? குயில்பாடுகிறது. கந்தருவர் கேட்டுத் தலை அசைக்கியார்கள். நீ ஏன் அம்பு போட்டு அதைக் கொல்கி றாய்?“
    அதே கட்டுரையில் மற்றோரிடத்தில் ஒரு விரோதமான கருத்தைச் சொல்கிறார்.
    அதே கட்டுரையில் மற்றோரிடத்தில் ஒரு விநோ தமான கருத்தைச் சொல்கிறார்.
    “மிருகங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டு அவற்றிற்கு நல்ல வழி காண்பித்து அவற்றை சீர்திருத்துதல் மிகவும் அவசியம்”
    ஆனால் அது பயனில்லை என்று மேலே வாதித்துச் சென்றுவிட்டு
“தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிற ஜந்துக்களைத் திருத்த அதிகாரம் பெற மாட்டான். தன்னைத்தானே திருத்திக்  கொள்வதே பிரதானம். தன்னைத் திருத்த அமரனாகச் செய்து கொள்க. அதுவே ஒருவன் செய்ய வேண்டிய தலைமைத் தொழில்” என்று முடிக்கிறார்.
    தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு சிந்தையில் போற்றும் அந்த மன விரிவு தான்
    எல்லா மாகிக் கலந்து நிறைந்த பின்
    ஏழைமை யுண்டோடா? - மனமே!
என்றும்
    உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
    உள்ளங் குலைவதுண்டோ?“
என்றும் வியாபிக்க வைத்து பாரதியைத் தெளிந்த ஞானியாக்கியிருக்கிறது.

வீடுதோறும் கலையின் விளக்கம்

 வீடுதோறும் கலையின் விளக்கம்
    ஒரு கலைஞன் பிற தேசக்கலைகளிலிருந்து மனத் தூண்டல்களை (Inspiration) எடுத்துக் கொள்வதுண்டு. ஒரு கவிஞனும் பிற கலைகளின் மீது ஒரு பற்று கொண்டு அந்த ஈடுபாட்டில் பல தூண்டுதல்கள் பெறுவதுண்டு.
    ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் நாடகக் கலையிலும் நடிப்பிலும் ஈடுபாடு காட்டியவர். புராதன கிரேக்க கவிகள் யாழ் வாசிப்பதிலும் பிற கலைகளிலும் ஈடுபாடு காட்டினர். இளங்கோவடிகளின் இசை, நாட்டிய ஈடுபாடு சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் தெளிவுபடுகிறது.
    பாரதி பிறகலைகளிலும் ஆழ்ந்த ஆர்வம் காட்டியவர். அவருக்கு முறையான கர்நாடக சங்கீதம் தெரியும். தமது பாடல்களை எழுதும்போது அவை படிக்கப்படுவதைவிட பாடப்படுவதே சிறப்பு என விரும்பி அவற்றிற்கு ராகதாள அமைப்புகளைக் குறிப்பிட்டார்.
    பாரதி தமது பாடல்களை தம் வாயால் பாடக் கேட்டவர் பலர்.
    பாட்டு, பாரதிக்கு உயிர்த்தேன் போன்று இனித்தது. தமது கவிதைகளிலும் உரைநடையிலும் பாட்டைப்பற்றி பலமுறைக் குறிப்பிடுகிறார். பிரம்மனின் படைப்பில் பல அதிசயங்கள் கண்டு வியந்து “குயில் பாட்டு” கவிதையிலே
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப் போல் ஆச்சர்யம் பாரின்மிசை  இல்லையடா!
என்ற பாரதி, நாதங்கள் சேரும் நயத்திலே மேலும் பறிகொடுத்து -
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ,
என்று வியந்தார்.
    பொருளிலும் ஓசையும் ரஸம் கலந்திருக்க வேண்டும் பாடுகிற பாட்டு ஒன்பது சுவைகளில் ஏதேனும் ஒன்று உள்ளத்திலே தோன்றும்படி அமைய வேண்டும் என்பது பாரதி கொள்கை. தமது ஸங்கீத விஷயம் கட்டுரையில்,
    “ரஸஞான மில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்து ஸங்கீத வித்வான்களில் பலர் ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர்” என்பது அறியாதவர்” என்று குற்றம் சாட்டுகிறார்.
    அப்படி ரசம் தெரியாமல் பாடுவதற்குக் காரணம் இன்னதென்று தீர்மானித்து அதையும் வெளிப்படையாகத் தெரிவித்து விடுகிறார்.
    முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே முதல்தர வித்துவான்.
    இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே முக்காலே மும்மாகாணி வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது.
    எழுத்துக்களையும் பதங்களைக் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரஸம் நியாயம் இல்லை.
    தமிழிசை வளரவேண்டும் என்று பாரதிக்கு தனி ஆர்வம் இருந்தது.
“புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டு வரவேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப்பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயலவேண்டும்” என்று எழுதிய பாரதி பிறர் புதிய கீர்த்தனங்களை அமைப்பதில் பின்னடையக் கூடும் என்று ஊகித்து அவர்களுக்கு வழியும் காட்டுகிறார்.
    ”பூர்வ காலத்து மஹான்களுக்கு தெய்வப் பிரஸாதமிருந்தது. எங்களுக்கில்லையே, என்ன செய்வோம்?” என்று புதிய வித்வான்கள் புதிய கீர்தனங்கள் அமைப்பிலே பின்வாங்கக் கூடாது.
    தெய்வங்கள் இறந்து போகவில்லை.
    இப்போதும் அவற்றை உபாஸனை செய்து அவற்றின் அருள் பெறலாம்.
    தெய்வப் பிரஸாதத்தை ஒருவன் பக்தியாலும் ஜீவதயையாலும் நேர்மையாலும் உண்மையாலும் இடைவிடாத உழைப்பினாலும் சம்பாதிக்க முடியும்”
    பாரதி நல்ல ரசிகர். புதிது புதிதாய் இசைச்சுவை விரும்புவர். கர்நாடக சங்கீதம் அன்று மாற்றமேயன்றி இருந்த இருப்பு அவருக்கு ஒரே சலிப்பைத் தந்தது.
“நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் வாதாபி கணபதிம் என்று ஆரம்பஞ் செய்கிறார். ராம நீ ஸமானமெவரு மரியாத காதுரா வரமு லொஸகி” ஐயையோ …ஐயையோ ஒரே கதை.
எந்த ஜில்லாவுக்குப்போ,
எந்த கிராமத்திற்குப் போ,
எந்த வித்வான் வந்தாலும் ஒதே கதைதான்.
தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்”
    இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடுமோ என்று உள்ளுணர்வு பாரதிக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் எனவேதான் மேலே தொடரும்போது -
    ”பூர்வீக மஹான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டும் என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக்கூடாது.
    பதங்களை வாய்விட்டு தெளிவாகச் சொல்ல வேண்டும், விழுங்கிவிடக் கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக்கூடாது” என்று விளக்குகிறார்.
    சங்கீத ஞானம் தமது இனத்தில் காப்பாற்ற பட வேண்டும் என்பதில் அவர் அக்கறை காட்டியவர் அதனாலேயே,
“தமிழ்ச்சமைக ளிலே எப்போதும் அர்த்தம் தெரியா த பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்” என்று எச்சரிக்கிறார்.
     பாட்டை மிஞ்சித் தாளம்தனித் தாண்டவம் செய்து விடக்கூடாது. தாளம் பாட்டுக்கு அடங்கியது .பாட்டுக்கு இனிமை சேர்ப்பது அதிகப்பிரசங்கித் தனம் செய்வதல்ல என்பது பாரதி கட்சி.
    “பாட்டுக்குத் தாளமே ஒழிய தாளத்திற்குப் பாட்டில்லை” என்ற விஷயத்தைப் பாடுவோர் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
    ”பாட்டுக்கச்சேரி என்ற பெயர் வைத்துக்கொண்டு அங்கே இசையின்பங்களை காட்டுதல் முதல் காரியமாகவும், தாளத்தை உபகரணமாகவும் கொள்ள வேண்டும்”
சங்கீத வித்வான்கள் குரலைச் சாதகம் செய்வது மிகவும் அவசியம் என்று பாரதி கருதினார். நமது வித்வான்களில் பலருக்கு சாரீரபலமும் நயமும் குன்றி யிருப்பது வடநாட்டுப் பாடகர்களுடன் ஒப்பிட்டுக் காண்கையில் அவருக்குத் தெரியவந்தது. மேற்படி கட்டுரையில் எழுதினார்.
“சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீகாசியில் வாஸஞ் செய்தேன் . அங்கே, பாட்டுக்கச்சேரி செய்ய வரும் ஆண்களுக் கெல்லாம் நேர்த்தியான வெண்கலக்குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக்குரல்.
    அங்கிருந்த தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றபடி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வியப்புண்டாயிற்று. ஒன்றுபோல் எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும், நயங்குறைந்தோம் இருப்பதால் காரணமென்ன?
    …நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை காட்டு வெளிகளிலே போய் கர்ஜனை செய்ய வேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைக் பழக்க வேண்டும்.
    உள்ளத்திலே  உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்ற கருத்து உடையவர் நல்ல  தொண்டைக்கும் இதற்கு நிகரான ஒரு கரு்தையே முன் வைக்கிறார்.
    “உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.ஸ த்து இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரேவராது. கலைகள் நேர்படுவதைப்  பற்றிப் பேச வேண்டியதில்லை
    உள்ளத்திலே தைர்யம், ஸந்தோஷம், வலிமை முதலிய சுப லக்ஷணங்கள் தமிழரை க் காட்டிலும் வடநாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகின்றன.
    …இந்தக் குணங்களை நமது ஜனங்களெல்லோருமே பயிற்சி செய்து கொள்ள வேண்டும். ஸங்கீத  வித்வான்கள் இவற்றைப் பழக்கப்படுத்தினால் தான், அவர்கள் கண்டத்தில் உவகையும் வீரமும் பிறக்கும்; பாட்டிலே களையுண்டாகும்” என்றார்.
”வேயின் குழலோடு வீணைமுத லாமனிதர்
 வாயினியிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி”
என்று குயில் பாட்டில் தம் நெஞ்சு பறிபோன இடங்கள் குறித்த பாரதிக்கு இசைக் கருவிகளில் ஹார்மோனியம் மட்டும் பிடிக்கவில்லை.
    இதை “ஹார்மோனியம்” என்ற தலைப்பில் எழுதுகையில்
    “நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள் வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்ட முடியாது. ஆதலால், அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்கமுடையோரிடம் நமது ஸங்கீதத்தில் உள்ள விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன.
    இதையெல்லாங் காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங் கூச்சல் தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது.
    ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சியைக் குறையும்படி செய்ய வேண்டுமானால் கிராமந்தோறும் நாலைந்து ஹார்மோனியம் பரவும்படி செய்தால் போதும்“ என்கிறார்.
“தம்பூர்“ கட்டுரையிலோ -
    பாட்டுக்கு உதவியாக சுருதி ஒலிக்க வேண்டும் பாட்டை விழுங்கும் சுருதி பிரயோசனமில்லை. அது வெறும் மடமை.
    வீணை கட்டுரையிலோ -
“வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்த்ரீகள்  வீணை பழகவேண்டும்.
    தாள ஞானம் இசைஞாத்திற்கு அடிப்படை யாகும் என்பதால் அதை வளர்க்க வேண்டும் என்றார் பாரதி கருத்து குயில்பாட்டிலே வெளியாகிறது.
    நாதம், நாதம், நாதம்
    நாதத் தேயோர் நலிவுண் டாயின்
    சேதம் சேதம் சேதம்
தாளம், தாளம், தாளம்
    தாளத் திற்கோர் தடையுண் டாயின்
    கூளம் கூளம் கூளம் என்றார்
    தாள ஞானம் கட்டுரையில் -
    நமது குடும்ப ஸ்தீரிகளின் பாட்டிலே முக்கியமான குறை என்னவென்றால் இவர்களிலே பெரும்பாலோருக்குத் தாள ஞானமில்லை.
    தாளம் தவறிப் பாடினால் காதுக்கு விரஸமாக இருக்கும் ஜனங்களுக்கு பிரியமுண்டாகாது.
    நமது பெண்கள் கீர்த்தனங்கள் முதலியவற்றைத் தாளமில்லாமற் பாடுவதற்குக் காரணம் பயிற்சிக் குறைவேயல்லாது வேறொன்றுமில்லை அவர்களுக்கு நாம் சரியான படி பாட்டுக் கற்றுக் கொடுப்பதில்லை.
    பாரதியின் பாட்டின்பம் சங்கீத சபைகளிலும் கீர்த்தனைகளோடும் மட்டும் முடங்கிவிடவில்லை. அது காடு கரை நாடு நகர் மலை முகடு மகளிர் கூட்டம் என எங்கெல்லாம் இசையின்பம் என்னும் தேன் ஊறிற்றோ அங்கெல்லாம் தாவியது .குயில் பாட்டிலே
    கானப் பறவை கலகலனு மோசையிலும் காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும், ஆற்று நீரோசை அருவி யொலியினிலும் நீலப் பெருங் கடலெந் நேரமுமே தானிசைக்கும் ஓலத்திடையே யுதிக்கு மிசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதிலூறிடுந்தேன் வாரியிலும் என்று அடுக்கிச் செல்வார். தெளிவாக விரல் சுட்டி
    “ஏற்றநீர்ப் பாட்டி னிசையினிலும், நெல்லிடிக்குங்
    கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்ச மொலியினிலும்
    கண்ணமிடிப் பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
    பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
    வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
    கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்”
என்று குறிப்பிட்டார்.
    இதையே ஸங்கீத விஷயம் கட்டுரையில் கும்மிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிப்பாட்டு, நலங்குப்பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ண மெட்டு.
    தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக்கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா?“ என்று நினைவூட்டுவது போல் கேட்டார்.
    வெறும் வாய்ப்பா ட்டு தான் பாரதிக்கு பிடிக்குமென்பதில்லை. எல்லா இசைக் கருவிகளின் இன்பமும் அவருக்குப் பிடித்தது. வீணை பழகவேண்டும் வீணை ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமம். போகப்போக ஸுலபமாய் விடும்.
    இந்தக் கருவியிலே தேர்ச்சியேற்பட்டால் அதுதான் வாஸ்தவமான சங்கீதத் தேர்ச்சியாகும்.
…வீணை பழகினால் அதிலேயே நல்ல தாள ஞானம் உண்டாய் விடும். வீணை மனிதர் குரல போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும் வீணை மிகவும் பொருத்தமானது” என்றார்.
    பாரதிக்கு நாட்டியத்திலும் ரசனை உண்டு. இது ஊழிக்கூத்து, சக்திக் கூத்து, அக்கினிக் குஞ்சு ஆகிய கவிதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதை மீண்டும் ஒருமுறை அக்கவிதைகளைப் படித்தாலேயே புலப்படும்.
    தமது அபிநயம் என்ற கட்டுரையில் -
    தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல் அபிநயமே கூத்தின் உயிர், தாளந் தவறாமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது” என்று குறிப்பிட்டுவிட்டு.
    அவர்கண்ட நந்தனார் சரித்திரம் என்ற கதா காலட்சேபத்தில் ஒரு பாகவதர் நந்தன் பற்றி அபிநயம் செய்ததைக் குறிப்பிடுகையில்
“மேற்படி நைச்ய பாவத்திலே அதாவது அடிமைத் தோற்றம் காட்டுவதிலேகூட, இவர் இந்தப் பெண்மையைக கலப்பதனால் அதிக மிசிரம் ஏற்படுகிறது.ஆண்டையின் முன்னே வந்து நிற்கும் நந்தன் பறையன் பாதியும், தாசி பாதியுமாகக் காட்டுகிறார்” என்று குறிப்பிடுகிறார்.
    ஒரு மகா கலைஞனுக்கு இருக்கவேண்டிய ரசனையும் நுண்ணுணர்வுகளும் பாரதியிடமிருந்தது.
    கூத்திலும், பாட்டிலும், சுண்ணமிடிப்பவரின் சுவை மிகுந்த பாடலிலும், சிற்பத்திலும் குழலோசையிலும் மட்டுமல்ல. தம்மைச் சுற்றி விரிந்திருந்த உலகின் ஒவ்வொரு சுவை நயத்திலும் அவர் மனம் தோய்ந்துத் திளைத்ததினால் தான் அவரால் -
“எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய்“ என்று இறைவனைப் பார்த்ததும் பாட முடிந்தது.
    மனித வாழ்வை ரஸம் நிறைந்ததாகக் காணவுதம், அற்பக் கவலைகளில் காலம் வீணாக்காது உயிருக்கு இன்பம் சேர்க்கவும் பாரதி காட்டும் பாதை  அவரது ஈடுபாட்டின் உட்கிடக்கை.

பொருள் செய்தல் முதற்கடன்

. பொருள் செய்தல் முதற்கடன்
    ஒரு மகாகவிக்கு அன்றாட வாழ்வு பற்றிய அக்கறை இல்லாமற் போவது இயல்பு “லௌகீகம்” என்று சொல்லப்படும் உலக வாழ்வு பொருள் திரட்டும் பணியிலே பணத்தை அச்சாக வைத்துத் தான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை அறிவான்.
  எனினும்   பூமியை விட்டு சற்றே உயரப் பறந்து கொண்டிருக்கும் அவன் அறிவு, அத்தகைய வாழ்வைச் சாரமற்றது என்று ஒதுக்கிவிடும். அப்படி அவன் உதறி நின்றாலும்
“அவன் மகாகவிப்பா! அவன் வேறு” என்று உலகமும் ஏற்கும்.
    பாரதி சொந்த வாழ்வில் ஞான கம்பீரத்துடன் பணத்தை மதியாமல் வாழ்ந்தவர் தான் எனும் பணத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர் அல்ல.
    பணம் என்பது திரட்டப்பட வேண்டிய பொருள்.
அதுவும் பொருளில்லார் பொருளைத் திரட்டியாக வேண்டும் என்று அவர் மிகத் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்.
    கவியின் பணி இன்புறுத்துவதும் அறிவுறுத்துவதும் மட்டுமல்ல; வழி காட்டுவதும் கூட என்ற செய்தியை திருவள்ளுவரிடமிருந்து அவர் மிகக் கூர்மையாகக் கிரகித்திருந்தார்.
“பொருளிலார்க்கிலை யிவ்வுல” கென்ற நம்
    புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்
என்று வள்ளுவர் வாக்கையே சுயசரிதையில் மேற்கோள் கூறி மேலும் தொடர்ந்தார்.
    பொருளி லார்க்கின மில்லை துணையிலை;
        பொழுதெ லாமிடர் வெள்ளம் வந்தெற்றுமால்
என்று கூறிவிட்டு அது ஒரு முக்கிய கடமையென்றும் அறிவுறுத்தினார்.
“பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்”
தமது நிலையை நன்கு தெளிவுறுத்த வேண்டிய
கடமை உண்டு என்பதை மறவாமல்
“போற்றிக் காசினுக்  கேங்கி யுயிர் விடும்
மருளர் தம்மினை யேபழி கூறுவன்”
மாமகட் கிங்ருகொரு  ஊன முரைத்திலேன்
என்று கூறிய பாரதி, காசிலே ஆசை கொண்டு, அறம் தவறிய வழியிலே வீழ்ந்து அலைவுறலாகாது என்பதற்குத் தம் சொந்த வாழ்விலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகளை எடுத்துச் சொல்லவும் பாரதி தயங்கவில்லை. அதே சுயசரிதையில்,
    நாசக் காசினில் ஆசையை நாட்டினன்
        நல்லன் எந்தை  துயர்க்கடல் வீழ்ந்தனன்
என்று ஓரிடத்திலும் -
    அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
        லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்
    பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
        பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
    திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்
        தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
    அறமொன் றேதரும் மெய்யின்பம்; ஆதலால்
        அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்
என்று மற்றோரிடத்திலும் பாரதி அறிவித்தார்.
    பணம் என்னென்ன செய்யும் என்பதை பாரதி நன்குணர்ந்திருந்தார்.
எதிர் ஜாமீன் கட்டுரையில்-
    மிகுந்த செல்வமுடைய நாடுகளிலே கூட மனிதர் பணத்துக்காக எத்தனையோ மானங்கெட்ட  காரியங்கள் செய்கிறார்கள். ஏழைத் தேசத்தாராகிய நாம் இவ்வளவு மானத்துடன் பிழைப்பதே பெரிய காரியம்” என்றும் செல்வம் (2) கட்டுரையில் -
    பணமுடையவனோ பணமில்லாதவனைப் பிணமாக நினைக்கிறான்” என்றும் தெரிவித்தார்.
    பணம் சுலபமாகச் சேர்க்கப்பட்டு விடுவதில்லை.பணம்  சுலபமாகச் சேராது. அதன் பின்னணியில் கடும் உழைப்பு இருந்திருக்கிறது என்று மதிப்பிடுகிறார் பாரதி. தொழிலாளர் கட்டுரையில்.
    “பல இடங்களில் இப்போது மூடர்களிடம் செல்வமிருப்பது காண்கிறோமாயினும், இவர்களுக்கு இந்தச் செல்வம் ஏற்படுத்திக் கொடுத்த இவர்களுடைய முன்னோர்களில், அநேகர் அல்ல ஒருவனாயினும் மிகுந்த புத்திசாலியும் அந்த புத்தியைக் கொண்டு சோம்பலின்றி விடாமுயற்சியுடன் உழைப்பவனாகவும் இருந்திருக்க வேண்டும்.
    புத்தி மாத்திரம் இருந்தால் போதாது. அதைக் கொண்டு சோம்பலில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான் செல்வம் சேர இடமுண்டாகும்”.
    சோம்பலின்றி விடாமுயற்சி செய்வது மட்டும் போதுமானதாய் விடுமா? அதற்கும்  பாரதி பதிலளித்தார். நவீனத் தொழில் நுட்பம் அதை வரவேற்று விடுமா? அதற்கும் சேர்த்து பாரதி பதிலளித்தார்.
    “வியாபாரம், கைத்தொழில் முதலிய ஸமாதான நெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்தி நுட்பம் எக்காலத்தில் இன்றியமையாததாக திகழ்ந்துவந்திருக்கிறது. இக்காலத்திலும் இவை புத்தித் திறமையில்லாமல் போனால் ஒரு க்ஷணங்கூடத் தரித்து நிற்கமாட்டா”
    பாரதி உற்சாகமுள்ள ஒரு தொழில் முனைவர் போலச் சில சிந்தனைகளை பணம் திரட்டும் விஷயத்தில் தூண்டிவிடுகிறார். இந்தியாவின் ஏழ்மை அவன் நெஞ்சைப் பிளந்தது. வாணிகம் செய்து பொருள் திரட்டச் சொல்லும் போது வியாபார முறைகளைப் பற்றிய அடிப்படைக் கருத்து ஒன்றைச் சொன்னார். வியாபாரம் பற்றி அவருக்கு ஒரு தெளிவு இருந்திருக்கிறது என்று அது புரிய வைத்தது.
    “மிகவும் ஸரஸமான இடத்தில் (பொருள்களை) விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொ ண்டுபோய் விற்க வேண்டும்'  என்ற பழைய வியாபாரக் கொள்கையை எப்போதும்  பிரமாணமாகக் கொள்ளக் கூடாது.
    விளை பொருளும், செய்பொருளும் மிஞ்சிக்கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி அவை வேண்டியிருக்கும் இடத்தில் கொண்டு போய் விற்க வேண்டும்.
    வாணிகத்தைப் பெருக்குவதில் அவருக்கு ஆர்வமுண்டு.
    “வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப் புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேட வேண்டும்“ என்கிறார்
    விவேகானந்தர் எப்படி ஊக்கமூட்டும் தீரமொழிகளை பணம் தேடும் விஷயத்தில் மக்களுக்கு வழங்கினாரோ, அதே போன்று பாரதியும் அக்கட்டுரையில்
    “வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள். புறப்படுங்கள் புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்துகொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள்.
    …எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில் எவ்விதமான ஆசை எதையும் கொண்டு பிறதேசங்களுக்குப் போகவேண்டும்.
    ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவிய மில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம்.
    தமிழ்ப்பிள்ளைகளே, வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும் மனவுறுதியினாலும் பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும் செல்வத்துடனும், வீர்யத்துடம் ஒளியுடனும் திரும்பி வாருங்கள்” என்று உற்சாகம் தருகிறார்.
    மகாகவியின் மனோமாளிகையில் இது மற்றொரு சாளரம்.

முழுமைக்கும் பொது உடைமை

முழுமைக்கும் பொது உடைமை
    நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பொது, எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று துணிகரமாக தமிழ்க் கவிதையில் முதலில் சொன்னவர் மகாகவி.
முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்
முழுமைக் கும்பொது உடைமை
ஒப்பி லாத ஸமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க
என்று “பாரதஸமுதாயம்“ பாடலில் வாழ்த்தினார்.
    அவரது சமகாலத்திலே நடந்துவந்த சோஷலிஸப் புரட்சி பற்றிய பிரக்ஞையும் அதன் போக்கு பற்றிய கவலையும் அவருக்கு இருந்தது.
    பொதுவுடைமைக் கொள்கை பரவுவதில் அவருக்கு பரிபூரண மகிழ்ச்சி. முழு மன இசைவு.
“இந்த ஸித்தாந்தம் பரிபூரண ஜயமடைந்து மனிதருக்குள்ளே ஸஹஜ தர்மமாக ஏற்பட்ட பிறகு தான் மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர்” என்று செல்வம் (3) கட்டுரையில் எழுதுகிறார்.
    எனினும் அது வன்முறையிலே பரவுவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அதே கட்டுரையில் தொடர்கையில்
…“இந்த முறைமை போர், கொலை, பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக்கு சம்மதம் இல்லை”.
    இதற்கு காரணம் கூறும் போது பாரதி “கொலை“ கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது, அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது.
“ஒரு கொலையாளிக் கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேனா பலத்தாலும் ஆயுத பலத்தாலும் மற்றொரு கொலையாளிக் கூட்டத்தை அடக்கிவிடக் கூடும். இதனாலே தோற்ற கூட்டம், நாளைக்கு பலம் அதிகப்பட்டு முந்திய கூட்டத்தை வென்றுவிடும்.
    பிறகு, இதைப் பழிவாங்க முயன்று, மற்றது பலவித வேலைகள் செய்து பலமடைந்து இந்தக் கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலை தூக்கி அதை அடக்கும், இங்ஙனம் தலைமுறை தலைமுறையாக இவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று தீமை செய்து கொண்டே இருக்கும் இதற்கு ஓய்வே கிடையாது.“
வன்முறையால் பெறுகிற விடுதலை பற்றி  பாரதியார்அது உள்ளுக்குள் குமுறும் வன்மத்தால் மீண்டும் தோற்று வன்முறைக்கே மீளும் என்ற உளவியல் பார்வையோடு அணுகுகிறார்.
    ருஷ்யப் புரட்சியை பாரதி வாழ்த்தினார் வரவேற்று மகிழ்ந்தார். எனினும் அதே கட்டுரையில்
“ருஷ்யாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் “ஸோஷலிஸ்ட்” ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை.
”சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரே அடியாகக் குறைந்துபோய் மஹா பலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் கூட்டு வாழ்க்கைக் குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர்.
…நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரததிலே ருஷ்யாவின் மீது பாய்வார்கள், அங்கு உடைமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த அரசுகளுக்குத் துணையாக நிற்பர்.
    இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும், கொள்ளைகளும், ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டாகும்.
    லெனின் வழி சரியான வழியில்லை.”
    ருஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றதற்குப் பூர்விக காரணங்கள் உண்டு. அந்த சரித்திர காரணங்கள் இந்தியாவில் இல்லை என்பது பாரதி கருத்து.
    “பலாத்காரமாக முதலாளிகளின் உடமைகளையும் நிலஸ்வான்களின் பூமிமையும் பிடுங்கி தேசத்திற்குப் பொதுவாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கை ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வ காரணங்களிருக்கின்றன.
    நெடுங்காலமாகவே, ருஷியா தேசத்தில் ஆட்சி புரிவோரின் நகரற்ற கொடுங்கோன்மையிலும், அநீதங்களாலும், செல்வர்களின் குரூரத் தன்மையாலும், பல ராஜாங்கப் புரட்சிகள் நடந்து வந்திருக்கின்றபடியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது ஸுலபமாயிற்று
…இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர்.
    இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம்தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்பவும் மாட்டார்கள்.
    எனவே கொள்கைகளும் கொலைகளும் சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல், ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்.
    செல்வர்களுடைய உடைமைகளை பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல், இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது; ஸாத்தியமுமில்லை; என்றார்.
சமீபத்திய சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்கு முன்னரே காரணம் கண்டவர் போல் பாரதி கூற்று அமைந்தது.
    பாரதி ஏற்றத்தாழ்வுகளை நன்கு எடை போட்டவர்தான்.
    “உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றத்தாழ்ச்சிகள் மற்ற எல்லாக் காரணங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாக மூண்டிருக்கின்றன” என்று அவரே எழுதினார்.
    உலகிலே பொதுவுடைமை நிலவவேண்டும். ஆனால் அது சமாதானமான முறையில் வரவேண்டும் என்பது தான் அவர் விருப்பம்
    அதற்கான உபாயமாக ஒன்றையும் பாரதி தெரிவித்தார்.
    அது கிட்டத்தட்ட தர்மகர்த்தா சோஷலிஸம் என்று காந்திஜி கூறிய திட்டத்திற்கு நிகராக விளங்குகிறது. (இதில் ஆர்வமுடையவர் செல்வம் (2) கட்டுரையின் பிற்பகுதியில் விரிவாகக் காணலாம்)
    பொதுவுடைமை பற்றி பாரதிக்கு இருந்த கருத்து அப்பழுக்கற்றது. அவர் எந்நாளும் செல்வர் தயவைச் சம்பாதித்துக் கொள்வதற்காக முயற்சி செய்தவர் அல்ல. வர்க்க ரீதியாகவும் அவர்களைச் சார்ந்தவர் அல்ல.
    “இந்திய நிலை“ என்று தாம் கொண்டிருந்த கணிப்புகளுக்கு வெளிப்படையான கருத்து வடிவம் தருவதில் எதிலும் போல இவ்விஷயத்திலும் தயங்கவில்லை என்பதை நாம் உணரவேண்டும். இவை ஒரு மகாகவியின் உள்ளக் கிடக்கைகள், இதை ஏற்பதும் மறுப்பதும் வரலாறும் சமகால வாழ்வும் தீர்மானிக்க வேண்டிய பிரச்னைகள் .

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
ஒரு மகாகவியின் இதயமும் அறிவும் குறிப்பிட்ட சில விஷயங்களோடு மட்டும் வரம்பு கட்டி நின்று விடுவன அல்ல.
    உலகம் போகின்ற ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு  பாதையிலும் அதன் போக்கு என்னவென்று அவன் பார்வை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. தன் மொழி, தன் இனம், தன் நாடு என்ற சுற்றுச் சூழல்களில் நிலவுகின்ற நீதிகளையும் அநீதிகளையும் அவன் பார்வை சதா கவனித்துக் கொண்டிருக்கிறது.
    மனித இனம் முழுதும், தனது சம காலத்தில் நடத்திக் கொண்டிருக்கிற வாழ்க்கைப் போராட்டத்தை, பரிவும் இரக்கமும் கொண்ட நேசநோக்கோடு அவன் மனம் தன்னுள் பதிவு செய்து கொள்கிறது. தேவைப்பட்டால் வழிகாட்டுகிறது.
    தனது சமகாலத்தின் உழவனும் தொழிலாளியும் படுகிற பாட்டை, வாழ்க்கைச் சக்கரத்தை அவர்கள் உந்தி உருட்டுகிற போக்கை, ஒரு மகாகவி - என்றென்றும் நினைவு வைத்துக் கொள்கிறான்.
    எனவே தான் சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம் என்ற வள்ளுவர் வாசகமும், ஏரெழுபது பாடிய கம்பன் நோக்கமும்,
“உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய
கழா அமயிர் யாக்கைச் செங்கட் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிநெகிழ் புற்ற
குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு
சுவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்குநின் றார்க்கும் ஒலியே…”
என்று உழவர் சமுதாயத்தின் ஒலிகளில் தோய்ந்த இளங்கோவடிகளின் சிந்தையும் சென்ற பாதையை பாரதியின் உள்ளம் தொடர்ந்தது.
    சுதந்திரத்தை உழவன் பார்வையில் பார்த்துப்  பயிர் என்று சொன்னவர் பாரதி.
    “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?” என்று போட்ட வரிககளில் உழவனின் இதயம் விம்முவது கேட்கலாம்.
    ஒரு புயற்காற்றின் பின், நாற்றினைப் போல மரங்கள் நாடெங்கும் சிதறி விழுந்திருந்தபோது பிழைத்த தென்னந்தோப்பு அவர் மனதிற்குத் தந்த உவகை,
“சிறிய திட்டையிலே - உளதோர்
    தென்னஞ் சிறுதோப்பு -
வறியவ னுடைமை - அதனை
    வாயு பொடிக்கவில்லை”
என ஓர் ஏழைச் சிறு விவசாயியின் உழைப்பு தப்பித்த நிம்மதியில் பிறந்தது.
    அறிவுடையோரும், யந்திரமயமாகிவிட்ட புதிய உலகமும் உழைப்பாளிகளைச் சுரண்டத் தொடங்கி விட்டதை அவர் பார்வை கூர்ந்தது கவனித்தது.
செல்வம் (1) கட்டுரையில் -
“அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள், ஐரோப்பிய யந்திரத் தொழிற்சாலைகள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னைக்காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவே யன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை”
    “தொழிலாளருக்குச் சில வார்த்தை” என்ற கட்டுரையில் மேற்படி பிரச்சினையை மிகத் தெளிவாகவே விவரித்தார்.
    “ஆயிரம் மனிதர் சேர்ந்து ஆயிரம் நாட்களிலே செய்தற்குரிய தொழிலை, இந்த இயந்திரங்கள் ஒரு தினத்தில் செய்து முடிக்கத் தொடங்கின, எனவே பெருஞ் செல்வமுடையோர் தம்முள்ளே கூட்டுகள்கூட்டிக் கொண்டு யந்திரங்களை ஏராளமாகத் தயார் செய்து, அவற்றின் மூலமாக நெசவு முதலிய தொழில்களைச் செய்யத் தலைப்பட்டனர்.
    இதனால் ஏக காலத்தில் பதினாயிரம் லட்சக்கணக்கான தொழிலாளருக்குத் தொழிலில்லாமற் போய்ப் பட்டினி கிடக்க நேர்ந்தது” என்று வேதனைப் பெருமூச்சுவிட்டார்.
    அப்படிப் பட்டினி இருந்த பலர் பிச்சைக்காரர்களாக மாறி இரந்துண்டு வாழும் வீழ்ச்சிக்கு ஆளானபோது அவர்களை, கற்றறிந்தவர் அவமானப்படுத்துவது பாரதிக்கு தார்மீகச் சினத்தைக் கிளப்புகிறது.
செல்வம் (1) கட்டுரையில் -
    “இங்கிலிஷ் நாகரீகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து, இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக் கூர்மைக்கு அடையாளமென்று நினைக்கிறார்கள்.
    பிச்சைக்காரன் வந்தால், “ஏண்டா தடியன் போலிருக்கிறாயே! பிச்சைக் கேட்க ஏன் வந்தாய்? உழைத்து ஜீவனம் பண்ணு!” என்று வைது துரத்துவார்கள்.
“உழைத்து ஜீவனம் பண்ணு” என்று வாயினால் சொல்லிவிடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேலையகப்படாமல் எத்தனை லட்ச லட்சம் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரீக வேட்டை நாய்க்குத் தெரியாது.
    சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பது உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை.
    ஆனாலும் பிச்சையென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை.
    சோம்பேறி! பிச்சைக்காரன் மாத்திரம்தானா சோம்பேறி? பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறைய தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு, அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம்!” என்று எழுதினார்.
    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்  வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றது அவர் வாக்கு.
    தொழில்கள் பற்றி எழுதுகையில் பாரதிக்கு வகை வகையான பல தொழில்களிலும் பார்வை செல்கிறது.
“கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் சூழ்கிநன் முத்தெடுப் பீரே!
…………………………………………………………………………………
மண்ணெ டுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
இழையை நூற்றுநல் லாடை செய்வீரே!”
-என்று தொழில்களின் வகை அனைத்தையும் போற்றி அறிவிக்கும் ஆர்வம் பிறக்கிறது.
    பாரதி நவீன சிந்தனையை வரவேற்றார்.அதே சமயம் மரபுகளை அந்த நவீன சிந்தனை தகர்த் தெறிவதைச் சகிக்க மாட்டார்.
    இந்திய கைத்தொழிலாளிகள், சிதைந்து போவதில் அவருக்கு ஆழ்ந்த கவலை  உண்டு. அன்றைய நமது கல்விமுறை நமது கைத்தொழிலை நமக்குக் கற்றுத் தரவில்லை என்பதற்காக “ குணமது கைவிடேல்” கட்டுரையில் -
    “… ஜீவனத்திற்கு வேண்டிய கைத்தொழில்களைப் பற்றி ஏதுமே கற்றுக் கொள்ளாமல் மனிதர்களைப் “போனகிராப்” பெட்டிகளாகச் செய்யும் நாசகரமான கல்வி கற்கும்படி செய்து அவர்களைக் (தனது குழந்தைகளை) கெடுக்க மாட்டேன்” என்றார்.
    பாரதி தொழிலில் நவீனத்துவத்திற்கு ஒரு நாளும் எதிரியல்லர்.
    புதிய ஆத்திசூடியிலே -
    “கைத்தொழில் போற்று” என்று எழுதிய அதே கையோடு -
    “உலோக நூல் கற்றுணர்” என்றும் எழுதினார்.
    அதனாலேதான் தொழிலாளர் வாழ்வை, யந்திரங்கள் இன்னல் மயமாக்கிவிட்டன என்று கண்ட பாரதி யந்திரங்களுக்கு எதிரியாகி விடவில்லை.
    இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
        யந்திரங்கள் வகுத்திடு வீரே!
என்று தொழில் கவிதையிலும்
    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம். குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம். கோணிகள், இரும்பாணிகள், நடையும் பறப்புமுணர் வண்டிகள், ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்ாம், என்று “பாரத தேசம்” கவிதையிலும் அவர் ஆக்கபூர்வமாக உற்சாகம் தந்தார்.
    இரும்புத் தொழிலின் மீது பாரதிக்கு குறிப்பான ஈடுபாடு இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர் நண்கு உணர்ந்திருந்தார்
 “வருங்காலம்” கட்டுரையில்-
    ”இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமுங் கொடுப்பது, எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்புயந்திரங்களாலே செய்யப்படுகின்றன. ஆதலால், நமது தேசத்துக்கொல்லருக்கும் நாம் பலவிதங்களிலே அறிவு வி ருத்தியும் ஜீவன ஜௌகரியங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்ற வரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
    மேற்படி தொழில்வளர்ச்சியில், கைத்தொழில்கள் புறக்கணிக்கப்படுவதில் அவருக்கு சம்மதமில்லை. இந்தியாவின் பாரம்பரியம், அதன் கைத்தொழில் சிறப்பிலே உள்ளது என்று அவர் அறிவார்.
    எனவே தான் அதே கட்டுரையில் -
    “கைத்தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டிவரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவறுப்புக்கு இடம் தருகின்றன.
    திருஷ்டாந்தமாக, நேர்த்தியான சித்திரங்களும், வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும், அழகான ஆடைகள் செய்ய வல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள்.
    இவர்களுக்குப் படிப்பில்லை; வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து, வெளிநாடுகளில் வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்.
…வர்ணப்படம், தையல்வேலை, மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களின் அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால், இந்தத் தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து விடலாம்” என்று எழுதினார்.
    தொழிலாளிகளுக்குக் கல்விப் பயிற்சி தேவை என்பது பாரதி கருத்து.
    அதே கட்டுரையில் -
    “நம்முடைய தேசத்தில் மட்டுமே யன்று, உலக முழுமையிலும் எல்லா நாடுகளிலும்கைத்தொழிலாளருக்குக் கல்விப் பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
…எல்லா வகுப்புகளையும் எல்லா மனிதரிடையேயும் கல்வியும் அதன் விளைவுகளாகிய பலவகைப்பட்ட அறிவுப் பயிற்சிகளும் பரவிடுமானால், அதினின்றும் கைத் தொழிலாளர்கள் கல்விப் பயனைக் காவியங்கள் இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமே செலவிடும் வழக்கம் மாறிப்போய், அவரவர் தத்தமக்கு உரிய தொழில்களிலும் கல்வியறிவை பயன்படுத்தத் தொடங்குவார்கள்.
    தொழிலாளிகளுக்கு கல்வியளிப்பதையும் பற்றி மேலும் எழுதும்போது -
“பகற் பள்ளிக்கூடங்கள் மாத்திரமேயன்றி இராப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள் - எல்லாப் பிராயத்தினரும் - சென்று படிப்பதற்குரிய காரியங்களை நடத்த வேண்டும்”.
    தொழிற் சங்கங்கள்  பற்றிய உணர்வும் பாரதிக்கு உண்டு. அதே கட்டுரையில்.
”இப்போது நமது நாட்டில்  அங்கங்கே பல தொழிற் சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் பல செய்துகொண்டு வருகிறார்கள், இந்தப் பிரயத்தனங்களெல்லாம் முற்றிலும் நியாயமே. இதில் ஐயமில்லை” என்று எழுதிய பாரதி தொழிற்சங்கத்துக்கு மற்றொரு யோசனையும் சொன்னார்.
“…இச்சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிலே முயற்சி செய்வதுடன் தமது காரியங்களை நிறுத்தி விடாமல், அங்கங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்கான ஏற்படுத்தி தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வியூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்யவேண்டும்.
    தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள பகைமை வலுப்பெறக்கூடாது என்பது பாரதி விருப்பம். அதே கட்டுரையில் -
“நமது ஜனத்தலைவர்கள் முதலாளிகள், தொழிலாளிகள் என்று இரு திறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலேயே கிள்ளிவிட முயற்சி செய்ய வேண்டும்.
    தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிங் உபாயங்கள் செய்ய வேண்டும்.
…தொழிலாளிகளின் விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்த வேண்டும்.
    மகாகவி தொழிலாளியின் பெருமையையும் தொழிற் பெருமையையும் கரங்கூப்பி வணங்கிய வணக்கம் தான். -
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்“ என்ற வரி.

Friday 31 January 2014

மாதர்க்குண்டு சுதந்திரம்

விளக்கிலே திரி நன்கு சமைத்தவர்
பெண் விடுதலை என்ற குரல் விடுதலைப் போராட்டத்தோடு ஒருங்கிணைந்து பிறந்த குரல். நமது சுதந்திரத்துக்கு என்ன வயதாயிற்றோ அதைவிட நூறு வயது அதற்குக் கூடுதல்.
    உலகின் எல்லாப் பகுதிகளிலும் பெண்கள், விடுதலை பெற்று வந்த அந்தக் காலகட்டத்தில் உரிமை வேட்கையின் உடன்பிறப்புத் தீயாக, அது நம் நாட்டில் நுழைந்த்து.
    தமிழ்மொழியில் அதை வரவேற்ற தலைமக்கள் வரிசையில் பாரதி முதலிடம் பெற்றவர். உடன் கட்டை ஒழிப்பில் தொடங்கி, பால்யத் திருமணம், விதவைத் திருமணம், பெண் கல்வி, பெண் சமத்துவம் என்று அது பற்பல சுடர்களாகப் பரவிப் படர்ந்ததைக்  குதூகலத்தோடு வரவேற்றுக் கொண்டாடியவர் மகாகவி.
    தமது பணி முன் கூறிய சமுதாயச் சீர்திருத்தங்களோடு நின்றுவிடவில்லை என்ற உணர்வு அவருக்கு இருந்தது. ஆண் பெண் என்ற இரு பாலருக்கு மிடையேயான சீரான சமவுணர்வுநிலை சமைப்பதை முக்கிய கடமையாக அவர் கருதினார்.
    ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட முக்கிய நெறியாக அவர் கருதிய கற்பு நெறியே, பெண் விடுதலை விஷயத்தில் ஆண்கள் காட்டும் பின்னடைவுக்குக் காரணம் என்பதையும் அவர் கூர்மையாக உணர்ந்திருந்தார்.
    அதனாலேதான் “ பெண்கள் விடுதலைக்கும்மியிலே
    “கற்பு நிலையென்று சொல்லவந் தாரிரு
    கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்“
என்றார். இதற்கான விரிவான விவாதத்தை ஒரு வழக்கறிஞரும் அறுவை மருத்துவரும் எவ்வாறு மனம் கூசாது தம் கடமையாற்றுவார்களோ அவ்வாறு தமது “பதிவிரதை“ கட்டுரையிலே எழுதினார்.
    “ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று  எல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.
    ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல இதர ஸ்தீரீகளின் பதிவிரத்த்திலே காட்டுவதில்லை...
    அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்?
    கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம் ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள்.
    அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்தபக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும்.
    இந்தக் கூட்டில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது    .
    அந்த இருபதினாயிரம் வ்யபிசாரிகளில் நூறு பேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள்.
    ஆனால் அவளவளுடைய புருஷனுக்கு அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.
    ஆகவே பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே, பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்தீரீகளைப் புருஷர்கள் அடிப்பதும் திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி  நடைபெற்று வருகின்றன.
    சீச்சி! மானங்  கெ ட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை.
    “இதென்னடா இது! “என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?“ என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன? இதைப் போல மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது...
    ... சில தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜபக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்திசெலுத்தாவிட்டால் சிறைச்சாலையிலே போடுவோம என்றம் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.
    அந்த அரசுபோலேதான், ஸ்தீரிகள் மீது புருஷர் செய்யும் “கட்டாய ஆட்சியும்“ என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும்.    கட்டாயப்படுத்தி, என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?“
    இப்படி பாரதி எழுதிச் செல்லும்போது அவருக்குக் கற்பின் மீது நம்பிக்கை போய்விட்டது. கற்பு என்பது கதைக்கப்படும் பொருள் என்று அவர் கருதுவதாக எவரும் எண்ணிவிடக்கூடாது.
    புதுமைப்பெண் பாடலில்
    குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்“ என்றும் “தமிழ்நாட்டு மாதருக்கு“ கட்டுரையில்
“தமிழ்நாட்டு மாதருக்கு மட்டுமேயன்றி உலகத்து நாகரீக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச்சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரீ எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும்“ என்று எழுதினார்.
    கற்பு என்பது உன்னத மனித தரிசனம் என்று நிலைநாட்டிய பாரதி அதைக் காக்க வேண்டிய பொறுப்பினை ஆணுக்கும் பங்கிட்டு வைத்தார்.
    அறிவு கொண்ட மனித வுயிர்களை
    அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்
    நெறிகள் யாவினு மேம்பட்டு மானிடர்
    நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே
    சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள்
    தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
என்று புதுமைப்பெண் பாடலில் அவள் வாயால் புதிய நீதி கூறவைத்தார்.
    கற்பு என்ற பெயரில் பெண்களே சில மூடப்பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வதையும் பாரதி எடுத்துக் காட்டத் தவறவில்லை. “தமிழ்நாட்டு மாதருக்கு“ கட்டுரையில்
    “குழந்தைப் பிராய முதலாகவே செவிகளில் மிகவும் கனமான நகைகளைத் தொங்கவிட்டுத் தோள் வரையிலும், சில சமயங்களில் மார்பு வரையிலும், காது வளர்க்கும் வினோதமான ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பல பகுதியாரிடம் காணப்படுகிறது.
    கற்பு எங்ஙனம் ஸ்வதர்மமோ  அதுபோலவே காது வளர்ப்பதும் ஸ்வதர்ம
மென்று அந்த ஏழை ஸ்திரீகள் அறியாமையாலே நினைக்கிறார்கள்.
    குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழங்கங்களாயினும் அவற்றுள் முக்கியத் தன்மையுடையன எவை. இல்லாதன எவை என்ற ஞானம் தம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின் அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதன மில்லை”.
    பெண் மூட நம்பிக்கையைச் சுட்டிக் காட்டிய பாரதி அதற்குக் காரணமும்  காட்டினார்.
    அடுத்து அதிகாரமின்றி ஆணுக்கும் பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு உபாயமும் சொன்னார்.
    “ஸ்திரீகள், புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும்.    நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று அரசனாயினும் குருவாயினும் புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது.
    அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது
    அடுத்து பாரதி பெண்களுக்குத் தமது துணைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பரிபூரணமாக உண்டு என்று அனுமதிக்கிறார்.
    “வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”
என்று பெண்கள் விடுதலைக்கும்மியிலும்
    “ஸ்தீரிகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்தீரி அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி“ என்று தமிழ்நாட்டின் விழிப்பு கட்டுரையிலும் தெளிவாக அறிவித்தார்.
    பெண்களை அடிமைப்படுத்திய  கொடுமைவிதிகள். ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்ற ஓர் எண்ணம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தை வீட்டில் அவர்கள் காட்டிய வழக்கம், நல்ல விலைக்கு நாய் விற்பவர் அதனிடம் யோசனை கேட்காது போவது போல் பெண்களைக் கொல்லத் துணிவின்றி அவர்களை அந்த நாய் நிலையிலே கட்டி வைத்த அகந்தை, இவையாவும் ஆண்கள் செய்து வைத்த சட்டத்தினால் தான் என்பது பாரதி பார்வை.
    இதை தமிழ்நாட்டு நாகரீகம் கட்டுரையில் அவர் குறிப்பிட்டார்.
    உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம் நீதி ஆண் மக்களாலேயே விதிக்கப்பட்டது“ அதை அப்படியே விட்டு வைக்கக் கூடாது.
    சட்டம் இயற்றும் உரிமை ஆணுக்கு மட்டும் சொந்தமில்லை என்று பாரதி கொடுத்த போர்க்குரல் தான் பின்வரும் வரிகள்.
    “பட்டங் களாள்வது ஞ் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
    எட்டு மறிவினி லாணுக்கிங் கேபெண்
    இளைப்பிலை காணென்று கும்மியடி
    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோ மென்று கும்மியடி
    சாதம் படைக்கவுஞ் செய்திடு வோந்  தெய்வச்
    சாதி படைக்கவுஞ் செய்திடுவோம்”
பெண்களின் அந்த மனத் துணிவிற்கு கல்வி தவிர வேறு வழியில்லை என்று உய்த்துணர்ந்த மகாகவி “தமிழ் நாட்டு மாதருக்கு கட்டுரையிலே -
    “ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்கு பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண் மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள்“ என்றார்.
    தமிழ்ப் பெண்களின் இயற்கை அறிவின்மீது பாரதிக்கு இணையிலாத நம்பிக்கை. அதைப்பற்றி அவர் அதே கட்டுரையில் குறிப்பிடும் போது
    “இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கை யறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம்.
    ஔவையார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா?    சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின் தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்துவிடுவார்கள்.
    அறிவு திறந்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதிஸு லபமாய் விடும்; எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள் தமிழ்ச் சகோதிரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள்“
    ஔவையார் மீது பாரதிக்கு மஹாபக்தி, தமிழ்ப் பெண்மையின் அறிவுக் கூர்மைக்கும் கடமைப் பற்றுதலுக்கும் வடிவமாகத் திகழ்ந்த அவரைப் பற்றி தமிழ்நாட்டு நாகரிகம் கட்டுரையில்
    கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லாருக்கும் குறள், நாலடியார் முதலிய நூல்களைக் காட்டிலும் ஔவையின் நூல்களில் அகப் பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன.
    “ஔவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ்நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப் பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார்.
    மேலும் அவர் சிறந்த ஆத்ம ஞானி ;  யோக சித்தியால் உடம்பை முதுமை, நோவு சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.
    ... கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம்மனைவரிலும் மிகச் சிறந்தவராக்க் கருதப்பட்ட ஔவைப் பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக் கூடும்.
    “தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?“ ஔவையின் நூல்களை இழந்து விடப் பிரியமா?” என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின் -
    “ மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்“ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
    “...ஒள்வையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக் கூடிய ஒர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன் பிறக்கவில்லை? இதினின்றும்  ஆண் மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத் திறமையிலே குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ ? என்று போதிக்கக்  கூடிய நிலைமையிலிருக்கிறார்கள் (பெண்கள்) - என்ற எழுதினார்.
    பெண்ணை ஆண் அடிமை செய்ய அனுமதிக்கக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும்.
எந்த வழியில்?
இக்கேள்விக்கு காந்தியடிகளின் சாத்வீக எதிர்ப்பையே பெண்கள் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் போர் முறையாக பாரதி சிபாரிசு செய்தார்.
    பாரதியின் குமாரி தங்கம்மாவால் புதுச்சேரியில் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப்பெற்ற பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது? என்ற கட்டுரையில் -
    “நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர்.
    இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர்  செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம் குருஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போலே, திகைக்கிறது.
    ஆண்மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது பற்றியே சாத்வீக எதிர்ப்பினால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன்.
    ...ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்-
    “நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே  தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதைவிட்டு வெளியேறவும் மாட்டேன்“ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும்.“
    பெண் அப்படி முரசறைந்து கூறிவிட்டுத் தன் பலவீனங்களை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அவள் கட்சி தோற்றுவிடும் என்பது பாரதிக்குப் புரிந்திருந்தது . அதை நாசூக்காக அதே கட்டுரையில் சுட்டிக் காட்டினார்.
    “இங்ஙனம் கூறும் தீரமான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வை ப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக் கூடாது.
    “பரிபூரண ஸமத்வ மில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழ மாட்டோம்” என்று சொல்வதனால் நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக் கூடிய கொடுமைகள் எத்தனையோவா யினும்,    எத்தன்மை யுடையவையாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும் நாம் அஞ்சக் கூடாது!“
    விவாகரத்து குறித்து பாரதிக்கு முழு மனதான ஒப்புதல் இல்லை....
    நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் கட்டுரையில் விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவசரப்பட வேண்டியதில்லை. பொறுமையை உபயோகப்படுத்தி விவாகக்கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம்அதற்குரிய ஏற்பாடுகள் செய்வோம்“ என்றார்.
    எனினும் அந்த விவாகரத்து உரிமை முற்றிலும் அவர்களுக்கு இல்லையென்று ஒதுக்கிவிடுதல் தீங்கு என்று புரிந்து வைத்திருந்தார்.
    பெண் விடுதலை கட்டுரையில்
    விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவனை அவமானப்படுத்தக் கூடாது“ என்று ஒரு விதி வகுக்கிறது.
Free Sex  எனப்படும் விடுதலைக் காதல் பற்றி பாரதிக்குக் கடும் விமர்சனம் உண்டு.
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலா மென்பார் அன்னோர்
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தாற் கலந்தன்பு பிரிந்து விட்டால்
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டு மென்பார்
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்!
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போ லாண்மக்கள் புவியின்மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்

இங்கே கற்பைப் பற்றிய உள்ளுணர்வு பாரதிக்கு மீண்டும் தோன்றுகிறது.
ஆணெல்லாங் கற்பைவிட்டு தவறு செய்தால்
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணமற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரையுந்தா னெரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காணுகின்ற காட்சியெலா மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே!
விதவைத் திருமணம் பற்றி ஆணியடித்தது போன்ற கருத்து பாரதிக்கு உண்டு.
    “இந்தியாவில் விதவைகளின் பரிதாப நிலை“ என்ற கட்டுரையில்
“எல்லா விதவைகளும் மறுமணம் செய்துகொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக்கு செய்யப்படும் அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்குத் தகுந்த மாற்று மற்றப் பேச்செல்லாம் வீண் கதை” என்கிறார்.
    பெண்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டால் பெரிய பிரளயம் ஒன்றும் நேர்ந்து விடாது என்பதைக் குறித்து எழுதும்போது பாரதியின் பேனாமுனை பரிகாசத்தின் உச்சத்திற்கே சென்று குலுங்கக்  குலுங்கச் சிரிக்க வைக்கிறது.
    பெண் விடுதலை (2) கட்டுரையில் -
“இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண் கல்வி ஏற்பட்டால் மார் ஒழுக்கத்தில் தவறிவிடுவார்களென்று ஒரு கருத்து தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.
    அண்டச்சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்ததால் ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து, பூமியின் முன்விழும் என்றும் வால் நக்ஷத்திரம் வகையராக்கள் எல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள்.
    “மதறாஸ் மெயில்“ போன்ற ஆங்கிலேய ப் பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்ஜியம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள்.
    “ஓஹோ! ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரத்திரரை க் கொல்வார்கள். பிறகு ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள்.
    அப்பால், மஹாராஷ்டிரர்  தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தின்றுவிடுவார்கள்.
    பிறகு மலையாளிகள் தமிழ்ப்பார்ப்பாரையும் தமிழ்ப்பார்ப்பார் திராவிடரையும் சூர்ணமாக்கி விடுவார்கள் சூர்ணித்த திராவிடர் வங்காளி எலும்புகளை மாலையாகப் புனைவர்“ என்று சொல்லிப் பெருமூச்சு விடுவார்”
    பெண் விடுதலைக்கு பாரதி வைத்த வாதம் மிகவும் எளிமையானது தர்க்கமயமானது பகுத்தறிவு பூர்வமானது. தவிர்க்கவோ சாக்குப்போக்கு சொல்லவோ இடம் தராதது.
    தாய்க்குலமே லிங்கேயோர் தெய்வ முண்டோ?
    தாய்பெண்ணே யல்லளோ!
தமக்கை, தங்கை வாய்க்கும் பெண் மகவெல்லாம்  பெண்ணே யன்றோ!
மனைவி யொருத் தியையடிப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
தாயைப் போ லேபிள்ளை யென்று முன்னோர்
வாக்குளதன் றோ? பெண்மை யடிமை யுற்றால்
மக்களெலா மடிமையுறல் வியப்பொன்றாமோ?
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறரா மென்பான்;
நாட்டினிலே நாடொறு முயன்றிடுவா னலிந்து சாவான்
பெண்களின் உரிமக்கு துந்துபி முழக்கியவர் மகாகவி அதன் பல்வேறு விகாசங்களை அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் அலசி “விளக்கிலே திரி நன்கு சமைத்தவர்“ என்பதில் ஐயமில்லை.